Skip navigation.

வாழ்க தமிழ்!வளர்க அதன் சிறப்பு!

வீழ்வது நாமாயினும் வெல்வது நம் தமிழ் மொழியாக இருக்கட்டும்!

Sunday, 8. November 2009

மந்திரங்களை எப்படி ஜபிக்கவேண்டும்?+ காயத்ரிமந்திரத்தின் சிறப்பு

, ,

மந்திரங்களை எப்படி ஜபிக்கவேண்டும்?+ காயத்ரிமந்திரத்தின் சிறப்பு

காயத்ரி மந்திரமும் அதன் மகிமைகளும்

சாதாரண வசவுவார்த்தைகளுக்கே வலிமை உண்டு.

அதை விட வாழ்க வளமுடன்,வாழ்க வையகம்; ஓம் சாந்தி, ஓம் சக்தி, ஜெய்ஸ்ரீராம் .. போன்ற வார்த்தைகள் ஒரு விதத்தில் மந்திரங்களே! இதற்கு வசவுவார்த்தைகளை விட வலிமை அதிகம்.
இவற்றை விட தேவாரம்,திருவாசகம்,கந்த சஷ்டிகவசம் முதலான பக்திப் பாடல்களுக்கு வலிமை அதிகம்.

இவற்றிற்குச் சமமாக சமஸ்கிருதவார்த்தைகளுக்கு வலிமை உள்ளன.

சமஸ்கிருத வார்த்தைகளை விட சமஸ்கிருத மந்திரங்களுக்கு ஜபிக்கும் போது வலிமை அதிகம்.

சமஸ்கிருத மந்திரங்களை விடவும் சமஸ்கிருத காயத்ரி மந்திரங்களுக்கு வலிமை அதிகம்.ஒவ்வொரு கடவுளுக்கும் காயத்ரி மந்திரங்கள் உண்டு.உதாரணமாக கணபதி காயத்ரி மந்திரமானது விநாயகக் கடவுளின் ஒலி வடிவமாகும்.
கடவுள்களின் காயத்ரிமந்திரங்களை ஜபிக்கும் போது உரிய கடவுளின் காதில் நாம் நமது கோரிக்கைகளை வைக்கிறோம் என்று அர்த்தம்.
கடவுளரின் காயத்ரிமந்திரங்களை 4,00,000 முறை சொன்னால் உரிய கடவுள் இந்த கலியுகத்திலும் ஜபிப்பவருக்கு நேரில் காட்சியப்பார்.இது அனுபவ உண்மை.
சமஸ்கிருத காயத்ரிமந்திரங்களை விட காயத்ரி மந்திரமே அதிக வலிமை மிக்கது.இந்த உலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கு உயிர் தருவது காயத்ரி மந்திரமே!
இந்த காயத்ரி மந்திரத்தை பூமிக்கு-கொண்டுவந்தவர் பிராமணர் அல்ல.ஒரு ஷத்திரியர்.அவர் பிரம்மரிஷி பட்டம் பெற்ற விஸ்வாமித்ரர் அவர்கள்.
இந்த காயத்ரி மந்திரத்தைக் கொண்டு புதிய பிரபஞ்சத்தையே படைத்தவர்.பூமியிலிருந்து தெற்குப் பகுதியில் உள்ள புதிய நட்சத்திரங்கள் விஸ்வாமித்ர மகரிஷியால் படைக்கப்பட்டவை.நவீன வானியல் விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் மற்ற பகுதியில் உள்ள நட்சத்திரங்களை விட தெற்குப் பகுதி நட்சத்திரங்கள் வயது குறைந்தவை என மதிப்பிட்டுள்ளனர்.
இவ்வளவு சிறப்பு மிக்க காயத்ரி மந்திரத்தைத் தான் பிராமணர்கள் சந்தியாவந்தனம் செய்ய ஜபித்து வருகிறார்கள்.
காயத்ரி தேவி சூரியமண்டலத்தின் மையப் பகுதியில் ஐந்து முகங்களுடன் அமர்ந்து ஜபித்துக் கொண்டு இருக்கிறாள்.அம்பாள் உபாசகர்கள் பின்வரும் காயத்ரியை
ஜபித்துவர வாழ்க்கையில் செய்த பாவங்கள் கரைந்துவிடும்.
ஓம் பூ: புவ; ஸ்வ; தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹீ
த்யோயோன: ப்ரசோதயாத்
இதுவே அந்த காயத்ரி மந்திரம்.இந்த மந்திரத்தில் : என்பது ஹ என்ற ஒலியைத்தரும். உதாரணமாக பூ: என்பதை பூஹ் என்று ஜபிக்க வேண்டும்.

பூமிக்கு மேல் உள்ள வானில் குறிப்பிட்ட கிலோ மீட்டர்கள் உயரத்தில் இது போன்ற மந்த்ரங்கள் நிரம்பிய வான்பகுதி உள்ளது.யார் தவம் இருக்கிறார்களோ அவர்களுக்கு அங்கிருந்து மந்திரம் கிடைக்கும்.
ஒரு மந்திரத்தை ஒருமுறை மனதிற்குள்-வீட்டில் அமர்ந்து ஜபித்தால் 10 முறை சொன்னதற்கான பலன் கிடைக்கும்.
அதே மந்திரத்தை கருங்கல்லால் கட்டப்பட்ட பழமையான கோவிலில் அமர்ந்து ஒருமுறை ஜபித்தால் 1000முறை ஜபித்ததற்கான பலன் கிடைக்கும்.
மலைமீதுள்ள கோவில் மீது ஒருமுறை ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால் 1 கோடி தடவை ஜபித்தற்கான பலன் கிடைக்கும்.
கடலோரம் உள்ள கோவில் அல்லது கடலில் இடுப்பளவு நீரில் நின்றவாறு ஒரு முறை ஜபித்தால் 2 கோடி தடவை ஜபித்ததற்கான பலன் கிடைக்கும்.
இவை-இந்த எண்ணிக்கையானது சாதாரண நாட்களில் ஜபித்தால் தான்.பவுர்ணமி,அமாவாசை,தமிழ் வருடப்பிறப்பு,சூரிய-அல்லது-சந்திர கிரகண நேரங்களில் ஜபித்தால் மேலே சொன்ன எண்ணிக்கை பெருக்கல் 100 கோடி தடவை ஜபித்தமைக்கான பலன் உண்டு.
எப்போதும் மந்திரங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே அமர்ந்து அல்லது நின்று ஜபிப்பது முக்கியம்.
தெற்கு நோக்கி ஜபிக்கக்கூடாது.
காயத்ரி மந்திரத்தை அம்பாள் சன்னதியில் அமர்ந்து ஜபித்தால் கிடைக்கும் பலன்கள் எல்லையற்றவை!!!
இவை அனைத்தும் அனுபத்திலும்,ஜோதிடப் பெரியோர்கள் கூறக்கேட்டும் தொகுக்கப்பட்டவை.


(Source: http://aanmigakkadal.blogspot.com/2009/01/blog-post_27.html)

தமிழ் மருத்துவத்தின் வரலாறு

, , , ...

தமிழிலும் இந்திய மொழிகளிலும் வெளிவந்த வரலாற்று நூல்களில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு குறிப்பிடப்படவில்லை. தமிழ் மருத்துவமும் அதன் வரலாறும் மறைக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது.

பழமையான தொடர்ந்த நாகரிக வரலாற்றினையுடைய மக்கள், தாங்கள் கற்றறிந்த வாழ்வியல் அங்கமான மருத்துவம் பற்றிய வரலாற்றை அறிய முற்படாமலும், அறிந்தனவற்றை வரலாற்று முறையில் எழுத முற்படாமலும் இருப்பதனால், ‘தமிழ் மருத்துவத்தின் வரலாறு' அறியப்படாமல் இருந்து வருகிறது.

வரலாறு

வரலாற்றில் இடம் பெறும் பொருளின் தோற்றம், தொடர்ச்சி' வளர்ச்சி, பரிணாமம்' முதிர்ந்த நிலை, தற்போதைய நிலை ஆகியவற்றைக் கண்டறிந்து உறுதிப்படுத்தி, அகப்புறச் சான்றுகளுடன் உரைத்திடுவது வரலாற்றின் வரைவிலக்கணமாகும்.

