Skip navigation.

வாழ்க தமிழ்!வளர்க அதன் சிறப்பு!

வீழ்வது நாமாயினும் வெல்வது நம் தமிழ் மொழியாக இருக்கட்டும்!

கஷ்டங்களைக் காற்றோடு போக்கும் ஸ்தோத்திரங்கள்! (2)

, ,

மொழியைக் கடந்த துதிகள்

ஸ்தோத்திரங்களை சமஸ்கிருதத்தில் மட்டும் தான் சொல்ல வேண்டுமா? இல்லை, இல்லை, இல்லை என்று ஆணித்தரமாக நமது மகான்கள் கூறி உள்ளனர். மறைத்து வைக்கப்பட்டுள்ள வேத ரகசியங்களை நாலாயிரத் திவ்ய பிரபந்தமாக ஆழ்வார்கள் அருளிச் செய்துள்ளனர். இதைக் கேட்டவாறே தமிழ் பிரபந்தங்களுக்குப் பின்னே திருமால் உற்சவ மூர்த்தியாகச் செல்ல வேதியரால் ஓதப்படும் வேதம் அவனைத் தேடிப் பின்னே வருகிறது!

அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பதிகங்களைப் பாடி அருளிய போதே அதன் பலன்களைத் தெளிவாகப் பதிக இறுதியிலேயே சொல்லி விடுகின்றனர். ஒரு பெரிய அதிகாரத் தோரணையுடன் "அரசாள்வர், ஆணை நமதே!" என்று ஞானசம்பந்தர் சொல்லும்போது, நமக்கு பக்தியுடன் கூடிய வியப்பு மேலிடுகிறது. அருணகிரிநாதரோ முருகனின் சுட்டித்தனமான இயல்பை வெட்டவெளிச்சமாகத் தன் திருப்புகழில் கூறி விடுகிறார். "எண்டிசை திகழும் புகழ் கொண்டவன், வண்டமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்" (சருவும்படி எனத் தொடங்கும் திருப்புகழில்).

நவக்கிரக தோஷங்களைப் போக்க வல்லது ஞானசம்பந்தர் அருளிய 'வேயுறு தோளிபங்கன்' பதிகம். அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில் 'நாள் என் செயும், எனை நாடி வந்த கோள் என் செயும்' என்று பாடி முருக பக்தியில் நம்மைத் திடம் கொள்ளச் செய்கிறார். தசரதன் செய்த சனி ஸ்தோத்திரமோ சிறியதாக இருந்தாலும் சனீஸ்வரனைப் ப்ரீதி செய்து ஏராளமான நலன்களை வாரி வழங்கும் அதிக பலனைத் தருவதில் பெரிய ஸ்தோத்திரமாக விளங்குகிறது. இன்னும் வியாசர் அருளிய நவக்ரஹ ஸ்தோத்திரம், பீஷ்ம ஸ்தோத்திரம், துருவ ஸ்தோத்திரம், ப்ரஹ்லாத ஸ்தோத்திரம், கணேச ஸ்தோத்திரம் என இந்தப் பட்டியல் முடிவில்லாத ஒன்றாக நீள்கிறது.

சிவபிரானை நம் கடனாளியாக்க ஒரு வழி

பிறவாதிருக்க வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை மறவாதிருக்க வேண்டும் என்ற மனப்பாங்கை வளர்க்க அனுதினமும் அவரவர்க்கு விருப்பமான ஸ்தோத்திரங்களைச் சொல்வதே வெற்றிக்கு வித்திடும் அடிப்படையான வழியாகும்.

இறுதியாக ஒரு விஷயம்! அற்புதமான பூவுலகத்தில் மனித வாழ்க்கையைக் கொடுத்த சிவனையே நாம் கடனாளியாக்க முடியுமாம்! அதுவும் நீண்ட ஸ்தோத்திரங்களைக் கூடச் சொல்ல வேண்டாமாம். வழி என்ன பார்ப்போமா? விருத்தாசல புராணத்தில் வரும் செய்யுள் இது:-

"திருத்தமாய் ஒருத்தன் செவிப்புலன் கேட்பச்
சிவசிவ என்றிடில் பனை மேல்
இருத்திய இடி போல் எரிந்திடும் பாவம்
இறப்பொடு பிறப்பெல்லாம் இரியும்
ஒருத்தன் வாயார சிவ என முக்கால்
உரைத்திடில் ஓருரை அதற்குக்
கருத்தன் வாழ் பதத்தில் இருத்திடும், இரண்டும்
கடவுள் மேல் கடன்களாய் நிற்கும்"

சிவ சிவ சிவ என மூன்று தரம் சொன்னால் முதல் சிவ நமக்குச் சிவபதத்தைத் தந்து விடும், மீதி இரண்டு சிவ ஸ்துதியும் நமக்கு சிவன் தர வேண்டிய கடன்களாய் நிற்குமாம்! இதே போல ராம என்ற இரண்டெழுத்தின் அற்புத மகிமையைக் கம்பன் கூறக் கேட்போம்:-

"நன்மையும் செல்வமும் நாளு நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்"

துதிகளைச் செய்வோம்! துயரில்லா வாழ்வு பெறுவோம்!

ராம ராம ராம! சிவ சிவ சிவ!!

கஷ்டங்களைக் காற்றோடு போக்கும் ஸ்தோத்திரங்கள்!

, ,

பிரச்சினைகளைத் தீர்க்க எளிய வழி!

மனித வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை பிரச்சினைகள்! பிரச்சினைகளே இல்லாத ஒருவர் இனிமேல்தான் பிறக்க வேண்டும்! இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டு, சமாளித்து அவைகளைத் தூள்தூளாக்கிக் காற்றோடு பறக்கவிடுவதற்கான வழிகளை மகரிஷிகளும், தேவர்களும், ஞானிகளும் காட்டியுள்ளனர். யாகம் செய்தல் போன்ற கடினமான, அனைவராலும் எளிதில் செய்யமுடியாத வழிகள் போன்றவை ஒருபுறம் இருக்க, அனைவரும் எளிதில் பின்பற்றிச் சொல்லக்கூடிய ஏராளமான ஸ்தோத்திரங்களை அவர்கள் அருளிச் செய்துள்ளனர்.

ரிக்வேதம் உள்ளிட்ட நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ராமாயணம், மஹாபாரதம், பதினெட்டுப் புராணங்கள் ஆகியவற்றில் உள்ள நூற்றுக்கணக்கான ஸ்தோத்திரங்களில் விருப்பத்திற்கு உகந்தவற்றை ஓதினால் தீராத பிரச்சினைகளே இல்லை! இது தவிர ஆங்காங்கு பாரத தேசம் முழுவதும் அவ்வப்பொழுது அவதரித்துள்ள மகான்கள் இயற்றிய துதிகளும் அவர்களே கூறிய பலன்களைத் தப்பாது தரும்.

ஸ்தோத்திரம் என்றால் என்ன?

ஸ்துதி என்பது இறைவனின் குணபாவங்களை வியந்து, புகழ்ந்து பாடிப் பரவுவதாகும். சந்தமும் சொற்களும் துள்ளிக் குதித்து விளையாட ஸ்தோத்திரங்களின் பொருள் நம்மை உருக்கி உன்னத நிலைக்கு ஏற்றும். 'ஸ்து' என்ற தாதுவிலிருந்து தோன்றிய ஸ்தவம் மற்றும் ஸ்தோத்திரம் ஆகிய இரண்டிற்கும் சிறிய வேறுபாடு உள்ளது. ஸ்தோத்திரம் என்பது பலனைக் குறித்துச் செய்யப்பட்டு, அந்தப் பலனைப் பூர்வமாக முன்பு அடைந்தவர்களைப் போல அதைத் துதிப்பவர்களும் அடைய உதவுவதாகும். ஸ்தவம் என்பது பாவத்தைப் பிரதானமாகக் கொண்டதாகும். அது யாரைத் துதிப்பதற்காகச் செய்யப்பட்டதோ அந்தத் துதியையே பிரதானமாகக் கொண்டது.

ஸ்தோத்திரம் தரும் பலன்கள்

இப்படிப்பட்ட ஸ்தோத்திரம் அல்லது ஸ்தவம் (விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம், குமார ஸ்தவம் போன்ற எண்ணற்றவை) ஆகியவற்றின் மகிமை எல்லையற்றது. சொல்லுக்கு அப்பாற்பட்டது! பல பிரம்மாண்டமான விபத்துக்களிலிருந்தும் உயிர் காக்கும் வல்லமை பெற்றவை இவை! கஜேந்திரன் செய்த ஸ்துதியால் ஆதிமூலமே நேரில் தோன்றி கஜேந்திரனைக் காத்த கதையை நாடு அறியும். அதே போல உத்தரை காப்பாற்றப்பட்ட சம்பவமும் திரௌபதி செய்த ஸ்தோத்திரத்தால் அவள் மானம் காப்பாற்றப்பட்ட கதையும் பக்தர்கள் மனம் கவர்ந்தவை.