தமிழ் மருத்துவ வரலாறு

முற்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், அவற்றுக்குரிய மருத்துவத் தொடர்புகளைக் கொண்டு அகப்புறச் சான்றுகளுடன் மருத்துவ வரலாறு வரையப்படும்.

வரலாற்றின் தேவை

மருத்துவ வரலாறு வாழ்வியல் தொடர்புடையது என்பதாலும், அதன் வரலாற்றினால் மருத்துவத்தின் தொன்மை' நோய்களைக் கண்டறிந்து மருந்தளித்த முறைகள் தெரியவரும் என்பதாலும் எதிர்காலத்தில் வருகின்ற நோய்களிலிருந்து எந்தெந்த முறைகளை மேற்கொள்ளலாம் என்பதுடன் புதிய பரிமாணங்களில் மருத்துவத்தை வளர்த்துக் கொள்ளலாம். மேற்கொண்டு செய்ய வேண்டிய செயல் முறைகளிலும் தெளிவு பெற வழியேற்படும்.

வரலாற்றின் இன்றியமையாமை

உலகில் பல்வேறு முறை மருத்துவங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றினால் ஏற்படுகின்ற பக்க விளைவுகளைக் கண்டு அஞ்சி, மரபு வழி மருத்துவமே சாலச் சிறந்தது என உலக மருத்துவ அறிவியல்துறை சார்ந்த அறிஞர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்,இந்திய மருத்துவத்தின் வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தும் நிலையேற்பட்டிருக்கிறது என்பதுடன்' இந்திய மரபினரின் பழமையான மருத்துவத்தின் வரலாறு எழுத வேண்டியது இன்றியமையாத ஒன்றெனக் கருதும் கருத்து வலுவடைகிறது.

பயன்கள்

தமிழ் மருத்துவத்தின் வரலாறு எழுதப்பட்டால், மரபுவழி மருத்துவத்தின் மூலம் மரபு நோய்களும்' உலக மருத்துவத்தில் மருந்துகள் கண்டறியப் படாதிருக்கும் பல நோய்களும் எவ்வாறு குணப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன என்பன அறியக் கூடும்.

வரலாறு எழுது முறை

மருத்துவத்துக்கும் பழமையான இனத்துக்கும் உரிய தொடர்பு, மருத்துவத்தின் தேவையை உணர்ந்த முறை' மருத்துவம் கண்டறியப் பட்டதன் காரணம்' மருத்துவம் நிகழ்ந்த சூழல், மருத்துவத்தினால் உண்டான பாதுகாப்பு' மருத்துவத்துக்குப் பயன்பட்ட பொருள்கள். அவற்றைப் பற்றிய கல்வி போன்றவற்றை முறைப்படுத்தி எழுதுதல் வரலாறு எழுதும் முறையாகக் கருதப்படும்.

வரலாற்று மூலங்கள்

மருத்துவத்தின் வரலாறு எழுதுவதற்குச் சான்றுகள்- பழமையான புதைபொருள் ஆவணங்கள், கல்வெட்டுக் குறிப்புகள், தமிழகத்துடன் தொடர்புடைய பிறநாட்டுக் குறிப்புகள்' பழந்தமிழ்க் குடியினர் பற்றிய ஆய்வுகள்' இலக்கண இலக்கியம், சமயத்தின் நடைமுறைகள், வழிபாடுகள், பலியீடுகள்' மருத்துவம் சார்ந்த தொழில் முறைகள்' மரபுவழியினர், பண்பாட்டு நாகரிகக் குறிப்பேடுகள் எனப் பன்முனைச் சான்றுகளைக் கொண்டு எழுதப்படுவது முழுமையான வரலாறு எனக் கருதப்படும்.

தமிழ் மருத்துவத்தின் மூலங்கள்

தமிழ் மருத்துவத்தின் வரலாறு எழுதுவற்குச் சான்றுகள் எனக் கொள்ளப்பட்டவை. சிந்துவெளி நாகரிகத்தின் குறிப்புகள்' தொல் காப்பியம், சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை' பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், பாண்டியர் வரலாற்றுச் சாசனங்கள், சோழர்கால வரலாறு, சைவ மதத்தின் கோயில் தலமுறைகள் போன்றவை மூலங்களாகக் கொள்ளப்படுகின்றன.

நோக்கம்

தமிழில் மருத்துவ இலக்கியங்கள் எவை என்பதைக் கண்டறிவதே ஆய்வு நோக்கமாகக் கொள்ளப்பட்டாலும், வரலாறு என்பதன் ஆரம்பநிலையாகக் கொண்டு மருத்துவத்தின் வரலாறு எழுதும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இம்முயற்சி, இதன் தொடர்ச்சியாகப் பின்னாளில் ஆய்வு மேற்கொள்வோர்க்குத் துணையாக இருப்பதுடன் வழிகாட்டலாகவும் அமையும்.

ஆய்வின் எல்லை

தமிழ் மருத்துவத்தின் வரலாறு என்னும் இவ்வியலில், சங்க காலந் தொடங்கி, யூகி என்னும் மருத்துவச் சித்தர் காலம் வரை' கிடைக்கின்ற குறிப்புகளைக் கொண்டு மருத்துவ வரலாறு ஆராயப்படுகிறது.

இயல் அமைப்பு

தமிழ் மருத்துவத்தின் வரலாறு என்னும் இப்பகுதியில், சங்க இலக்கியங்களில் காணப்படும் மருத்துவம் தொடர்பான குறிப்புகளைத் தொகுத்து, மருந்து' மருந்துப் பொருள், மருத்துவன், மருத்துவம்' நோய், நோயாளி' நோயில்லா நெறி, உணவே மருந்து' மருந்தே உணவு, உணவுப் பொருள்' அறுசுவை, மருத்துவக் கோட்பாடு' பஞ்சபூதங்களின் பரிணாமம் போன்ற தலைப்புகளில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு ஆராயப்படுகிறது.

பண்டைக்காலத் தமிழகத்தில் மருந்து

பண்டைக்காலத் திராவிட மக்களாகிய தமிழர்கள், மருந்தையும் மருந்துப் பொருளையும் பயன்படுத்துவதில் வளர்ச்சியடைந்த நிலையில் சிறந்து காணப்பட்டார்கள் என்பதற்கு, சிந்துவெளி நாகரிகம் பற்றிய அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்கள் சான்றாக அமைகின்றன. இன்றைய தமிழ் மருத்துவர்களும் ஆயுர்வேத மருத்துவர் களும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகின்ற சிலாசித்து' மான்கொம்பு, பவழம்' தாளகம் போன்ற மருந்துப் பொருள்கள் அங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால், வேதகாலத்திற்கும் முன்பாகவே பழந்திராவிட மருத்துவம், இந்தியா முழுவதும் பரவி இருந்திருக்கிறது. அது பின்னாளில், மொழி, இடம், கொள்கை ஆகியவற்றிற் கேற்பப் பிரிந்து சித்த மருத்துவம், ஆயுர்வேதம் என இரண்டு நிலைகளில் வளர்ந்தது 1என்பர்.

அறுவை மருத்துவக் கருவி

புதை பொருள் அகழாய்வு ஆராய்ச்சியின்படி, சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்திராவிட மக்கள், அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர் 2 என்பது தெரியவருகிறது. அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்தினால்' அது பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்னும் அறிவியல் உண்மையைப் பண்டைய தமிழர் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகிறது.

புதைந்த நாகரிக இனத்து மக்கள் மருந்து, மருத்துவம்' அறுவை மருத்துவம் ஆகியவற்றை அறிந்தும் பயன்படுத்தியும் வந்திருந்தனர் என்பதை உறுதிப் படுத்துகிறது.

சிந்துவெளியும் வேம்பும்

வேம்பு' இக்காலத்தில் உயிர்க்கொல்லி மருந்தாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இதன் தொடக்கம், சிந்துவெளி நதிக்கரை நாகரிக மக்களிடத்துத் தொடங்கியது என்பது, ‘சிந்துவெளி மக்கள் வேப்பிலையைச் சிறந்த மருந்தாக இல்லங்கள் தோறும் பயன் படுத்தி வந்திருக்கின்றனர்,3 என்று அறிஞர் தீட்சித் கூறுவதிலிருந்து அறியமுடிகிறது.

சங்க இலக்கியங்களில் மருத்துவக் குறிப்புகள் வேம்பும் கடுக்காயும்

தமிழுக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் முதன்மையான தாகவும் தலை சிறந்ததாகவும் போற்றப் பெறுகின்ற

தொல்காப்பியத்துள் வேம்பும் கடுக்காயும் மருந்தாகப் பயன்படுத்தப் பட்டதைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் 4

எனவரும் செய்யுளுக்கு, ‘முற்பருவத்துக் கைத்துப் பிற்பருவத்து உறுதி பயக்கும் வேம்பும் கடுவும் போல வெய்யவாய சொல்லினைத் தடையின்றிப் பிற்பயக்குமெனக் கருதிப் பாது காத்து' எனப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரை வகுப்பர்.

வேம்புஅடையாளப் பூ

போர்க்களத்திற்குச் செல்லும் போர்வீரர்கள், மன்னர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள அடையாளப் பூக்களைத் தங்கள் தலையில் சூடிக்கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது.

பழந்தமிழ் வேந்தர்களான சேரன் பனம்பூவும், சோழன் ஆத்திப் பூவும்' பாண்டியன் வேப்பம் பூவும் சூடினர்.5 இம்மூன்று பூக்களும் பூவையர் சூடுகின்ற பூக்களல்ல. இப்பூக்கள் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக் கூடியனவும் அல்ல. கோடைக்காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியதும் மருந்துப் பொருளாகக் கூடியனவுமான இவற்றின் பயன் கருதியே மன்னர்கள் தங்களின் அடையாளப் பூக்களாகக் கொண்டிருக்கின்றனர். வேம்பம்பூவின் தொடர்புவாழ்க்கை' இலக்கியம் ஆகியவற்றிலும் இடங்கொண்டிருக்கிறது எனலாம்.

மனைகளில் வேம்பு

மனையில் உள்ளவர்கள் நோய்வாய்ப்பட்டாலோ, ஊரில் நோய்க்குறி காணப்பட்டாலோ, நோய்த் தடுப்பு முறையால் மனையையும் மனையைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மைப் படுத்துவர். அதைப் போல வெளிப்புறமிருந்து நோய்க்கிருமிகள் மனைக்குள் புகாமல் மனையைப் பாதுகாக்கும் பொருட்டு, மனையின் இறைப்பில் வேம்பின் இலைகளைக் கொத்துக் கொத்தாகச் செருகி வைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.

“தீங்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீ இ''6

இரவ மரத்தின் இலையுடன் வேம்பு மனைகளில் செருகப்பட்டதைக் குறிப்பிடக் காண்கிறோம்.

பெண் மருத்துவர்

போர்க்களத்திற்குச் சென்று, போரில் மார்பில் விழுப்புண் கொண்டு' புண்ணின் கடுப்புடன் மனை திரும்பும் வீரனுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவராக மனைப் பெண்டிர் இருந்திருக் கின்றனர்.

மருத்துவம் பார்க்கும் ஆண்பாலரை ‘மருத்துவர்' என்றும், பெண்பாலரை ‘மருத்துவி' என்றும் அழைக்கும் வழக்கம் இருந் திருக்கிறது.

‘ஆருயிர் மருத்துவி,7 என்று மணிமேகலையைச் சாத்தனார் குறிப்பிடுவதிலிருந்து' ஆண் பெண் இருபாலரும் மருத்துவக் கல்வியுடையவராக இருந்தனர் என்பது புலப்படும்.

இசை மருத்துவம்

நோயாளிக்கு நோயின் கடுமையைத் தணிக்க மருந்து, சுகாதாரமான சூழல், மணந்த மணம், இனிய இசை' அன்பான பணிவிடை ஆகியன தேவைப்படும். இது வளர்ந்த நாகரிகங் கொண்ட மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பழக்க வழக்க நடைமுறைகள். இவ்வாறான நடைமுறைகள் ஈராயிரம் ஆண்டின் முன்பே பழந்தமிழர் இல்லற ஒழுக்கங்களில் இரண்டறக் கலந்த ஒன்றாகக் காணப்படுகின்றன.

“ தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ8

என்னும் புறநானூற்றுச் செய்யுள், விழுப்புண் கொண்ட போர்வீரன் கிடத்தப் பட்டிருக்கும் மனையின் இறைப்பில் இரவம்' வேம்பு ஆகிய இலைகளைச் செருகி, மனையெங்கும் வெண்ணிறங் கொண்ட சிறுகடுகைத் தூவி' நறுமணம் கமழும் நறும்புகை புகைத்து' யாழினால் பல்லிசை இசைத்தும் ஆம்பல் என்னும் குழலை ஊதியும் காஞ்சிப் பண்ணைப் பாடியும் மருத்துவம் செய்தனர்.

வரிப்புலி மார்பைக் கிழித்தது போல், போர்க்களத்தில் ஏற்பட்ட விழுப்புண்ணை ஆற்றுதற்குக் கொடிச்சியர் இசைப்பாடலை இசைத்தனர்9 என்று மலைபடுகடாம் உரைக்கின்றது.

இதனால்' மனையிலுள்ள நோயாளரைப் பேணும் மருத்துவர்களாகப் பெண்டிரும் இருந்துள்ளனர் என்பதும், நோயின் கடுமையைப் போக்க நோய்த் தடுப்பும் சுகாதாரமும் தேவை என்பதும், அறியப் பட்டிருந்தது. இசையால் நோயைத் தணிக்கும் இசைமருத்துவம் (Musico therapy) என்னும் முறையும் நடைமுறையில் இருந்திருப்பதும் தெரியவருகிறது.

(Source: http://www.thamizhkkuil.net/tmi/tmi5b.html)

ஆதித் தமிழர் மெய்யியல்

, , ,

முதன்முதலாக உலக மாந்தர்க்கு - மாந்தத் தொகுதிகட்கு - அறிவியல், மெய்யியல் மற்றும் வாழ்வியல் கருத்துக்களைத் தகுந்த தருக்க நெறிகளோடு படைத்து வழங்கிய முதல் மாந்தன் குமரிக் கண்டத்துத் தமிழனே என்பதற்குப் பலவகைச் சான்றுகளும் மேற்கோள்களும் இருப்பினும் அவற்றைச் சரியான முன்வைப்பு முறையில் தெளிவு படுத்த வேண்டியது நமது கடனேயாம். எனவே, ஆதித் தமிழரின் மெய்யியல் கோட்பாடுகளையும், அவை வழங்கி வந்த பல்வேறு நிலத்திணையிலிருந்து இன்று அடைந்துள்ள திரிவாக்க வளர்ச்சி பற்றியும், குமுகத்தில் இன்று அக் கோட்பாட்டிற்கு உள்ள இயங்கியல் நிலை குறித்தும் குமுகத்தின் பார்வையில் இப்பழம் பெரும் மெய்யியல் அறிவு இன்றைக்கு எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பது பற்றியும், இன்றைய நிலையில் அக்கோட்பாடு பெற்றுள்ள வரைவு மற்றும் சமயப் போர்வைகள் குறித்தும் பண்டைய செய்திகளைத் தற்போதைய நடைமுறையுடன் சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பும் நமதேயாம்.
பழந்தமிழர் தம் வாழ்க்கையிலிருந்து மெய்யியல் கோட்பாடுகளை நாம் பின்வரும் பகுப்புக்களில் எடுத்துரைக்கலாம்.

1. இடத்திணையின் அடிப்படையில் முன்வைத்தல்.
2. மெய்யியல் படிநிலைகளின் அடிப்படையில் முன்வைத்தல்.
3. மருவிய வழக்கு முறையில் அயன்மைத் தோற்றம் பெற்றவை.
என்ற மூவகை முன்வைப்பில் காண்போம்.

முதலாவதாக,
இடத்திணையின் அடிப்படையில் பார்க்கின்ற போது தமிழர் தாம் வாழ்ந்த நிலத்தினைக் குறிஞ்சி முதல் பாலையீறாக ஐவகையாகப் பகுத்தனர்.
குறிஞ்சியில் முருகன் தெய்வமாகவும்,
முல்லையில் திருமால் தெய்வமாகவும்
மருதத்தில் இந்திரன் தெய்வமாகவும்
நெய்தலில் வருணன் தெய்வமாகவும்
பாலையில் கொற்றவை தெய்வமாகவும்
கருப்பொருள் இலக்கணம் கண்டனர். இன்றைக்குச் செம்மையாகப் பரவியிருக்கும் சிவனியமும், இந்து என்ற சமயமும் பண்டைத் தமிழ் இலக்கியங்களுள் யாண்டும் காணப் பெறாத ஒன்று.