பீஷ்மரால் துதிக்கப்பட்ட விஷ்ணு சஹஸ்ரநாமம், அகஸ்தியரால் அருளப்பட்ட ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் போன்ற நூற்றுக்கணக்கான ஸ்தோத்திரங்களிலிருந்து அவரவர் மனோபாவத்திற்குத் தக்கபடியும், அவரவரது பிரச்சினைக்கு ஏற்றபடியும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடியும் உகந்தவற்றை எளிதில் தேர்ந்தெடுக்க முடியும். குந்தியின் மனோபாவம் சற்று விசித்திரமானது! குந்தி செய்த குந்தி ஸ்தோத்திரம், அவரைக் கஷ்டங்களிலிருந்து தொடர்ந்து காப்பாற்றி வந்த கிருஷ்ணனைக் கஷ்டமே வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டவில்லை. மாறாகத் தொடர்ந்து கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் வேண்டினார்! இந்த விபத்துக்கள் ஒவ்வொரு அடியிலும் அவருக்கு ஏற்பட வேண்டுமாம்! ஏன் இப்படி ஒரு விசித்திர ஆசை அவருக்கு? அப்படி விபத்து வந்தால் கிருஷ்ண தரிசனம் உடனே அவருக்குக் கிடைத்து விடுமாம்! பக்தையைக் காப்பாற்றப் பரந்தாமன் ஓடி வந்துதானே ஆக வேண்டும்! அதுமட்டுமின்றி அந்தத் தரிசனங்கள் அவரைப் பிறக்காமல் முக்தி அடையச் செய்து விடுமாம். கஷ்டங்களை ஒரேயடியாகத் தீர்க்க வழி கண்ட குந்தி ஸ்தோத்திரம் அவரைப் போன்றே அபூர்வமான மனநிலை உடையவர்களுக்கு உகந்த ஒன்று.

(விபத: சந்து ந: ஷச்சத்தத்ர ஜகத்குரோ)
பவதோ தர்சனம் யத்ஸ்யாத் அபுனர்பவ தர்சனம்

(ஓ, ஜகத்குரு! ஒவ்வொரு படியிலும் எப்போதும் எங்களுக்கு விபத்துக்கள் வரட்டும்! இதனால் உனது தரிசனம் கிடைக்கும். இது அடுத்த பிறவி அடையாதபடி எங்களைக் காக்கும்)

ஸ்தோத்திரத்தின் முதல் பலன் - அது மன அழுக்குகளை நீக்கி மனதைச் சுத்தமாக்கும். (விமலா மதிம்!). ஹ்ருதய சுத்தம் ஏற்படும். ஸ்தோத்திரம் செய்வதால் பாவ சுத்தி, ஹ்ருதய சுத்தி, க்ரியா சுத்தி (செயலில் தூய்மை), சரீர சுத்தி, குல சுத்தி, வாக்கு சுத்தி ஆகியவை ஏற்படுகின்றன. பாவ சுத்தியும் ஹ்ருதய சுத்தியும் மிகப் பவித்ரமானவை. துக்க நிவர்த்தி, எல்லையற்ற அமைதி, நிம்மதி, யாருக்கும் துன்பம் நினைக்காத மனம், இறைவனின் பாதாரவிந்தங்களில் ஈடுபாடு, பூஜையில் நம்பிக்கை, இகத்தில் சுகம் ஆகிய இவற்றோடு இறுதியாக மோட்சமும் தர வல்லவை ஸ்தோத்திரங்கள்!

ஸ்தோத்திரங்கள் எங்கே கிடைக்கும்? ராமகிருஷ்ண மிஷன் வெளியீடு, 476 ஸ்தோத்திரங்கள் அடங்கிய பழைய நூலான ஸ்தோத்திர ரத்னாஹர், கோரக்பூர்-கீதா பிரஸ் வெளியீடுகள் ஆகியவற்றில் முக்கிய ஸ்தோத்திரங்கள் உள்ளன. இவற்றால் உடனடிப் பலன் பெற முடியும்.

(Source: http://www.nilacharal.com/tamil/spiritual/slogam_329.asp)

மன அழுத்தத்தை எதிர்கொள்வது எப்படி?

, , ,

மன அழுத்தம் பல உடல் நோய்களைப் போல் ஒரு நோயே. ஆகையால் உடல் நோய்க்கு எவ்வாறு மருத்துவம் தேவையோ அதேபோல் மன அழுத்தத்திற்கும் தேவை. நமக்கு ஏற்பட்டிருப்பது மன அழுத்தம் தானா என முதலில் தெரிந்து கொள்ளுவது அவசியம்.

மன அழுத்தம் எனில் என்ன?

மிகவும் ஊறு விளைவிக்கக் கூடிய சூழ்நிலை அல்லது மனிதர்களுக்கு ஈடு கொடுக்கவேண்டிய நிலையில் உள்ள நாம், நம்மால் இனியும் ஈடுகொடுக்க முடியாது என்ற நிலை வரும்போது வெளிப்படுத்தும் பல அறிகுறிகள் தான் மனஅழுத்தம் எனப்படுகின்றது. அதாவது நாம் நம்முடைய உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஓர் இறுக்கமான நிலைக்கு வந்து விடுகிறோம். இதைத்தான் மன அழுத்தம் என்கின்றனர் உளவியலர்.

மன அழுத்தத்தின் காரணிகள்

1. சுற்றுச் சூழல்:

இன்றைய காலகட்டத்தில் நம்முடைய சுற்றுச்சூழல் நம்மிடம் நிறைய, மிக நிறைய எதிர்பார்க்கிறது. சூழலைச் சகித்துக் கொள்ள வேண்டும்... யாரிடமும் என்ன முறையிட்டும் பயனில்லை என்ற நிலை. நம்முடைய அரசும் சமூகமும் செயலற்று இருக்கும் நிலையே எங்கும் காணப்படுகிறது. எப்படியேனும் பொருளாதார ரீதியில், அந்தஸ்து ரீதியில், பதவி ரீதியில் பெரும் வெற்றிகளைக் குவித்துவிட வேண்டும் என்கிற கூட்டம் அதிகமாக சுற்றுச் சூழலையும் தனிமனித வாழ்வினையும் பெரிதும் பாதிக்கிறது. அரசாங்கங்கள் உண்மையாய் நடந்து கொள்வது என்பது காணக் கிடைக்காத ஒன்று ஆகிவிட்டது.

சமீபத்தில் இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது – தகவல் அறியும் சட்டம். சிறிது நாட்கள் மக்களுக்குப் பலனும் அளித்தது. ஆனால் அரசாங்க அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் பலவித சங்கடங்கள். பார்த்தது அரசு! கொண்டு வந்தது ஒரு சட்டத் திருத்தம்: அரசின் இரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் சில தகவல்களைக் கோரக்கூடாது. இப்போது எதைக் கேட்டாலும் இந்த விதியைக் காட்டி தகவல் தர இயலாது என உடனடிப் பதில் வருகிறது. ஒரு படிவம் தயாரித்து வைத்துக் கொள்ளாததுதான் குறை. செயலற்ற அரசுகள், மோசமான வானிலை, விழி பிதுங்கும் சாலைகள், இரைச்சல், நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாகக் கொழிக்கும் எல்லா வகையான அசுத்தங்கள். இவற்றிக்கிடையே மனிதர்கள் இந்த அளவுக்கு மன நலத்தோடு இருப்பது அதிசியமே எனலாம்.

2. வாழ்க்கைச் சிக்கல்கள்:

o பொருளாதாரச் சிக்கல்கள்,
o பாடசாலைக் கட்டணம் கட்டக் கடைசி நாள்,
o வேலையை முடிக்கக் கடைசி நாள்,
o நேர்முகம் நன்றாக நடக்கவேண்டுமே கடவுளே…
o இன்றைக்கு என்னுடைய தருகை நன்றாக நடக்கவேண்டுமே…
o என்னுடைய நண்பனோடு, மனவியோடு ஏற்பட்ட பிணக்கு எவ்வாறேனும் தீர வேண்டுமே…
o இன்று டீசல் வாங்குவதற்குக் காசு இல்லையே…
o ஒரு நாளில் எத்தனை எத்தனை வேலைகள் செய்வேன்...
o யாரிடம் சொல்லி அழுவேன்...
o வாழ்வின் சிக்கல்கள் அடிமுட்டளைக் கூட பெரும் வேதாந்தி ஆக்கி விடும்.

3. உடம்பு:

o இளம் சிறார்க்கு உடம்பில் வேகமாக ஏற்படும் வளர்ச்சி,
o மகளீருக்கு மாதவிடாய் நிற்கும் வேளையில் ஏற்படும் அவதி,
o வித விதமான நோய்கள், காயங்கள், மூப்பு
o உடற்பயிற்சி இன்மை,
o சத்துக் குறைந்த உணவு,
o தேவையான அளவு உறக்கம் இன்மை,
o உடம்பு துன்பங்களின் கொள்கலன் என்றால் மிகையாகாது.

4. எண்ணங்கள்:

o நம்முடைய மூளை நம்மைச் சுற்றி நடப்பனவற்றை எவ்வாறு புரிந்துகொள்ளுகிறது
o ஏனெனில் ஒரு காரணி தாக்கும்போது மூளை எடுக்கும் முடிவு அது அக்காரணியை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.
o பயன்தரும் முடிவு மனஅழுத்தத்தை இல்லாமலேயே செய்தல் கூடும்
o அல்லது பெரும் அளவு குறைக்கவாவது செய்யும்.

மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்:

உடல்:

* மிக அதிகமான மனஅழுத்தம் தொடரும் நிலையில் ஜீரண உறுப்புகள் பாதிப்பு, நரம்பு மண்டலங்கள் பாதிப்பு
* குடல் அழற்சி, என்ன வைத்தியம் செய்தாலும் சரியாகாத, தலைவலி, ஏன் மாரடைப்பு கூட ஏற்படலாம்.

உள்ளம்:

* வாழ்வில் உற்சாகம் இன்மை,
* முற்றிலும் எரிந்து முடிந்த கரித்துண்டு போல் உளசக்தி இல்லாமல் சோர்வடைதல்,
* பணியில் உற்சாகம் இன்மை,
* டிப்ரஸன் எனப்படும் மனவீழ்ச்சி.

மன அழுத்தம் எல்லோருக்கும் ஏற்படுமா ?

பொதுவாகக் கூறவேண்டுமெனில் எல்லோருக்கும் ஏற்படும் என்றே கூற வேண்டும். ஆனால் விதிவிலக்காக சிலபேர் இருக்கக் கூடும். சரித்திர நாயகர்களின் வரிசையும் நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கும் சிலரைப் பற்றிய நினைவும் நிழலாடுகிறதா?

எதிர் கொள்ளும் திறன்

பாதகமான நிகழ்வுகளை எதிர்கொள்ளும் திறன் நம் எல்லோருக்கும் உண்டு. பெரும் அளவுக்கு பாதகமான நிகழ்வுகளுக்கு இடையேயும் மன அழுத்தத்தில் விழாமல் நம்மைக் காப்பது இத்திறன் தான். அதாவது மன அழுத்தத்திற்கான காரணங்கள் இருந்த போதிலும் நாம் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதால் மனஅழுத்தம் ஏற்படுவது இல்லை.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாதவர் என்றார் வள்ளுவர்.

ஆனால் அளவுக்கு அதிகமான பிரச்சினைகள், எதிர்ப்புத் திறனையும் மீறிய சூழல் ஒருவருக்கு ஏற்படும்போது அவர் மன அழுத்தத்தில் வீழ்ந்து விடுகிறார். அப்படிப்பட்ட சமயத்தில் அவருடைய உற்றார்,உறவினர், சமுதாயம் அல்லது அரசாங்கம் உதவினால் அவர் உள நலம் மீளப்பெற்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.

எதிர்கொள்ளும் திறனும் நம்முடைய சிந்தனைப் போக்கும்

பலர் எளிய பிரச்சனைகளிலேயே துவண்டு விடுகிறார்களே இது ஏன்? நம்மில் பலர் பிரச்சனைகள் எதிர்கொள்ளும் அளவுக்கு இருக்கும் போதே மன அழுத்தத்தில் வீழ்ந்து விடுகிறோமே இது ஏன்?

பார்வைகள்

பிரச்சனைகளை மனிதர்கள் எவ்வாறு பார்க்கின்றனர்? இந்தப் பார்வையில் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறார்கள். பிரச்சனையை வாய்ப்பாக மாற்றிக் கொள்கிறார்கள் சிலர். பிரச்சனையினால் அடித்துச் செல்லப்படுகிறார்கள் பலர். இது ஏன்? பிரச்சனையைப் பார்க்கும் பார்வையில் உள்ள வேறுபாடுதான் காரணம் என்கின்றனர் உளவியலர். இந்தப் பார்வை வேறுபாட்டினால், சிந்தனைப் போக்கால், மனிதர்கள் பொருத்தமான எதிர்கொள்ளும் வழி, பொருத்தமற்ற எதிர்கொள்ளும் வழி என வெவ்வேறு வழிகளில் பயணித்து விடுகின்றனர்.

பார்வைகளில் சிந்தனைகளில் குறைபாடு ஏன் ஏற்படுகிறது?

ஆல்பர்ட் எல்லிஸ் என்ற உலகப்புகழ் பெற்ற உளவியல் அறிஞர் மூன்று முக்கியமான வகைக் குறைபாடுகள் நம்முடைய சிந்தனையிலும், நம்பிக்கையிலும் பார்வையிலும் உள்ளதால் நாம் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை எதிர்கொள்ளும் வழிகளில் குறைபாடுகள் ஏற்படுகின்றன என்கிறார்.

மூன்று முக்கியமான குறைபாடுகள எவை?

உதாரணமாக ஒருவருடைய மனைவியிடம் அவர் ஒரு குவளை நீர் தருமாறு ஹாலில் அமர்ந்து கொண்டு கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். காட்சிகள் மூன்று:

* மனைவி நான் வேலையாய் இருக்கிறேன் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் எனக்கூற கணவன் மறுமொழி கூறாமல் ஆனால் ஏதோ முனகிக்கொண்டு சென்று தானே எடுத்துக்கொள்வது ஒரு காட்சி.
* நீ எப்படி அவ்வாறு கூறலாயிற்று என்று சினம் கொள்வது ஒரு காட்சி,
* இந்த வீட்டில் எனக்கு எந்த மரியாதையும் கிடையாது எல்லாம் என் தலைவிதி என்பது மூன்றாவது காட்சி.

முதல் காட்சியில் கணவன் தன்னுடைய உத்தரவிற்கு மனைவி உடன் படாதபோது தண்ணீரைத் தானே எடுத்துக்கொள்ளும் நிலையில் அவர் மனதில் ஓடும் சிந்தனை: நாம் எதிர் பார்த்தது நடக்கவில்லை. வருத்தத்திற்கு உரியதுதான் ஆனாலும் மாற்று வழியைப் பார்ப்போம். இப்படிப்பட்ட சிந்தனை பொருத்தமான எதிர்கொள்ளும் வழியாகும். இதன் அடிப்படையில் உள்ள சிந்தனை என்ன? மற்றவர்கள் நாம் விரும்பியவாறு நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். பல வேளைகளில் அவ்வாறு நடப்பதில்லை. இது உலக இயற்கை, ஆகையினால் ஏற்றுக்கொள்வோம்.

இரண்டாவது காட்சியில் கணவனுடைய மனதில் தன்னுடய மனைவி தான் சொன்னதை எவ்வாறு மறுதலிக்கப் போனாள்? ஒரு போதும் இவளுடைய செயலை ஏற்றுக் கொள்ள மாட்டேன். இவளுடைய செயல் மிகவும் கீழ்மைப்படுத்த வேண்டியது, கண்டிக்கத்தக்கது என்ற சிந்தனை தோன்றுவதால் சினம் கொள்கிறார். இங்கு அடிப்படை சிந்தனை: மற்றவர்கள் அதிலும் குறிப்பாக மனைவி நாம் விரும்பியவாறு நடந்தே தீர வேண்டும். அவ்வாறு நடந்து கொள்ளவில்லையெனில் அவர் நிந்திக்கப்பட வேண்டியவர். கிழ்மைப்படுத்தப்பட வேண்டியவர் (She deserved to be condemned).

மூன்றாவது காட்சியில் கணவன் மனைவியை விடுத்து தன்னை நொந்து கொள்கிறார். இங்கு அடிப்படைச் சிந்தனை: தான் சரி இல்லை அதனால் தான் இவ்வாறு நடக்கிறது. ஆகையினால் தான் கிழ்மைப்படுத்தபட வேண்டியவர் (I deserve to be condemned).

இனி வேறு ஒரு உதாரணம். ஒருவர் வேலைக்கு நேர்முகம் தருகிறார். மிக நன்றாகச் செய்கிறார். நிச்சயமாகத் தனக்கு அவ்வேலை கிடைக்கும் என எண்ணி இருக்கும்போது இடிபோல ஒரு செய்தி. அவரை விட எல்லா விதத்திலும் குறைந்த தகுதியுடைய அவருடைய நண்பரொருவருக்கு அந்த வேலை கிடைத்து விட்டது. இதை ஒருபோதும் ஏற்கமாட்டேன், இந்த உலகத்தையே ஒழித்து விடவேண்டும் என்று கொதித்து எழுகிறார் அவர். இங்கு அடிப்படைச் சிந்தனை: உலகமும், சமூகமும் தான் எதிர்பார்ப்பதற்கு இணங்க நடந்து கொள்ளவேண்டும் இல்லையேல் உலகமும் சமூகமும் கீழ்மைப்படுத்தப்பட வேண்டும்.(world condemnation)

மன அழுத்தம் இந்த மூன்று வகையான கீழ்மைப்படுத்தலின் (self condemnation, other condemnation, world condemnation) விழைவாக எற்படுகிறது என்கிறார் எல்லிஸ்.