குறிஞ்சி நிலத் தெய்வமாகக் கருதப்பட்ட முருகனுக்கு, இரண்டு மனைவியரும், வினாயகர் போன்ற உடன் பிறந்தோரும் இருந்ததாக சங்க இலக்கியச் சான்றுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கௌமார சமயம் எனும் நிலைக்கு முருக வழிபாடு வந்த பின் பிற்கால நாடக ஆசிரியர்களின் புலமையாலும், திரைத்துறையின் பக்தித் திரைப்படங்களாலும் குறிஞ்சி நில முருகனின் பொதுவான வடிவம் காண்போர் மயங்கும் வண்ணம் இவ்வாறு திரிக்கப் பட்டுள்ளது.

முல்லை நிலத்தின் திருமாலும் இரண்டு மனைவியர்களுடன்தான் பிற்காலத்தில் மாற்றம் செய்யப் பட்டார். ஆழ்வார்களும், சமயாசிரியர்களும் (திருமாலை உயர்த்திப் பேசுவதாக நினைத்து) அவர் செய்த்தாகப் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுக்களை அவர் மீது சுமத்தியதில் சங்க இலக்கியங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதனை இதன் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறோம்.

அடுத்ததாக, மருத நிலத்தின் இந்திரன் ஆசீவகச் சமயத்தின் ஒருபடிநிலைத் தெய்வம் (அதனைப் பின்னர்க் காண்போம்.) ஆனால் அந்த இலக்கியச் சான்று கொண்ட மருத நிலத் தெய்வத்தைக் கூடப் பின்னர் வந்த வந்தேறிக் கட்டுக் கதைகள் இழிவு செய்தன. அவரது உடல் முழுக்கவும் பாலுறுப்பு முளைத்ததாகக் கூறி நமது தமிழ்த் தெய்வத்தினை வஞ்சித்து ஏசியது, ஒரு காலத்தின் கொடுமை.

நெய்தல் நிலத்து வருணனோ ஒரு துணைத் தெய்வமாகப் படியிறக்கம் செய்யப்பட்டு திசைமக்கள் எண்மரில் ஒருவனாக முதன்மை யிழந்து போகச் செய்தனர்.

பாலை நிலத்துக் கொற்றவை நமது முன்னோர்களின் தாய்த் தெய்வ வழிபாட்டிற்கு மூல வடிவமானவள். ஆனால் அவளை அடங்காப் பிடாரி என்றும், தீமையே செய்யும் இரக்கமற்றவள் என்றும் வைதீக வந்தேறிக் கதைகள் உருவகப் படுத்தின. இவ்வாறாக இடத்திணையின் பிரிவாக நாம் காணும் ஐவகை நிலத்தின் தெய்வங்களையும் வைதீக வல்லடியாளர்கள் சிறுமைப் படுத்தி இழித்துக் காட்டியுள்ளனர். இவற்றை அப்படியே நாம் நம்பி ஏற்றுக் கொள்ளும் இழிநிலைக்கு நம்மையும் கொண்டு வந்து, அவ்வாறு அறிவிலியாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு ‘இந்துக்கள்’ என்றொரு புதுச்சொல் ஒன்றை நம் தலைமீது சுமத்தினர்.

ஒரு சமயம் என்று சொன்னால் அது தோன்றிய இடம், பல்வேறு மாற்றங்களுடன் அது வளர்ந்த நிலை, அதன் பதிவுகள், சமூக அடையாளங்கள் இன்னோரன்ன பிறவும் தான் அது ஒரு சமயம் என்பதனை வரையறுக்கும். ஆனால் இந்த இந்து என்கிற சமயத்துக்கு ஏதேனும் தோற்ற இடமும், காலமும் உண்டா? இதனைப் பின்பற்றிய மாந்தத் தொகுதியினர் யார் என்ற விவரமும் உண்டா? கூற முடியாது.

இவ்வாறு தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்ட தெய்வங்களைப் பாலியல் குற்றவாளிகளாக உருவகப் படுத்தும் வல்லடிச் சமயமே இந்து என்ற சமயம். இதன் மூலம் தமிழனின் தொன்மங்களைக் கொச்சைப் படுத்தினர். நமது விழுமியங்களைத் தின்றே வைதீகம் வளர்ந்தது. (அது மட்டுமின்றிச் சமய மறுப்பாளர்கள் கூடத் தாங்கள் விரும்பா விட்டாலும் ஏதோ ஒரு சமயப் பகுப்புக்குட் படுத்தப் படுகின்றனர். தான் தனக்கு விரும்பிய கருத்துக்கொப்பத் தனது சமயத்தினைத் தேர்ந்தெடுக்கும் அறிவு உரிமையும் சமய விடுதலையும் நமக்கு இன்றளவில் வழங்கப் படாமையையே அது காட்டுகிறது.)

நாம் ஒரு பெரிய அறிவியல் மரபில் வந்த பண்பாளர்கள். எனவே, வைதீக வந்தேறிகளின் பொய்க்கதைகளை நமது தருக்க அறிவு ஏற்றுக் கொள்வதில்லை. இந்த இக்கட்டான சூழலில் நமது தொன்மையான மெய்யியல் கூறுகளை வந்தேறிச் சமயங்கள் விழுங்கி விட்டன அல்லது இருட்டடிப்புச் செய்தன. இத்தகு கையறு நிலையில் மெய்யியல் தருக்க முறைகளும் மறைந்தன. இத்தகையதோர் அறிவு மயக்க நிலையில் வைதீகத்தோடு தங்களைச் சமாதானப் படுத்திக் கொண்டு போக முடியாத பகுத்தறிவாளர்கள் மெய்யியலையே புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். இப்படி இறைமறுப்பாளர்களானவர்கள் கூடப் பழைய பண்பாட்டுக் கூறுகளுக்குப் புறம்பாக ஒருபோதும் நடப்பதில்லை, ஒழுக்கக் கேடுகளை ஆதரிப்பதில்லை என்பதிலிருந்தே நமது பண்பு நேர்மையினை வைதீகர்கள் ஒத்துக் கொண்டேயாக வேண்டும். மெய்யியலை ஆதரிப்போர் இறைவன் பெயரால் நல்லன செய்க என்பதும், நமது இறை மறுப்பாளர்கள் கடவுள் பெயரால் அல்லன செய்யற்க என்பதும் ஒரே கருத்தின் மறுதலை வடிவமே. இதிலிருந்தே நாம் மெய்யியலில் எந்த நிலையினை ஏற்றுக் கொண்டாலும் ஒரே சால்பினராக இருக்கிறோம் என்பது தெளிவாக விளங்கும்.

இவ்வாறு பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.

இரண்டாவதாகப் படிநிலை வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்கின்ற போது,
1. அறிவு வளர்ச்சியில் படிநிலைப் படியும்,
2. மெய்யியல் வளர்ச்சியில் படிநிலையிலும்
இருவகைப் பகுப்புகளில் ஆதித் தமிழரின் மெய்யியலை ஆய்வோம்.
முதலாவதாக அறிவு வளர்ச்சிப் படிநிலையில் துவக்கக் காலத்தில் தாய்த் தெய்வ வழிபாடும் குறிப்பிடத் தக்கது. தாயாரம்மாள் என்று பெயர் வைக்கும் முறையும் அண்மைக் காலம் வரையில் தொடர்ந்தது. “சப்த மாதாக்கள்” என்று கன்னியர் எழுவரின் வழிபாட்டு வழக்கம் இன்னமும் சில குடிகளிடையே உண்டு. ஏழு கன்னியரில் ஒருவரான அம்பிகா எனும் அம்பிகையே சமணத்தின் இயக்கியருள் ஒருவர். அம்பிகா எனும் அம்பிகையே பின்னாளில் சிவனியக் கலப்பில் சக்தி வழிபாட்டில் தனிப் பெரும் தெய்வமாக சிவனின் மனைவியாக மாற்றம் பெற்றாள்.