ஏன் மனிதர்கள் தங்களுடைய சிந்தனையில் இவ்வாறு மாறுபடுகிறார்கள்?

மூன்று உலக நடைமுறைக்கு (நிதர்சனம்) மாறான,பார்வைகள் ( மூட நம்பிக்கைகள்), தான் இதற்குக் காரணம்.

அவைகள்:

o பூதாகரப்படுத்துதல் (“awfulize”)
o முடிவான, மாறுதலுக்கு உற்படுத்தக் கூடாத நிலைப் பாடு(“absolutize")
o இதை ஒரு போதும் தாங்க என்னால் இயலாது (I can not stand this)

1.பூதாகரப்படுத்துதல் (“awfulize”):

இந்தப் பார்வையினால் நாம் நம்முடைய அனுபவங்களைத் தேவைக்கு அதிகமாகப் பெரிதுபடுத்தி விடுகிறோம். நன்றாக நேர்முகம் தந்த வேலை கிடைக்காது போவது மிகவும் கவலை தருவதுதான். அதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. ஆனால் அதோடு உலகமே முடிந்து போவது போல அந்நிகழ்வினைப் பார்த்தால் எப்படி? நம்முடைய பார்வைதான் நம்முடைய நிஜம். உலகமே முடிந்து போனது போல் பார்த்தால் பிறகு மனஅழுத்தம் வரத்தானே செய்யும். பல சமயங்களில் நம்மில் பலருக்கு நாம் விரும்பியபடி வாழ்க்கை அமையாமல் போகலாம். நமக்குக் கிடைத்த வாழ்வினை மிகமிகத் துச்சமாகவும் கிடைக்காததை மிகமிக உயர்வானதாகவும் பூதாகாரப்படுத்திப் பார்க்கும் பார்வையுடன் சுய கீழ்மைப்படுத்துதலும் சேர்ந்து கொண்டால் மன அழுத்தத்துடன் மனவீழ்ச்சியும் சேர்ந்து வரும்.

2. முடிவான, மாறுதலுக்கு உற்படுத்தக் கூடாத நிலைப் பாடு(“absolutize’):

சற்று சிந்தித்துப் பார்த்தால் நம்மில் பலர் எதையும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதில் ஆணி அடித்தாற் போல் இருப்பதை உணரலாம். ‘should,” “must,” “ought,” “always,” and ‘never,” என்ற சொற்கள் இவர்கள் வாயிலிருந்து அடிக்கடி வருவன. தான் அல்லது மற்றவர்கள் அந்த நிலைப்பாட்டிலிருந்து எள்ளளவும் மாறக்கூடாது, மாறினால் அவர்கள் மோசமானவர்கள் என்கிற பார்வை((“absolutize”) யுடன் மற்றவரைக் கீழ்மைப்படுத்துதலும் சேர்ந்து கொண்டால் மன அழுத்தத்திற்குக் குறைவே இல்லை.

3. இதை ஒரு போதும் தாங்க இயலாது(I can’t stand this):

நாம் பல சமயங்களில் கடவுளைப் போல் நடந்து கொள்கிறோம். வாழ்க்கை ரோஜா மலர்ப் படுக்கை இல்லை என்பதைக் கிளிப்பிள்ளை போல சொல்லும் நாம் வாழ்க்கை அவ்வாறு இருந்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிக்கிறோம். கடவுள் ஒருவருக்குத்தான் தான் விரும்பிய படி வாழ்வது சாத்தியம். மனிதர்க்குச் சாத்தியமே இல்லை. என்னால் அவருடன் வேலை பார்க்க முடியாது. என்னால் அவருடன் வாழ முடியாது. என்னால் இந்த உணவைச் சாப்பிட முடியாது எத்தனை எத்தனை முடியாதுகள்!!!

உண்மையில் நாம் முடிவு செய்து விடுகிறோம் இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று. பிறகு கூறுகிறோம் என்னால் இயலாது என. இந்தப் பார்வை மற்றும் உலகத்தைக் கீழ்மைப்படுத்தும் எண்ணங்கள் ஒன்று சேர்ந்தால் மன அழுத்தம் நிச்சயம்.

பகுத்தறிவூட்டப்பட்ட உணர்ச்சிகள், செயல்கள் தெரப்பி (Rational Emotive Behavioural therapy):

தெரப்பி:

எந்த ஒரு நிகழ்வு நிகழும் போதும் நாம் (1) நம்மை நாமே கீழ்மைப்படுத்திக் கொள்ளுதல், (2) பிறரைக் கீழ்மைப்படுத்துதல் (3) உலகத்தை அல்லது சமூகத்தைக் கிழ்மைப்படுத்துதல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றினையோ அல்லது அவற்றின் கலவையையோ பயன்படுத்தக் கூடும்.

இந்த அணுகுமுறை மூன்று வகையான உளப்பாங்கினால், (பூதாகரப் படுத்துதல், என்னுடைய நிலை மாற்றத்திற்கு உட்படுத்தக் கூடாதது, என்னால் இதைத் தங்கிக்கொள்ள இயலவே இயலாது ) மிகவும் பலப்படுத்தப் படுவதால் மனஅழுத்தம் ஏற்படுகிறது.

ABCDE Format

A நாம் எதிர்கொள்ளும் ஒரு சூழ்நிலை உதாரணம்: மனைவி நீர் கொண்டுவந்து தர மறுத்தமை

B இந்தச் சுழலைப் பற்றிய நமது எண்ணம். உதாரணம்: என் மனைவியின் செயல் செய்யத்தக்கது அன்று + பூதாகாரப்படுத்துதல்

C மன அழுத்தம் அல்லது சினம், பிற உணர்வுகள்

D இச்சிந்தனையும் பார்வையும் பகுத்தறிவின் பாற்பட்டதா? தர்க்க ரீதியாக, அல்லது நடைமுறையில் உலகத்தில் காணப்படுகிறதா? எல்லாப் பெண்களும் தவறாது கணவன் கேட்கும் போது நீர் கொண்டுவந்து தருகின்றனரா? நம்முடைய நம்பிக்கைக்கு என்ன ஆதாரம்? இப்படிக் கேள்விகளைக் கேட்டோமேயானால் ஒவ்வொரு கேள்விக்கும் இல்லை….இல்லை எனப் பதில் வருவதை உணரலாம்.

E கேள்விகளை அவசர அவசரமாக புறந்தள்ளி விடாமல், தான் நினைப்பதுவும் தன்னுடைய பார்வையும் சரியானதுதான் என்று அடம் பிடிக்காது, உண்மைத்தேடல் செய்யும் பட்சத்தில் நமக்கு உபயோகமான சிந்தனை பிறக்கும். இதைத் தொடர்ந்து மனஅழுத்தம் விலகும்.

ஒன்றைக் கவனித்து இருப்பீர்கள். சூழல் காரணமாகத்தான் நமக்கு மன அழுத்தத்தின் ஆரம்பம் ஏற்படுகிறது என்றாலும் அவ்வழுத்தம் ஒரு நோய் என்கிற அளவுக்குப் பல்கிப் பெருகுவது நம்முடைய எண்ணங்களினாலும், பார்வைகளினாலும் தான் என்பதை. ஆகவே நாம் நம்முடைய சிந்தனைகளை, நம்பிக்கைகளை, மனப் பார்வைகளை பகுத்தறிவுக்கு உட்படுத்துவோம். அப்படிச் செய்யும்போது மிக அதிகமாக நம்மைப் பாதிக்கக்கூடிய அளவுக்குச் சென்று நம்முடைய எஜமானர்களாகிவிடும் உணர்ச்சிகளை நமக்கு அடங்கி, நலம் புரியும் நண்பர்களாக, பணியாளர்களாக மாற்றுதல் இயலும்.

மன அழுத்தம் - இனியும் வேண்டாம்

, , , ...

இன்றைய பரபரப்பான உலகில், சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் கூறுவது 'ஐயோ ரொம்ப டென்ஷனாயிருக்கு' என்பதுதான். இத்தகைய பதட்டமும் படபடப்பும் அதிகரிக்கும்பொழுது சிலருக்கு அது மன அழுத்தத்தில் வந்து முடிந்துவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவு வரையிலான மன அழுத்தம் நேர்மறை மன அழுத்தம் எனப்படுகிறது. ஏனெனில் அது நம் செயல்திறன்அதிகரிக்க உதவுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சாகும்பொழுது மன அழுத்தத்தைப் பற்றிக் கூறவும் வேண்டுமா என்ன? அதிகமான மன அழுத்தம் எதிர்மறையாக மாறி மனச் சோர்வையும், மன உளைச்சலையும் உண்டாக்கிவிடுகிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகளும் ஏராளம். மன அழுத்தத்தின் அறிகுறிகள் என்னென்ன என்றும், மன அழுத்தத்தைத் தவிர்ப்பது எப்படி என்றும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.