பழங்குடிகளுள் ஒரு பிரிவினரான இருளர் இன மக்கள் இன்னமும் கன்னியர் வழிபாடு செய்து வருகின்றனர். அவர்களிடையே ‘யட்சினி’ எனும் பெண் தெய்வம் குறிசொல்லும் வழிபாடும் உண்டு. இந்த யட்சினி எனும் தெய்வத்தின் பெயரால் இன்றும் பலர் குறி சொல்கின்றனர். இந்த யட்சினி யார் என்று பார்ப்போம்.

கணி நந்தாசிரியனுக்கு இயக்கன் என்றொரு பெயரும் உண்டு. மொழி முதல் வாரா எழுத்துக்களின் முன் எழுதப்படும் ‘இ’கரம் ஒலி பெறாது. எனவே இராமன் என எழுதி ராமன் என ஒலிப்பது போல் அவ்வழக்கிலேயே இயக்கன் ‘யக்கன்’ என ஒலிக்கப்படும் வழக்காயிற்று. ‘தக்கன்’ எனும் பெயர் ‘தட்சன்’ என மருவியது போல் யக்கன் எனும் பெயர் ‘யட்சன்’ என மருவியது. இந்த யட்சன், பிரம்மயட்சன் எனும் பெயர்கள் சமணத்தை விழுங்கிய சைனத்தில் இன்றும் உண்டு. யட்சன் என்பதற்கு இணையான பெண்பால் பெயர் ‘யட்சினி’யாகத் தருவிக்கப் பட்டது.

இதல்லாமலும் சிற்சில விடங்களில் தாய்த் தெய்வ வழிபாடு மூதாள் வழிபாடு என்ற பெயரில் இன்று வரை தொடர்வதைப் பல ஊர்களில் நேரில் கண்டு வருகிறோம். மூதாள் என்ற சொல் தாய்த் தெய்வத்தின் அன்பினையும், முதன்மையினையும் பகரும் சொல்லாகும். இருளாயி, கருப்பாயி போன்ற தாய்த் தெய்வ வழிபாடும் எண்ணத் தக்கது. சாக்தம் என்ற சக்தி வழிபாடு செல்வாக்குப் பெற்றபின் பழைய தாய்த் தெய்வ வழிபாடு தனது முதன்மையினை யிழந்தது. இன்றும் கூடப் பல ஊர்களில் அம்மன் திருவிழாக்கள் முடிந்த மறுநாளில் ஒரு களிமண்ணாலானதோர் பெண் உருவச் சிலையினை வைத்துப் பலவாறாக ஏசியும் திட்டியும் கொண்டுபோய் நீரில் கரைத்தழிப்பர். இதனை ‘மாதங்கி ஏசுதல்’ என்றும் அந்தச் சிலைக்கு மாதங்கி என்றும் பெயர் சொல்கின்றனர். இந்த மாதங்கி என்ற சொல் ஆசீவக மெய்யியலில் சிறப்பு பெற்ற பெண் தெய்வத்தின் பெயராகும். திருநிலைகளிலும் கால்காசுகளிலும் இருக்கும் பெண் உருவமே இந்த மாதங்கியாகும்.

பழைய ஆசீவக வழிபாட்டு மரபு செல்வாக்கிழந்து சக்தி வழிபாடு செல்வாக்குப் பெற்றதனையே இந்நிகழ்வு காட்டுகிறது. இத்தகு வழிபாடுகள் பெரும்பாலும் இலக்கியங்களில் பதிக்கப் பெறாதவை.

அடுத்ததாக மெய்யியலின் வளர்ச்சிப் படிநிலையில் காணும் போது பழந்தமிழரின் மெய்யியலில் ஆசீவக மரபே பெரிதும் முதன்மை பெறுகிறது.
எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம். கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும்.

பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர் வெள்ளந்தியாக வாழ்ந்த காலத்திலும், அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன. தன்னை விடவும் படிப்பறிவிலோ, பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும் ஏந்துகளும் இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான ஈவு பெறுவது?

அவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு ஒரு இடம் இருந்தது. அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை. அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப் பெயர் பெற்றது. (உணவு தருமிடம் உணவகம் எனவும், மழிக்குமிடம் மழிப்பகம் எனவும் வழங்குதல் போன்று.) இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக ஈவு தந்ததால் ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது. கைம்மாறு கருதாத செம்மையான கவி ‘ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது போல், இக்கற்படுக்கைகள் ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும், இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.

ஆசு+ஈவு+அகம்
ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,
ஈவு - தீர்வு
அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.
ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம்.
ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர்.
ஆசீவகத் துறவிகளின் வாழிடங்கள் பெரும்பாலும் கற்குகைகளே. இந்தத் துறவிகளின் துறவு வாழ்க்கையில் அறுவகையான நிறக் கோட்பாடு பின்பற்றப் பட்டது.

துவக்க நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வண்ணச் சீருடையும் படிப்படியாக மெய்யியலில் முன்னேறும் போதெல்லாம் வேறு வேறு வண்ணச் சீருடைகளும் அணிவர். ஒரு ஆசீவக அறிவர் பள்ளி பல நிலையிலுள்ள துறவு மாணவர்களை அவர்தம் சீருடையின் வண்ணத்தைக் கொண்டே அவரது மெய்யியல் படிநிலையினை அறிந்து கொள்ளலாம்.

இதில் முதலாவதாக வரையறுக்கப்படும் வண்ணம் கருப்பு வண்ணமாகும். இந்தக் கருப்பு வண்ண உடையணிந்தவர்கள் கரும் பிறப்பு நிலையில் உள்ளவராகக் கூறப் படுவர். இந்த நிலை மெய்யியலின் துவக்க நிலையாகும். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு உணவுப் பழக்கங்களிலும், துறவறப் பயிற்சிகளிலும் பெரிய பட்டறிதல் இல்லை. ஏனெனில் இதுதான் துவக்க நிலை. கரும் பிறப்பு நிலையைக் கடந்த பின் அதாவது அடிப்படை ஒழுக்கங்களையும் துவக்க நிலைப் பயிற்சிகளையும் செம்மையாகக் கற்றபின் கருநீல வண்ண உடையால் அடையாளப் படுத்தப் படுவர். அதன் பின்னர் அடுத்த படிநிலைக்கு உயர்த்தப்பட்டு அதற்கேற்ற வண்ண உடையால் அவர் அடையாளப் படுத்தப் படுவார்.

இவ்வாறு ஆறு படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே இறுதி நிலையான நல்வெள்ளை நிலைக்கு அவர் சென்று வீடுபேறடைவார். இவ்வாறு அறுவகை நிலையிலும், ஒவ்வொரு வண்ணத்திலும் மூவகைப்பட்ட படிநிலைகள் அதாவது 6 x 3 மொத்தம் 18 படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே அவர் வீடடைய முடியும் என்பது வரைவு.

ஆசீவக மெய்யியலை அறிய முற்படு முன் ஒருசில:
1. ஏற்கெனவே ஆசீவகம் பற்றி ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் யாவும் ஆசீவக எதிர்ப்பணியினராலும் பின்னர் வந்த வைதீக நஞ்சினாலும் இழித்துக் கூறப்பட்டு அவரவர் நூல்களில் பதிவு செய்யப்பட்ட மாற்றார் கூற்றுக்களே என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

2. ஆசீவகத்தின் தோற்றம், காலம் போன்றவற்றில் மயக்கம் ஏற்படக் காரணம் வார்த்தைப் புரட்டும், வரலாற்றுப் புரட்டுமே.

வார்த்தைப் புரட்டு

ஆசீவகத்தை அறிவு வழியிலும், அறிவியல் வழியிலும் நேர் கொள்ள இயலாத வைதீகச் சார்பு மற்றும் ஆசீவக எதிரணியினரால் ஆசீவக அடிப்படைக் கூறுகள் குறித்துத் தவறான பொருள் தரும்படிச் சொற்கள் திரிவாக்கம் செய்யப்பட்டன. எடுத்துக்காட்டாக ஊழ் என்பதற்கு ஆசீவகம் கூறும் பொருள் ‘இயற்கை நிகழ்வு’ என்பதே. அணுக்களின் புணர்வினாலும், பிரிவினாலும் (காலம், கருவி போன்றவற்றின் துணையினால்) ஏற்படும் இயற்கை மாற்றத்தையே இந்த ஊழ் எனும் சொல் குறிக்கும். (இவ்வூழ் பற்றிப் பின்னர்க் காணலாம்.)