மன அழுத்தத்தால் ஏற்படும் தீமைகள்:

மன அழுத்தம் நம் உடலிலும், நம் மனப்போக்கிலும் பல மாறுதல்களை ஏற்படுத்துகிறது. பொதுவாக மன அழுத்தத்தினால் உடலில் தோன்றும் மாற்றங்கள் நாளடைவில் பல நோய்களை உண்டாக்கிவிடக்கூடும். எனவே, மன அழுத்தம் ஏற்படும்பொழுதே அதை அறிந்து கொண்டு, தக்க உபாயங்களை மேற்கொண்டால், அபாயங்களில் இருந்து தப்பிக்கலாம்.

நாளாவட்டத்தில், மன அழுத்தம் ஏற்படுகையில் நமது உடலில் சுரக்கும் திரவமான கார்டிசால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து விடுகிறது. மேலும், இன்சுலின் சுரப்பை இது குறைப்பதால், சர்க்கரை அளவு உடலில் அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலின் எடை கூடத் தொடங்குகிறது. இதன் காரணமாக அதிக இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டு வலி போன்றவை நம்மைத்தாக்க வாய்ப்பு உள்ளது. உடலின் எதிர்ப்புச் சக்தி குறைவதன் காரணமாக, மற்ற பல வித நோய்களின் தாக்குதலுக்கும் நாம் ஆளாக நேரிடலாம்.

மன அழுத்தம் அதிகரிக்கையில், நம் சிந்தனை, நாம் பிறரிடம் பேசும்/பழகும் விதம் எல்லாமே மாறிவிடுகிறது.இதன் காரணமாக வேலைசெய்யுமிடத்திலும் வீட்டிலும் சண்டை சச்சரவு ஏற்பட்டு நிம்மதிக்குலைவு ஏற்படலாம்

நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கிறீர்களா என்று எப்படித் தெரிந்து கொள்வது?

ஐயோ! ஆயிரம் வேலை பாக்கியிருக்கிறது.. தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருக்கிறது என்று அடிக்கடி தோன்றுகிறதா? அடுத்தவர்கள் மீது கோபம் வருகிறதா? அடிக்கடி தலைவலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கு உள்ளாகிறீர்களா? படபடப்பும் பதட்டமும் ஏற்படுகிறதா? கவனம்.. நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கக் கூடும்.

இதயத்துடிப்பு அதிகரித்தல், தொடர்ச்சியான தலைவலி, அதிகமான வியர்வை, குறிப்பாக உள்ளங்கைகள் வியர்த்தல், மிக வேகமாக மூச்சு விடுதல்,வயிற்றுக் கோளாறுகள், முதுகு வலி, கழுத்திலும் இடுப்பிலும் ஏற்படும் தசைப்பிடிப்பு முதலியவை, அதிக மன அழுத்தத்தால் உடலில் பொதுவாக ஏற்படக் கூடிய அறிகுறிகள்.

சின்னச்சின்ன விஷயங்களைக் கையாள்வது கூடக் கடினமாகி விடுதல், சிறு தவறுகளுக்குக் கூட மிகுந்த எரிச்சலடைந்து கூச்சல் போடுதல், மிகவும் களைப்பாக உணர்தல், எதிலும் கவனம் செலுத்த இயலாமை, உப்புப் பெறாத விசயத்திற்கெல்லாம், மலையே இடிந்து விட்டது போல் கவலைப் படுதல், எதையோ இழந்ததுபோல் உணர்தல், ஏதாவது கெட்ட காரியம் நடந்துவிடும் என்று அச்சமடைதல், பிறரிடம் எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்தல் என்று நம் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

மன அழுத்தம் ஏற்பட்டிருப்பவர்கள் அதை எப்படிக் கையாளலாம்?

சிலருக்கு, தனக்கு மன அழுத்தம் இருப்பது புரியும். ஆனால் அவர்களில் ஒரு சாரார் அதை அலட்சியப்படுத்தவோ நியாயப் படுத்தவோ முற்படுவர்.
"கொஞ்ச நாளாக வேலைப்பளு அதிகரித்துவிட்டது, அதனால்தான் டென்ஷன்" என்றும், "இந்த வீட்டில் எல்லாமே ஏடாகூடமாகத்தான் இருக்கும்" என்றும் " என் அலுவலர் மோசம்/என் மனைவி (அல்லது கணவர்) அனாவசியமாக என்னைத் தொல்லைப் படுத்துகிறாள்(ர்)" என்றும் தமது மன அழுத்தத்திற்குப் பல காரணங்களைக் கற்பிப்பார்கள். தம் குறையை வெளிப்படுத்தவோ, சரி செய்துகொள்ளவோ முயற்சி செய்ய மாட்டார்கள்.

பிற வகையினரோ, தவறான வழிகளில் அதிலிருந்து விடுபட முற்படுவர். புகை பிடித்தல், மது அருந்துதல், எப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பது அல்லது சாப்பிடாமல் பட்டினி கிடப்பது, தொலைக்காட்சி அல்லது கணிணியே கதியாகக் கிடப்பது, அதிகம் தூங்குவது, காரணமில்லாது நம் கோபத்தைப் பிறர் மீது காட்டுவது, அடி உதையில் இறங்குவது, தூக்க மருந்துகள் அல்லது போதைப்பொருட்களை உட்கொள்வது, செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளிப் போடுவது என பல விதமாக தமது மன அழுத்தத்தைக் குறைக்கவோ, திசை திருப்பவோ முயலுவர்.

இந்த இரண்டுமே நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக மோசமாக்கிவிடுகின்றன. இவற்றால் மனநிலையும் உடல் நிலையும் மென்மேலும் சீர்கேடு அடையத் தொடங்குகின்றன. பிறருடனான உறவும் நட்பும் கூட கெட்டுவிடுகிறது. எனவே, மன அழுத்தத்தைச் சரி செய்ய, சில சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதற்கு முதலில், சுய அலசல் தேவை. இந்தப் பிரச்னையில் இருந்து விடுபடவேண்டும் என்ற முனைப்பும், மாற்றங்களுக்குத் தயார் செய்துகொள்ளும் மனமும் வேண்டும்.

"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்". என்ற கண்ணதாசனின் வரிகளைக் கடைப்பிடிப்பதுதான் மன அழுத்தத்திற்கான சரியான மருந்து.

மனிதர்களின் உடலமைப்பு மட்டுமல்ல, மனப்போக்கும் வேறுபடக்கூடும். ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்பும் தனித்தன்மையுடையது. எனவே, மன அழுத்தத்திற்கான காரணிகளும், அதைப் போக்குவதற்கான வழிமுறைகளும்கூட மனிதருக்கு மனிதர் வேறுபடும். எனினும், சில பொதுவான யோசனைகளை தொடரும் கட்டுரையில் காண்போம்.

இனிய இல்லறத்திற்கு

,

வாழ்க்கையின் வெற்றி இனிய, நிம்மதியான வாழ்வைப் பொறுத்தது. அந்த நிம்மதியைக் கொடுப்பதோ, கெடுப்பதோ நமது இல்லறம்தான். வெளியில் தமது நல்ல குணங்களுக்காகவும், பழகும் விதத்திற்காகவும் பாராட்டப்படுபவர்கள் கூட, தமது வீட்டில் உள்ளவர்கள், குறிப்பாக மனைவியிடம் அல்லது கணவரிடம் பழகும்பொழுது உரிமையின் காரணமாக, பல சமயங்களில் அறிந்தோ அறியாமலோ காயப்படுத்திவிடுகின்றனர். இதனால் வாழ்க்கை பல நேரங்களில் கசந்துகூட விடுகிறது. எப்பொழுதும் வாழ்வு இனிமையாகவே இருக்கவேண்டுமானால் கீழ்க்கண்ட யோசனைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! இந்த யோசனைகள் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் மிகவும் எளிமையானவை; கடைப்பிடிக்கக் கடினமானவை. ஆனால், இருவரில் ஒருவர் கடைப்பிடித்தால் கூட இல்லறம் நல்லறமாவதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை: எப்பொழுதும் பிறரிடம் உள்ள நல்ல குணத்தை மட்டுமே பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். இது எல்லோருக்குமே பொருந்தும் என்றாலும், முக்கியமாக வாழ்க்கைத் துணையிடம் பின்பற்றவேண்டியது இது. 'Nobody is Perfect' என்பது ஞாபகம் இருக்கட்டும். எந்தச் செயலையும் வாய்விட்டு, மனம் விட்டுப் பாராட்டுங்கள். அது முடியவில்லையா? குறைந்த பட்சம் எதற்கெடுத்தாலும் குறை சொல்வதை நிறுத்துங்கள். நிஜமாகவே பெரிய தப்பாக இருந்தாலும், கத்திக் கூச்சல் போட்டு திட்டி... என்ன பயன்? சரியான முறையில் எடுத்துச் சொல்லும்பொழுது ஏற்படும் தாக்கம் திட்டுவதாலோ ஆத்திரப்படுவதாலோ கிடைப்பதில்லை. அது மட்டுமில்லை. நீங்கள் பிறரை மாற்ற முயல்வதை நிறுத்தினாலே, மற்றவர் தானாக மாறிவிடுவார்.

உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்: நீங்கள் நல்ல முறையில் பிறரிடம் பேசுவது மட்டும் போதாது. பிறர் பேசுவதையும் கவனமாகக் கேட்கவேண்டும். உங்கள் கருத்துக்களை எடுத்துக்கூற எவ்வளவு விரும்புகிறீர்களோ அதே அளவு பிறர் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். பிறர் கண்ணோட்டம், மனப்போக்கு இவற்றினை அறிவது மிகவும் இன்றியமையாதது. 'Put yourself in other persons's shoes' என்பதைக் கடைப்பிடியுங்கள்.

நல்ல பழக்கவழக்கங்கள்: பொது இடங்களில் எப்படி நடந்துகொள்வீர்களோ, என்னென்ன நல்ல வழக்கங்களைப் பின்பற்றுவீர்களோ, அதே போல் தனிமையிலும் கண்ணியமாகவும் தன்மையாகவும் நடந்துகொள்ளுங்கள். இதைப் பின்பற்றினாலே 75 சதவீதப் பிணக்குகள் மறைந்துவிடுவதைக் காணலாம்.

உண்மையாக இருங்கள்: உங்கள் துணையிடம் எப்பொழுதும் உண்மையே பேசுங்கள். அவரை சிறு காரணத்திற்காகக்கூட ஏமாற்ற முயலாதீர்கள். இனிய இல்லறம் என்ற கட்டிடம், நீங்கள் ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் நம்பிக்கையில்தான் இருக்கிறது. நீங்கள் உங்கள் துணையின் மீது நம்பிக்கை வைப்பதும், உங்கள் துணையின் நம்பிக்கைக்கு உரியவராக நடந்துகொள்வதும் என்றும் நிலைத்திருக்கும் உறவிற்கு அச்சாணி போன்றவை. சந்தேகம், நம்பிக்கையின்மை, ஏமாற்றுதல் இவை அனைத்தும் உங்கள் இல்லறத்தின் ஆணிவேரைச் செல்லரிக்கச் செய்யக் கூடியவை.

பிறர் விருப்பத்தை மதியுங்கள்: உங்கள் இருவரின் விருப்பங்களும் வெவ்வேறாக இருப்பது வாழ்வுக்குச் சுவை ஊட்டும். இருவரின் விருப்பமும் ஒன்றாக இருந்தால் சலிப்பு ஏற்பட்டு விடக்கூடும். ஆனால் வெவ்வேறாக இருப்பது வாழ்வில் ஒருவரின் விருப்பத்திற்கு மற்றவர் விட்டுக்கொடுப்பதும் ஒருவரின் விருப்பத்தை மற்றவர் மதிக்கக் கற்றுக் கொள்வதும் ஆகிய இனிய அனுபவங்களுக்கு ஆதாரமானவை.

பெருமைப்படுங்கள்: உங்கள் வாழ்க்கைத் துணை தனது இலக்கை அடைய உங்களால் ஆன உதவி செய்யுங்கள். அது பணி உயர்வாக இருந்தாலும் சரி, விளையாட்டு, நுண்கலை போன்றவையாக இருந்தாலும் சரி, அவரது வளர்ச்சியில் பெருமை அடையுங்கள். அவர் உங்கள் துறையிலேயே இருப்பவரானாலும் சரி, உங்களை விட உயரத்தை எட்டினாலும் சரி.. பொறாமைப்படாதீர்கள். மனமாரப் பாராட்டுங்கள். இது குறிப்பாக ஆண்களுக்கான ஆலோசனை.

உங்கள் துணைக்கென நேரம் ஒதுக்குங்கள்: நீங்கள் எவ்வளவுதான் பரபரப்பாக மூச்சு விடக்கூட நேரமில்லாமல் பணி புரிபவராக இருந்தாலும் சரி, ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, அது பத்தே நிமிடமானாலும் போதும், உங்கள் துணையுடன் செலவிடுங்கள். குழந்தைகள், உறவினர்கள் எல்லாரும் இருந்தாலும், அவர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டி நேர்ந்தாலும், இந்தப் பத்து நிமிடத்தை மறக்கவேண்டாம். அது உங்கள் துணைவருக்குப் புத்துணர்ச்சியளிக்கும். நீங்கள் அவருடனான உறவை மதிக்கிறீர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.

முக்கியமான நாட்களை மறக்காதீர்கள்: உங்கள் திருமண நாள், அவருடைய பிறந்த நாள், அவரை முதலில் சந்தித்த நாள் இவை போன்றவற்றை மறந்துவிடாமல் இருங்கள். திடீர்ப்பரிசு கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்துங்கள். பரிசுகள் அதிக விலையுடையதாக, உயர்வானதாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒரு அழகிய சிவப்பு ரோஜாவாக இருந்தாலும், அன்புடன் கொடுப்பதுதான் முக்கியம். இந்தக் குறிப்பும் முக்கியமாக ஆண்களுக்கானதே!

அக்கறை காட்டுங்கள்: நீங்கள் உணவு உட்கொள்ளும்பொழுது, அடுத்தவர் சாப்பிட்டு விட்டாரா என்று விசாரிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். முடிந்தவரை, இரவு உணவை இருவரும் சேர்ந்து சாப்பிடும்படி ஏற்பாடு செய்துகொள்வது சிறந்தது. அதே போல் அவருடைய உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்பொழுது அரவணைப்பாக இருங்கள். அடுத்தவர் தலைவலி என்று படுத்திருக்கையில், நீங்கள் குறைந்தபட்சம் தொலைக்காட்சியை அலற விடாமல் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் விருப்பங்கள், உணர்வுகள், பழகும் முறைகள், பார்வைகள் எண்ணப் போக்குகள் எல்லாமே மாறுபடும். அந்த வேற்றுமையைப் புரிந்துகொள்வதும், ஒருவரது குறைகளை மற்றவரது நிறைகளால் இட்டு நிரப்புவதும் வாழ்க்கைத் தேர் நன்முறையில் ஓட அவசியமான ஒன்று.

மகிழ்வுடன் இருங்கள்: சிலர் என்ன கிடைத்தாலும் திருப்தி அடைய மாட்டார்கள். இத்தகையவர்கள் தாமும் மகிழ மாட்டார்கள். பிறரையும் மகிழ்ச்சியுடன் இருக்க விட மாட்டார்கள். நீங்கள் இவர்களில் ஒருவராக வேண்டாம். எதையும் நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்கவும், எந்தச் சங்கடத்திலும் புன்னகைக்கவும் பழகிக்கொள்ளுங்கள். இது முக்கியமாக பெண்களுக்கானது.

சரியான தருணத்தில் பேசுங்கள்: மிகவும் முக்கியமான பிரச்னைகள், குறைகள் முதலியவற்றை நேரம் தெரிந்து பேசுங்கள். காலையில் அலுவலகம் கிளம்பிக்கொண்டிருக்கையிலோ, மாலை களைத்து உள்ளே நுழைந்தவுடனோ எவ்வளவு தலை போகிற காரியமாக இருந்தாலும் ஆரம்பிக்கவேண்டாம். பொதுப்படையான பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, சமயம் பார்த்து விவகாரமான விஷயங்களைப் பேசுவதால், உறவில் விரிசல்களும், உரசல்களும் நேர்வதைத் தவிர்க்கலாம்.

இந்த ஆலோசனைகளைத் தவறாமல் பயன்படுத்துங்கள். நீங்கள் கனவிலும் நினைத்திருக்காத அளவு என்றென்றும் இனிமை பொங்கும் இல்லறத்திற்கு கண்டிப்பாக உத்தரவாதம். ஆனால் ஒன்று.. இதை முதலில் நீங்கள் பயன்படுத்துங்கள். உங்கள் துணையைப் பயன்படுத்தும்படி சொல்லிவிடாதீர்கள்.

(SOurce: )

கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?

,

கனி ஜோதிடம் தெரியுமா உங்களுக்கு? கிளி ஜோதிடம் தெரியும், அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி, நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்த ஜோதிடம்.

கீழே பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன, பலன் பொருந்துகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!!

மாம்பழப்பிரியரா நீங்கள்? அப்படியானால்....நீங்கள் கொஞ்சம் தீவிரமான ஆசாமி. உங்களுக்கு என்றுள்ள விருப்பு வெறுப்புகளை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். உங்களை மாற்ற முயல்வதோ, உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதோ மிகவும் கடினமான விஷயம். உங்களுக்கென்று மாற்றமுடியாத நிலையான எண்ணங்கள் இருக்கும். எந்தச் சூழ்நிலையையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க விரும்புவீர்களே தவிர, சூழ்நிலைக்கேற்றவாறு நீங்கள் வளையமாட்டீர்கள். மூளைக்குச் சவால் விடும் பணிகளை அதிகம் விரும்புவீர்கள். கொஞ்சம்... கொஞ்சமென்ன நிறையவே பிடிவாதக்காரர் நீங்கள். ஆயினும் அன்பான துணையிடம் கன்றுக்குட்டி போல் பாசமாக இருப்பீர்கள். அன்பை வீட்டுக்குள்ளும் உங்கள் வலிமையையெல்லாம் வெளியிலும் காட்டுவது உங்கள் தன்மை.


உங்கள் விருப்பம் வாழைப்பழமானால்.... நீங்கள் அந்த வாழைப்பழம் போலவே மென்மையானவர். மிகவும் அன்பானவர். பிறருக்கு இரங்கும் மனமும் இதமாகப் பழகும் குணமும் நிறைந்தவர். ஆனால், உங்களுக்குக் கூச்சம் அதிகம். பிறருடன் கலந்து பழக மாட்டீர்கள். உங்களுக்கு தன்னம்பிக்கையும் கொஞ்சம் குறைவுதான். உங்கள் மென்மையான குணத்தினை சிலர் அவர்களுடைய லாபத்திற்குப் பயன்படுத்திக்கொண்டு விடுவர். கவனம் தேவை.
உங்கள் துணையை நீங்கள் மிகவும் பாராட்டிச் சீராட்டி வைத்துக் கொள்வீர்கள். உங்கள் இனிய குணத்தினால் உங்கள் குடும்ப வாழ்வில் எப்பொழுதும் அமைதியும் அன்பும் நிலவும்.

ஆரஞ்சுப் பழத்தை விரும்புபர்களுக்கு: அதிக அளவு பொறுமையும், அதே அளவு திடமான மன உறுதியும் உள்ளவர்கள் நீங்கள். மெதுவாக நிதானமாக அதேசமயம் கடின உழைப்பின் மூலம் உங்கள் இலக்கை அடைவது உங்கள் நோக்கமாக இருக்கும். நீங்களும் கூச்ச சுபாவம் உடையவர்தான் என்றாலும், நம்பிக்கைக்குரிய நண்பராக இருப்பீர்கள். பொதுவாக சண்டை சச்சரவை விரும்பாதவர்களாகிய நீங்கள், மிகுந்த அழகுணர்ச்சியை உடையவர். உங்கள் வாழ்க்கைத்துணையை அதிகக் கவனத்துடன் தேர்ந்தெடுப்பீர்கள்; முழு மனதுடன் நேசிப்பீர்கள்.

ஆப்பிளை விரும்பும் அன்பர்களே! நீங்கள் உடனடியாக முடிவெடுத்துத் தடாலடியாகச் செயல் படக்கூடியவர். அதிகமாகச் செலவு செய்பவர். மிகவும் வெளிப்படையாகப் பேசும் போக்கை உடையவர். ஆனால் எளிதில் உணர்ச்சிவசப் படுபவர். உற்சாகத்துடன் நடைபோடக்கூடியவராகிய நீங்கள், ஒரு குழுவிற்குச் சிறந்த தலைவராக விளங்கக் கூடியவர். எப்பொழுதும், முன்னேறிச் செல்வீர்களே தவிர சுணங்கிவிட மாட்டீர்கள். வாழ்வில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டிலும், செயல்பாட்டில் காட்டும் ஆர்வத்திலும் உங்களுக்கு நிகர் நீங்களேதான். உங்கள் துணையின் உள்ளம் கவர்ந்தவர் நீங்கள்.

அன்னாசியை ரசித்து ருசிப்பவரா? நீங்கள் எந்த விசயத்தையும் சட்டென ஆலோசித்து முடிவெடுத்து அதைவிட வேகமாகச் செயல்படுத்துவீர்கள். உங்களுக்கு அதனால் லாபம் ஏற்படும் எனில் எத்தனை முறை வேண்டுமானாலும் துணிவுடன் தொழிலை மாற்றிக்கொண்டிருக்கும் பழக்கமுடையவர் நீங்கள். எவ்வளவு பெரிய வேலையாக இருப்பினும் அதை அருமையாக ஒருங்கிணைத்து நிர்வாகம் செய்யும் திறமையில் உங்களுக்கு இணையே இல்லை என்று சொல்லலாம். தன்னிறைவுடனும், நேர்மையாகவும் இருப்பது உங்கள் தன்மை. எளிதில் யாரிடமும் நட்புக் கொள்ள மாட்டீர்கள் ஆனால் அப்படி நட்புக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் அந்நட்பைத் தொடர்வீர்கள். உங்கள் துணைவர் / துணைவி உங்கள் ஒளிவு மறைவில்லாத குணத்தால் ஈர்க்கப் பட்டாலும், அன்பை வெளிக்காட்டத்தெரியாத உங்கள் தன்மை அவரை சலிப்படையச் செய்துவிட வாய்ப்புண்டு.

பேரிக்காய்ப்பிரியர்களே! உங்கள் மனத்தினை ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபடுத்தினால், அதை வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். ஆனால் மனம் வைப்பது என்பது நிரம்பவும் கடினம் உங்களுக்கு. எதையும் ஏகப்பட்ட உற்சாகத்துடன் தொடங்கிவிட்டு இடையிலே கைவிடுவது உங்கள் பழக்கம். எதைச் செய்தாலும் உடனடியாகப் பலன் தெரிந்தாக வேண்டும் என்று துடிப்பீர்கள். அதிக ஆற்றலும் தெம்பும் உடையவர். யாருடனும் எளிதில் பழகுவதில் வல்லவராக உள்ள நீங்கள் அதை நீண்ட நாள் தொடர்வதில் அன்னாசிப் பழக்காரருக்கு அப்படியே எதிரிடையானவர்.

திராட்சை விரும்பிகளே! உங்களைப்பற்றிப் பார்ப்போமா? நீங்கள் பொதுவாக மென்மையாக, அமைதியாகப் பழகக் கூடியவர். ஆனால் 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற பழமொழி உங்களைப் பற்றித்தான் எழுந்ததோ என்னவோ! கோபம் பொங்கி வரும் அதே வேகத்தில் அடங்கியும் விடுவது உங்கள் சிறப்பியல்பு. அழகினை ஆராதிப்பவர் நீங்கள். மலரோ, ஓவியமோ, குழந்தைகளோ மற்ற மனிதர்களோ எதுவானாலும் அழகாக இருந்தால் இரசிப்பதும் பாராட்டுவதும் உங்களுக்கு இயல்பானது. உங்கள் தோழமையான அணுகுமுறையாலும், வெளிப்படையாகப் பாராட்டும் குணத்தினாலும், உங்களுடைய நட்பு பலராலும் விரும்பப் படும். உங்கள் வட்டத்தில் நீங்கள் பிரபலமானவராக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும் அதை ஏனோதானோ என்று செய்யாமல் இரசித்துச் செய்வீர்கள். வாழ்வை உற்சாகத்துடனும், புத்துணர்வுடனும் எதிகொள்வீர்கள். என்ன? உங்கள் வாழ்க்கைத்துணையும் அதே போல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். அப்படியில்லை என்றால் கொஞ்சம் மனத்தை வருத்திக்கொள்வீர்கள்... கொஞ்ச நேரத்திற்கு. பின் உங்கள் பழைய துள்ளல் உங்களைத் தொத்திக்கொண்டுவிடும். அவ்வளவுதான்.

செர்ரிப்பழமா உங்கள் தேர்வு? உங்களுக்குப் பிடித்த இடம் உங்கள் வீடுதான். குடும்பமும் நெருங்கிய உறவுகளும் சூழ இருப்பதையே நீங்கள் அதிகம் விரும்புவீர்கள். ஆனால் உங்கள் தொழிலில் உங்களுக்கென்று ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க இயலாது. எப்பொழுதும் ஏற்றமும் இறக்கமுமாகவே இருக்கும். சிறுகச் சிறுகத்தான் உங்களால் சேமிக்கக் கூட முடியும். உங்களுக்குக் கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் அதிகம் உண்டு. ஒரே மாதிரியான சலிப்பு தரும் வேலைகளை விரும்பமாட்டீர்கள். சொல்லப்போனால், விளம்பரத்துறை, ஓவியம், கலைத்துறைகளில்தான் உங்கள் நாட்டம். உங்கள் துணைக்கு உண்மையானவராக இருப்பீர்கள். ஆனால் அன்பை வெளிக்காட்ட நீங்கள் இன்னும் கொஞ்சம் கற்றுக்கொள்ளவேண்டும்.