ஆனால் எதிரணியினரோ ஆசீவகம் கூறும் ‘ஊழ்’ என்ற சொல்லுக்குப் பல பிறவிகளாகத் தொடர்ந்து வரும் பாவம், புண்ணியம் ஆகியவற்றின் தொகுப்பு எனத் திரித்துப் பொருள் கூறினர்.

இந்தப் பொருள் முரண்பாட்டால் ஆசீவகத்தின் ஊழ்க் கோட்பாட்டின் அடிப்படையே தகர்ந்து போகிறது.

அமணர் என்பது ஆசீவக மெய்யியலின் அடிப்படையில் அமைந்த தமிழ்ச் சொல்.
அமணர் = அம் + அணம் + அர்
அம் - ஊழ்கப் பயிற்சியில் உயிர்வளி மேலேறும் போது மேல்நோக்கி மேலண்ணத்தைக் கடக்கும் போது அம்மெனும் ஒலியை எழுப்பும் என்பது ஊழ்கக் கருத்து.

அணம் - ஊழ்கியின் மேலண்ணம் (அண்ணம் - அணம் என நின்றது.)
அர் - பலர்பால் சிறப்பு விகுதி
அம்மெனும் ஒலியைக் கொண்ட ஊழ்கம் பயிலும் மேலண்ணத்தினை உடையவர் எனும் பொருள் கொண்ட இச்சொல், அம்மணம் எனும் ஆடையின்மைக் குறிக்கும் சொல்லின் திரிவாக அம்மணர் எனச் சுட்டப் பட்டதும் வழுவே.

(அழகிய சிறந்த அண்ணத்தில் ஊழ்கப் பயிற்சி உடையவர் எனும் பொருள்படும் அண்ணர் எனும் சொல்லும் இதன் அடிப்படையில் எழுந்ததே. ஈற்றுப் போலியாக அண்ணல் எனவும் மருவி இத்தகு அறிவர் வாழ்ந்த இடங்கள் திரு அண்ணர் மலை, அண்ணல் மங்கலம் எனும் பெயர்களுடன் வழங்கப் பட்டு இன்று திருவண்ணாமலை, அண்ணமங்கலம் எனும் பெயர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விடங்களில் இன்றும் ஆசீவகப் பள்ளிகளின் எச்சங்கள் காணக் கிடக்கின்றன.)

அது போன்றே சூத்திரர் என்ற சொல்லும் தவறாகவே பொருள் சுட்டப் பட்டது. யாதெனில் எல்லாத் துறைகளிலும் எவ்வகைச் சிக்கல்களுக்கும் விடை காணும் நுட்பமான வழிமுறைகள் சூத்திரம் என வழங்கப்படும். இதன் அடிப்படையிலேயே இலக்கண நூற்பாக்களும் கணக்கியல் வழிமுறைகளும் சூத்திரம் என்ற சொல்லால் வழங்கப்படுவது நடைமுறையில் உள்ள ஒன்று. இந்த சூத்திர முறைகளை அறிந்தவர் எனும் பொருள் படும் சூத்திரர் என்ற சொல்லுக்கு இழிவானவர் என்ற பொருள் கற்பிக்கப் பட்டு தாழ்த்தப்பட்டனர். இந்த சூத்திரம் என்ற சொல் சூழ்ச்சி எனும் சொல்லின் வேரிலிருந்து சூழ் + திறம் > சூழ் + திரம் > சூழ்த்திரம் > சூத்திரம் என வருவிக்கப்பட்ட சொல்லாகும்.
சூழ் > விடையைச் சூழ்தல். பல்லாற்றானும் பட்டறிவாலும் தருக்க அறிவினாலும் விடையைச் சூழ்தல்.
திரம் > அவ்வாறு விடைகாணும் ஆற்றல். திறம் > திரம். மயங்கொலிப் பிழையால் வந்த மயக்கு வழூஉ.

அது போலவே, சமணம் வேறு; சைனம் வேறு. சமணம் ஆசீவக மரபில் கிளைத்தது. மூன்று நல்வெள்ளை நிலையினரால் நெறியாளப்பட்டது. அவர்களில் மூன்றாமவரான மற்கலியும், மகாவீரருமே ஒன்றாயிருந்தனர். அந்த நேரத்தில் மகாவீரருக்கும் மற்கலிக்குமிடையே ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் இருவரும் பிரிய நேர்ந்தது. தாய் மரபான ஆசீவகத்தில் உலகாய்தம், பொருளியல், மாந்த வாழ்வியல் போன்றவற்றிற்கான கருத்துகளுக்கு இடம் உண்டு. அதாவது குமுகத்தைப் புறக்கணித்துத் துறவி கூட வாழ இயலாது என்ற கருத்து ஆசீவகத்தினுடையது.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை
எனும் திருக்குறளும் இங்கு எண்ணத் தகும்.

மாறாக மகாவீரரோ துறவிக்கு உலகியல் பற்றிய சிந்தனை இருந்தால் துறவும் கை கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். துறவிகள் இல்லறத்தாருக்கு வழிகாட்டும் பொறுப்பாளர்களாக இருப்பதனை அவர் விரும்பவில்லை. துறவற ஒழுக்கக் கூறுகள் மட்டுமே தமக்குப் போதும் என்பது அவர் கருத்து. இக் கருத்து வேறுபாட்டால் ஆசீவக சமணத்தை விட்டு சைன சமயத்தை உருவாக்கினார்.

மூன்று ஐயனார்களைத் தவிர நல்வெள்ளை நிலையை அடைந்ததாக தமிழ் அறிவர்களால் யாரும் சுட்டப்படவில்லை. பின்னர் 23 திருத்தங்கரர் வரிசை கற்பிக்கப் பட்டதில் இன்றளவும் நமக்கு உடன்பாடில்லை. அது குறித்த ஆய்வுகள் தொடர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். சைனம் தனது மரபுக்கு வலிமை சேர்க்க ஆசீவக ஐயனார்களைச் சேர்த்துக் கொண்டதா என்பதே நம் ஐயம். ஒரு வேளை திருத்தங்கரர் மரபினை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், மகாவீரர் தனக்கெனத் தனிச் சமயத்தை உருவாக்கிய பின், அவருக்கு முன்பிருந்த திருத்தங்கரர்கள் 23 பேரும் சைனர்கள் என்று எப்படிக் கூற முடியும்? எள்ளுப் பேரனுக்குப் பிறந்த கொள்ளுப் பாட்டன் என்பது போலிருக்கிறதல்லவா இந்த வாதம்? சைனம் சமணத்திலிருந்து 23 திருதங்கரத் தலைமுறைகள் பிற்பட்டுத் தோன்றியது. எனவே இந்த 23 திருத்தங்கரர்களுக்கும் முரண்பட்ட சமயமே சைனம் என்பது தெளிவு. இந்த சைனம் பழைய கள்ளைத் திருடிப் புதிய மொந்தையில் வைத்த கதையாக சமணம் - சைனம் எனும் இரு சமயமும் ஒன்று என்பதான ஒரு மாயையை ஏற்படுத்தி, இன்று அந்தச் சமயத்தைப் பின்பற்றுவோர் கூடத் தாங்கள் சமணரா அன்றிச் சைனரா என்று கேட்டால் விழி பிதுங்கும் நிலையில் உள்ளனர்.

இந்த வார்த்தைப் புரட்டுகளுக்கும் மேலானதோர் வரலாற்றுப் புரட்டும் உண்டு. அதுதான் ஆசீவகத்தின் தோற்றக்காலம் பற்றிய கருத்து. 23 திருத்தங்கரர்களுக்கு அடுத்து வந்த மற்கலி மகாவீரரின் பிரிவுக்குப் பின் சமணத்தை ஆசீவகக் கருத்துகளின்று பிறழாமல் ஒரு சமய வரைவிற்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருக்கு முன்பே 23 திருத்தங்கரத் தலைமுற்களும், அதற்கும் முன்பே குமுக மரபு கொண்டதுமான ஆசீவகத்தை மற்கலிதான் உருவாக்கினார் என்பது தவறு என்று, சிந்தித்துப் பார்த்தால் விளங்கும். ஆசீவகத்தின் தோற்ற வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளி, அந்தப் பழைய வரலாற்றை மகாவீரரின் சைனத்திற்கு சேர்த்து விடும் வரலாற்றுப் பிழையே இது என்பது தெளிவு.

3. வைதீகம் வினைக்கோட்பாட்டையும், ஆசீவகம் வினைமறுப்புக் கோட்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டவை. இந்தக் கருத்தில் இன்றளவும் ஆசீவகம் நீர்த்துப் போகவில்லை. ஆனால் ஆசீவகர்கள் வினைக் கோட்பாட்டின் உடன்பாட்டாளர்கள் என்பதான வீண் புரளியும் உண்டு.
ஆசீவகத்தின் நிறக்கோட்பாட்டை மக்கள் தவறுதலாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே வைதீகம் வருணக் கோட்பாட்டைக் கொண்டு வந்தது. நிறம் என்பது வர்ணம் (வண்ணம்). எனவே வர்ணக் கோட்பாடு ஆசீவகத்தில் உண்டு என்று பேசியது. உண்மையில் ஆசீவகத்தில் பள்ளியில் சேர்க்கப்பட்ட பயிற்சியாளர் மேல்நிலை யடையும் வரை அறுவகை நிறத்தால் குறிக்கப்பட்டனர். அது அவர்களின் படிநிலை வளர்ச்சியைக் குறிப்பதே ஒழிய வேறில்லை. இன்றைய பள்ளிக் கூடங்களில் ஒரே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்க்கு ஒரு வண்ண உடையும் பதினோராம் வகுப்பு மாணவர்க்கு ஒரு வண்ண உடையும் விதிக்கப் படுவது போல ஒரு ஆசீவகப் பள்ளியில் உறையும் புதியவர், இயல் மாந்தர் போன்றோர் அங்குள்ளோரை வகைப் படுத்தி அடையாளங் காணவே இந்த நிறக் கோட்பாடு. மேலும் அவரவர் தகுதி நிலையினை அறியவும் இந்த நிறக் கோட்பாடு பயன்பட்டது. (இந்த அறிவர் மரபினால் உலகுக்கு அளிக்கப்பட்ட தற்காப்புக் கலையான கராத்தே பயிற்சியில் கச்சை அளிப்பதில் இன்னமும் இந்த நிறக் கோட்பாடு பின்பற்றப் படுவது கண்கூடு. ஆனால் நிறங்கள் மட்டும் திரிவாக்கம் பெற்றுள்ளன.) ஆனால் வைதீகமோ ஆடையின் சிறப்பு தெரியாதவர்களால் உருவாக்கப் பட்டதாகையால் மக்களின் தோலின் நிறத்தையே வகைப்படுத்திப் பிறக்கும் போதே பாகுபாடு செய்தனர்.

மேற்கூறிய குழப்பங்களைத் தள்ளி வைத்து விட்டு ஆசீவகத்தைப் பார்த்தால் மட்டுமே அது யானையாகத் தெரியும். இன்றேல் அது வெறுங் கல்லாகவே தெரியும்.

ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. துறவி கூட உழைத்தே உண்ண வேண்டும் என்பது ஆசீவகப் பொருளியல். வைதீகமோ பக்தன் ஆழ்வார், ஆச்சாரியர்களுக்குப் பணிவிடை செய்து படையலும் போட்டுக் கைகட்டி நிற்க வேண்டும் என்கிறது. நெய்யும், பருப்புமாகச் சாப்பிட்டு விட்டு உழைக்காமல் உட்கார்ந்திருந்தால் அவனது சிந்தனை மெய்யியலை நோக்கியா போகும்? மெய்யுடல் சார்ந்தல்லவா போகும்.

ஆசீவகத்தினர் அறுவகை நிறங்களால் வகைப்படுத்தப் பட்டனர். இந்த வகைப்பாடு அவரவர்தம் சிந்தனை, செயல், தகுதி, அறிவுநிலை, ஊழ்கப் பயிற்சி, மெய்யியல் அறிவு இவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆறு நிறங்களாவன:

1. கருமை & சாம்பல் - துவக்க நிலை
2. நீலம் - இரண்டாம் நிலை
3. பசுமை - மூன்றாம் நிலை
4. செம்மை - நான்காம் நிலை
5. மஞ்சள் - ஐந்தாம் நிலை
6. வெள்ளை - இறுதி நிலை
இந்த அறுவகை வண்ணத்திலும் மும்மூன்று படிநிலைகள் உண்டு. அவை:

1. துவக்க நிலை - இது வண்ண ஒழுக்கத்தின் துவக்க நிலை. இந்த வண்ணத்திற்குரிய ஒழுக்கங்களையும் கடமைகளையும் அறியத் துவங்கும் புகுநிலை மாணாக்கர் முதல் படிநிலையிலிருப்பவர்.

2. இடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செயல்படுத்தி முறைப்படுத்தி ஒழுகினாலும் ஐயந்தெளியா நிலையில் உள்ள மாணவர்கள்.

3. கடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செவ்வனே தேர்ந்து அடுத்த நிறத்திற்கு உயர்வு பெறத் தகுதியுடைய நிலை. ஐயந்திரிபற உணர்ந்தவர்.

ஒரே நிறத்தில் இந்த மூன்று படிநிலைகளையும் உணர்த்த படிநிலை உயர உயர நிறத்தின் அழுத்தம் குறைக்கப்படும்.

1. கரும்பிறப்பில் 1. கருமை முதல் படி
2. கருமை இரண்டாம் படி
3. சாம்பல் மூன்றாம் படி
2. நீலப் பிறப்பில் 1. கருநீலம் முதல் படி
2. நீலம் இரண்டாம் படி
3. வான்நிறம் மூன்றாம் படி
3. பசும் பிறப்பில் 1. அடர்பச்சை முதல் படி
2. பச்சை இரண்டாம் படி
3. வெளிர்பச்சை மூன்றாம் படி
4. செம்பிறப்பில் 1. செம்மை முதல் படி
2. இளம்சிவப்பு இரண்டாம் படி
3. காவி மூன்றாம் படி
5. மஞ்சள் பிறப்பில் 1. அடர் மஞ்சள் முதல் படி
2. இளமஞ்சள் இரண்டாம் படி
3. பொன்மை மூன்றாம் படி
6. வெண்பிறப்பில் வெண்மை மூன்று படிகளிலும்.
இவற்றைக் கடந்த பிறகே (மேலே கூறப்பட்ட 18 படிகளையும்) நல்வெள்ளை எனும் நிறமிலி நிலையினை அடைவர் என்பதே நிறக்கோட்பாடு. அதாவது கருமையிலிருந்து நல்வெள்ளை நிலை வரையிலும் தகுதி உயர உயர நிறத்தின் அடர்வு குறைவதனைக் காணலாம். அதாவது பயிற்சியாளரின் குறைகளும் குறையும். அவரது அறிவைச் சூழ்ந்துள்ள மாசு குறைவதனையே (அறியாமை இருள் நீங்குவதனை) இந்த நிற வேறுபாடு குறிக்கும்.
படிநிலை உயர உயர நிறம் குறையும். இதுவே ஊழ்கப் பயிற்சியிலும் 18 படிநிலைகளைக் கடந்த ஐயனாரை அடைவது எனும் கோட்பாடு. சேர நாட்டு ஐயனாரே தற்போது ஐயப்ப வழிபாட்டால் தொழப்படுகிறார். ஐயப்பன் பெயரால் செய்யும் ஐயனார் வழிபாட்டில் தற்போது சரியான குருமார்களின் வழிகாட்டல் இன்மையால், பிறழ நடத்தும் குளறுபடிகள் ஏராளம்.