சீதாப்பழத்திற்கா உங்கள் வாக்கு? அப்படியென்றால், நீங்கள் கொஞ்சம் கட்டுப்பெட்டி. அடக்கமானவர். எதையும் ஆழ்ந்து ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துத்தான் முடிவு செய்வீர்கள். ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, அதைக் கண்டிப்பாக அடைந்து விடுவீர்கள். ஆனால், அவசரமோ பதற்றமோ உங்கள் பக்கத்தில் கூட வராது. நிதானமும் பொறுமையும் மிக்கவர். விரிவாக விளக்கப் படவேண்டிய பணி அல்லது புள்ளிவிவரங்கள் தொடர்பான பணிதான் உங்களுக்கு மிகவும் பிடித்தமான, உங்களுக்குப் பொருத்தமான பணியாக இருக்கும். புற அழகு அல்லது மற்ற குணங்களை விட அறிவுத்திறன் வாய்ந்தவரே துணையாக இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் கச்சிதமாக நேர்த்தியாக இருப்பது போல் பிறரும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதால் அடுத்தவர்களிடம் நிறையக் குற்றம் கண்டுபிடித்தபடியே இருப்பது உங்கள் குறைபாடு. கொஞ்சம் வெட்கமும் கூச்சமும் நிறைந்தவராக இருப்பதால், உங்கள் பிரியத்தை யாரிடமும் காட்டிக்கொள்வது உங்களுக்கு மிகவும் சிரமமான காரியம்.

இனி என்ன? உங்கள் நண்பர் அல்லது வாழ்க்கைத்துணைக்குப் பிடித்த பழம் என்ன என்று தெரிந்துகொண்டு, அவருடைய தன்மையைப் பற்றிச் சொல்லி வியக்க வையுங்களேன்.

மந்திரங்களை எப்படி ஜபிக்கவேண்டும்?+ காயத்ரிமந்திரத்தின் சிறப்பு

, ,

மந்திரங்களை எப்படி ஜபிக்கவேண்டும்?+ காயத்ரிமந்திரத்தின் சிறப்பு

காயத்ரி மந்திரமும் அதன் மகிமைகளும்

சாதாரண வசவுவார்த்தைகளுக்கே வலிமை உண்டு.

அதை விட வாழ்க வளமுடன்,வாழ்க வையகம்; ஓம் சாந்தி, ஓம் சக்தி, ஜெய்ஸ்ரீராம் .. போன்ற வார்த்தைகள் ஒரு விதத்தில் மந்திரங்களே! இதற்கு வசவுவார்த்தைகளை விட வலிமை அதிகம்.
இவற்றை விட தேவாரம்,திருவாசகம்,கந்த சஷ்டிகவசம் முதலான பக்திப் பாடல்களுக்கு வலிமை அதிகம்.

இவற்றிற்குச் சமமாக சமஸ்கிருதவார்த்தைகளுக்கு வலிமை உள்ளன.

சமஸ்கிருத வார்த்தைகளை விட சமஸ்கிருத மந்திரங்களுக்கு ஜபிக்கும் போது வலிமை அதிகம்.

சமஸ்கிருத மந்திரங்களை விடவும் சமஸ்கிருத காயத்ரி மந்திரங்களுக்கு வலிமை அதிகம்.ஒவ்வொரு கடவுளுக்கும் காயத்ரி மந்திரங்கள் உண்டு.உதாரணமாக கணபதி காயத்ரி மந்திரமானது விநாயகக் கடவுளின் ஒலி வடிவமாகும்.
கடவுள்களின் காயத்ரிமந்திரங்களை ஜபிக்கும் போது உரிய கடவுளின் காதில் நாம் நமது கோரிக்கைகளை வைக்கிறோம் என்று அர்த்தம்.
கடவுளரின் காயத்ரிமந்திரங்களை 4,00,000 முறை சொன்னால் உரிய கடவுள் இந்த கலியுகத்திலும் ஜபிப்பவருக்கு நேரில் காட்சியப்பார்.இது அனுபவ உண்மை.
சமஸ்கிருத காயத்ரிமந்திரங்களை விட காயத்ரி மந்திரமே அதிக வலிமை மிக்கது.இந்த உலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கு உயிர் தருவது காயத்ரி மந்திரமே!
இந்த காயத்ரி மந்திரத்தை பூமிக்கு-கொண்டுவந்தவர் பிராமணர் அல்ல.ஒரு ஷத்திரியர்.அவர் பிரம்மரிஷி பட்டம் பெற்ற விஸ்வாமித்ரர் அவர்கள்.
இந்த காயத்ரி மந்திரத்தைக் கொண்டு புதிய பிரபஞ்சத்தையே படைத்தவர்.பூமியிலிருந்து தெற்குப் பகுதியில் உள்ள புதிய நட்சத்திரங்கள் விஸ்வாமித்ர மகரிஷியால் படைக்கப்பட்டவை.நவீன வானியல் விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் மற்ற பகுதியில் உள்ள நட்சத்திரங்களை விட தெற்குப் பகுதி நட்சத்திரங்கள் வயது குறைந்தவை என மதிப்பிட்டுள்ளனர்.
இவ்வளவு சிறப்பு மிக்க காயத்ரி மந்திரத்தைத் தான் பிராமணர்கள் சந்தியாவந்தனம் செய்ய ஜபித்து வருகிறார்கள்.
காயத்ரி தேவி சூரியமண்டலத்தின் மையப் பகுதியில் ஐந்து முகங்களுடன் அமர்ந்து ஜபித்துக் கொண்டு இருக்கிறாள்.அம்பாள் உபாசகர்கள் பின்வரும் காயத்ரியை
ஜபித்துவர வாழ்க்கையில் செய்த பாவங்கள் கரைந்துவிடும்.
ஓம் பூ: புவ; ஸ்வ; தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹீ
த்யோயோன: ப்ரசோதயாத்
இதுவே அந்த காயத்ரி மந்திரம்.இந்த மந்திரத்தில் : என்பது ஹ என்ற ஒலியைத்தரும். உதாரணமாக பூ: என்பதை பூஹ் என்று ஜபிக்க வேண்டும்.

பூமிக்கு மேல் உள்ள வானில் குறிப்பிட்ட கிலோ மீட்டர்கள் உயரத்தில் இது போன்ற மந்த்ரங்கள் நிரம்பிய வான்பகுதி உள்ளது.யார் தவம் இருக்கிறார்களோ அவர்களுக்கு அங்கிருந்து மந்திரம் கிடைக்கும்.
ஒரு மந்திரத்தை ஒருமுறை மனதிற்குள்-வீட்டில் அமர்ந்து ஜபித்தால் 10 முறை சொன்னதற்கான பலன் கிடைக்கும்.
அதே மந்திரத்தை கருங்கல்லால் கட்டப்பட்ட பழமையான கோவிலில் அமர்ந்து ஒருமுறை ஜபித்தால் 1000முறை ஜபித்ததற்கான பலன் கிடைக்கும்.
மலைமீதுள்ள கோவில் மீது ஒருமுறை ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால் 1 கோடி தடவை ஜபித்தற்கான பலன் கிடைக்கும்.
கடலோரம் உள்ள கோவில் அல்லது கடலில் இடுப்பளவு நீரில் நின்றவாறு ஒரு முறை ஜபித்தால் 2 கோடி தடவை ஜபித்ததற்கான பலன் கிடைக்கும்.
இவை-இந்த எண்ணிக்கையானது சாதாரண நாட்களில் ஜபித்தால் தான்.பவுர்ணமி,அமாவாசை,தமிழ் வருடப்பிறப்பு,சூரிய-அல்லது-சந்திர கிரகண நேரங்களில் ஜபித்தால் மேலே சொன்ன எண்ணிக்கை பெருக்கல் 100 கோடி தடவை ஜபித்தமைக்கான பலன் உண்டு.
எப்போதும் மந்திரங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே அமர்ந்து அல்லது நின்று ஜபிப்பது முக்கியம்.
தெற்கு நோக்கி ஜபிக்கக்கூடாது.
காயத்ரி மந்திரத்தை அம்பாள் சன்னதியில் அமர்ந்து ஜபித்தால் கிடைக்கும் பலன்கள் எல்லையற்றவை!!!
இவை அனைத்தும் அனுபத்திலும்,ஜோதிடப் பெரியோர்கள் கூறக்கேட்டும் தொகுக்கப்பட்டவை.


(Source: http://aanmigakkadal.blogspot.com/2009/01/blog-post_27.html)
Download Opera, the fastest and most secure browser
December 2009
S M T W T F S
November 2009January 2010
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31