இந்த வழிபாடு செய்ய மாலை அணிவோர் தொடர்ந்து 18 ஆண்டுகள் செல்வர். இதில் முதல் மூன்றாண்டுகளும் கருப்பு உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் நீல உடையினையும், அடுத்த மூன்றாண்டில் பச்சை உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் சிவப்பு உடையினையும் அதற்கடுத்த மூன்றாண்டுகளில் மஞ்சள் உடையினையும் இறுதி மூன்றாண்டில் ஒளிர் வெண்மை உடையினையும் அணிந்து நோன்பிருப்பர். 18ஆம் ஆண்டிறுதியில் தென்னை வைத்து நோன்பு முடிப்பர். இது ஆசீவக மரபின் ஐயனார் ஊழ்கத்தைத் தழுவிய ஒரு வழிபாடேயாகும். இதில் இறுதியில் கூறப்படும் தென்னை வைத்தல் எனும் நிகழ்வு தேங்காயின் உட்பருப்பு நல்வெள்ளை எனும் கருத்துப் படவே கையாளப் படுகிறது.
நல்வெள்ளை எனும் இறுதி நிலை நிறமிலி எனும் நிலையினைக் குறிக்கும்.

கருமையில் பிறவி துவங்கி அறியாமை இருளுடன் வாழ்வைத் துவங்கும் ஆசீவக மாணவன் தனது பயிற்சியினாலும் ஒழுக்கத்தினாலும் அறுநிறப் பதினெண் படி கடந்து நிறமிலி நிலையினை அடைவதே ‘வீடடைதல்’ எனப்படும். அப்படி ஒளியடைதலே ஆசீவக மெய்யியலின் நோக்கம். இந்த அறிவு மரபில் வந்த அறிவர்களுள் ஒருவரான வள்ளல் பெருமான் கூட ‘ஒளிதேகம்’ என்று குறிப்பிடுவதும் இந்த நல்வெண்மை நிலையையே. இந்த நிலையினை வீடடைதல் என்று சொன்னால், வைதீகம் கூறும் சொர்க்கம், நரகம் போன்றே ஆசீவகமும் கூறுகிறதோ எனும் ஐயம் எழக்கூடும். இந்த வீடடைதல் என்பது வைதீகர்களின் சொர்க்கப் புரட்டிலிருந்து எவ்வாறு வேறுபட்டு உயர்ந்து நிற்கிறது என்பதனை விளக்க ஊழ்கத்தை விளக்குவோம். ஊழ்கம் (யோகம்) எனும் சொல் ‘ஊழ்’ எனும் சொல்லினைக் கொண்டு கிளர்த்தலால் ஆசீவகம் கூறும் ஊழினை முதற்கண் விளக்குவாம்.

உழு எனும் சொல்லினடியாக ஊழ் எனும் சொல் கிளைத்தது. ‘விழு’ என்பது ‘வீழ்’ என வந்தது காண்க. ‘உழு’ என்ற சொல் உழுதல் (நிலத்தை) எனும் செயலைக் குறிக்கும்.

நிலத்தை உழுகின்ற போது ‘மண்’ எனும் பூதம் ‘நீர்’ எனும் பூதத்துடன் சேர்க்கப்பட்டு கதிரவன் ஒளிவெப்பம் எனும் ‘தீ’ பூதத்தின் முன்னிலையில் ‘வளி’ எனும் பூதம் மண்ணின் கண்ணறைகளில் சேமிக்கப்படுவதைக் குறிக்கும். இவ்வாறு உயிர்வளி சேமிக்கப்பட்டே பயிர்களுக்கு அளிக்கப்படுகிறது. உயிர்வளி சேமிக்கப்படும் போது மண் கண்ணறைகளில் உள்ள நீர் எனும் பூதம் தீ எனும் (கதிரவன் ஒளி) பூதத்தால் ஆவியாக்கப்பட்டு, அந்த வெற்றிடத்தில் வளி சேமிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிர்வளி சேமிக்கப்படுதல் உழு எனும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இந்த உழு, ஊழ் எனும் சொல்லின் அடிப்படையில் அமைந்த ஊழ்கம் எனும் பயிற்சி மாந்த உடலின் (நுண்ணிய) கண்ணறைகள் தோறும் உயிர்வளி சேமிக்கப் பயன்படுகிறது. இந்த உயிர்வளியினை அதிகம் பெறும் இயற்கைச் சூழல் அமைந்த சோலைகளிலும், மலைக் குகைகளிலுமே பெரும்பாலும் ஆசீவகப் பள்ளிகள் அமைந்திருந்தன.

இந்த ‘ஊழ்’ எனும் சொல்லிற்கு இயற்கையில் நிகழும் அணுவியல் மாற்றத் தொடர் நிகழ்வு என்பதே ஆசீவக விளக்கமாகும். இயற்கை நிகழ்வுகளின் ஒழுங்கமைவு என்பது விதிப்படியே நிகழும் ஆதலால் அணுவியம் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

பூதங்களில் ‘வெளி’ என்பது இடத்திணையாதலால் இது ஆசீவகக் கோட்பாடுகளில் தெரிநிலை பூதமாகக் கருதப் படவில்லை. (நிலம், நீர் வளி ஆகியவற்றுக்கு காட்சி அளவையும் நிறை அளவையும் உண்டு. தீக்கு காட்சி அளவை மட்டும் உண்டு. வெளிக்கு காட்சி அளவையும் நிறை அளவையும் இல்லை. எனவே இது தெரிநிலை பூதமாகக் கருதப்படவில்லை. ஆனால் மண், நீர், தீ, வளி ஆகியவை தெரிநிலை பூதமாகக் கருதப்படுகின்றன. இவற்றை ஆசீவகம் பின்வருமாறு வரிசைப் படுத்துகிறது.

1. மூலஅணு
2. விளைவணு

(Source: http://thamizmandram.blogspot.com/)

நவக்கிரக காயத்ரீ...

, ,

நவக்கிரஹ ஸ்லோகம்
சூரிய காயத்ரி
அஸ்வத் வஜாய வித்மஹே! பத்மஹஸ்தாய தீமஹி!
தந்நோ சூர்ய ப்ரசோதயாத் !!
சந்திர காயத்ரி
நிசாகராய வித்மஹே! கலாநாதாய தீமஹி!!
தந்நோ ஸ்சந்த்ர ப்ரசோதயாத்!!
அங்காரக காய்த்ரீ
அங்காரகாய வித்மஹே! பூமி பாலாய தீமஹி!1
தந்நோ குஜ ப்ரசோதயாத்!!
புத காயத்ரீ
ஆத்ரேயாய வித்மஹே! இந்து புத்ராய தீமஹி!!
தந்நோ புத ப்ரசோதயாத்!!
குரு காயத்ரி
ஆங்கீரஸாய வித்மஹே! சராசார்யாய தீமஹி!!
தந்நோ குரு ப்ரசோதயாத்!!
சுக்கிர காயத்ரி
ராஜதாபாய வித்மஹே! ப்ருகு கதாய தீமஹி!!
தந்நோ சுக்ர ப்ரசோதயாத்!!
சனி காயத்ரி
பங்கு பாதாய வித்மஹே! சூர்ய புத்ராயா தீமஹி!!
தந்நோமந்த ப்ரசோதயாத்!!
ராகு காயத்ரி
ஸூக தந்தாய வித்மஹே! உக்ரரூபாய தீமஹி!!
தந்நோ ராகு ப்ரசோதயாத்!!
கேது காயத்ரி
சிதர வர்ணாய வித்மஹே! ஸர்பரூபாய தீமஹி!!
தந்நோ கேது ப்ரசோதயாத்!!

அன்புள்ள ஆன்மீக அன்பர்களுக்கும், எங்கள் அன்பின் இதயத்துள் நிறைந்திருக்கும் சான்றோர்களுக்கும், நண்பர்களுக்கும், பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ மாணவியர்க்கும், தன் சீரிய பணியின் நிமித்தம் வருங்கால சமூகத்தை வழிநடத்தும் ஆசிரிய, மருத்துவ, வேத, ஜோதிட, விஞ்ஞானப் பணியாற்றும் மிக மிக முக்கிய அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.


சிற்சில இயற்கைச் சீற்றங்கள் நம்மை ஆட்டிப்படைக்கத் தான் இருக்கின்றன. எனவே மேற்குறித்த நவக்கிரக காயத்ரீ தினமும் சுத்தமாக இருந்து உச்சாடனம் செய்து வர எத்தகு தீமைகளும் விலகி நமக்கு நன்மை ஓன்றே கிடைக்கும் அருள் கிட்டுவதாக!.

(Source:- http://blog.tamil-astrology.com/2009/07/blog-post.html)
Download Opera, the fastest and most secure browser
December 2009
S M T W T F S
November 2009January 2010
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31