Skip navigation.

வாழ்க தமிழ்!வளர்க அதன் சிறப்பு!

வீழ்வது நாமாயினும் வெல்வது நம் தமிழ் மொழியாக இருக்கட்டும்!

Posts tagged with "tamil"

இளைஞர்களைப் பிடிக்கும் இணைய வலை???????

, , , ...

எப்போ பார்த்தாலும் இணையம், இணையம் என்று கணினியே கதியாகக் கிடக்கிறார் என் கணவர். வீட்டைக் கவனிப்பதில்லை, குழந்தைகளுடன் போதிய நேரம் செலவிடுவதில்லை. என்னிடம் பேசுவதற்குக் கூட அவருக்கு நேரமில்லை. நள்ளிரவு வரை இணையத்தில் எங்கெங்கோ உலாவிக் கொண்டு சோர்ந்து போய் தூங்கி விடுகிறார். வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் போய்விட்டது. மணவிலக்கு கோரலாமா என யோசிக்கிறேன் என தன்னிடம் ஆலோசனை பெற வரும் சில இளம் பெண்கள் தெரிவிப்பதாக திடுக்கிடும் தகவல் ஒன்றைத் தெரிவித்தார் சென்னையைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவர் ஒருவர்.

இணையத்திலேயே உரையாடி, இணையத்திலேயே வரன் தேடி, இணையத்தின் வழியாகவே இணைந்த பலரும் இன்று இணையத்தினாலேயே பிரியும் சூழலுக்கும் தள்ளப்படுகிறார்கள் என்பது இந்த நூற்றாண்டில் அவலங்களில் ஒன்று என்றே கருத வேண்டியிருக்கிறது.

“ சும்மா கொஞ்ச நேரம் ‘நெட்’ பாக்கணும் “ என்பது இன்றைக்கு இளைஞர்களிடம் புழங்கும் சர்வ சாதாரணமான பேச்சாகி விட்டது. அதுவும் போட்டி போட்டுக்கொண்டு நிறுவனங்கள் வழங்கும் பிராட்பேண்ட் இணைப்புகள் இணைய வேகத்தை அதிகப்படுத்தி கூடவே பதின் வயதினரின் உற்சாகத்தையும் அதிகரித்திருக்கிறது. கம்பியில்லா இணைப்புகள் வீட்டுக் கணினிகளை படுக்கையறைக்கும், விரும்பும் தனிமை இடங்களுக்கும் இடம்பெயர வழி செய்திருக்கிறது.

உலகை இணைக்கும் ஒரு வலையாகக் கருதப்பட்ட இணையம் இன்று பலருடைய வாழ்க்கையை இறுக்கும் சுருக்குக் கயிறாகவும் மாறிக்கொண்டிருக்கிறது என்பது தான் துயரம். அறிவை வளர்த்த, தகவல் பரிமாற்றங்களை நிகழ்த்த, பயணச் சீட்டு முன்பதிவு செய்ய, தேர்வு முடிவுகள் கண்டறிய என எல்லா வகையிலும் துணையாய் நிற்கும் இணையம் வாழ்க்கையைச் சீரழிக்கும் ஒரு வலையாகவும் மாறிவிட்டது உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானதே.

எப்போதும் இணையத்திலேயே இருக்க வேண்டும் என நினைப்பது, இணையத்திலுள்ள பக்கங்கள் ஒவ்வொன்றாக உலவுவது, எதையேனும் படித்துக் கொண்டே இருப்பது, இணையத்திலுள்ள உரையாடல் தளங்களில் முகம் தெரியாத யாருடனோ உரையாடிக் கொண்டே பொழுதைக் கரைப்பது,பாலியல் சிற்றின்ப தகவல்களில் மூழ்கிக் கிடப்பது, இணைய விளையாட்டுகளில் அடிமைப்பட்டுக் கிடப்பது என இணையத்துக்கு அடிமையாவதைப் பல வகைகளாகப் பிரிக்கிறார்கள் உளவியலார்கள்.

இணையத்தில் உரையாடல் தளங்களில் உரையாடுபவர்களில் 60 விழுக்காடு பேர் தங்களுடைய பெயர், வயது, உயரம், நிறம், உடல் எடை போன்றவற்றைப் போலியாகவே தருகின்றனர் என்கிறது புள்ளி விவரம் ஒன்று. எதிர் பாலினரை வசீகரிக்கும் விதத்தில் தகவல்களைத் தந்து விட்டு ஒரு வித போதையில் உரையாடலில் ஈடுபடுபவர்களே அதிகம் என்கிறது அந்த புள்ளி விவரம்.

பெரும்பாலும் பதின் வயதினர் தான் இந்த உரையாடல் தளங்களில் நிரம்பி வழிகின்றனர். ‘பாலியல் ஈர்ப்பு’ பற்றிக் கொள்ளும் இந்த வயதினர் எதிர் தரப்பில் உரையாடும் நபரைக் குறித்து மனதுக்குள் கற்பனையில் ஒரு உருவத்தை வரைந்து வைத்துக் கொண்டு அவர்களோடு பாலியல் உரையாடல்களில் லயித்து பொழுதையும் உடல் நலத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

புகைத்தல், மது அருந்துதல் போல இணையமும் ஒரு அடிமைப் படுத்தும் சாதனமே என அமெரிக்காவின் மருத்துவ ஏடு உட்பட பல்வேறு மருத்துவ நாளேடுகள் அறிக்கைகள் வெளியிட்டன. முதலில் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதவர்கள் சமீபகாலமாக இணைய அடிமைத்தனத்தின் வீரியம் கண்டு கலங்க ஆரம்பித்திருக்கின்றனர்.

போர்ட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் ஜெரால்ட் பிளேக் இதைக் குறித்து விளக்குகையில் இணையமே கதியெனக் கிடப்பவர்களில் 86 விழுக்காடு மக்களுக்கு ஏதோ ஒரு வகையான உளவியல் பாதிப்பு ஏற்படுகிறது என அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவிக்கிறார். எனவே இணைய அடிமைத்தனத்தையும் போதை அடிமைத்தனம் போல மருத்துவ மனைகள் மிகுந்த கவனத்துடனும் விழிப்புடனும் அணுக வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.

சரியான தூக்கமின்மை, பதட்டம், இணையம் இல்லாவிடில் மன அழுத்தமடைதல், உடல் பலவீனம், முதன்மையான பணிகளில் கவனம் செலுத்த முடியாமை என பல்வேறு விதமான பாதிப்புகள் இணைய அடிமைகளுக்கு வருகிறது என்பதால் இதை மிகவும் எச்சரிக்கையுடனும், முக்கியத்துவத்துடனும் அணுகவேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.

பல நாடுகள் ஏற்கனவே இந்த சிக்கல்களிலிருந்து மக்களை விடுவிக்கும் ஏற்பாடுகளைத் துவங்கிவிட்டன என்பது குறிப்பிடத் தக்கது. தென்கொரிய அரசு சுமார் 1000 த்துக்கும் மேற்பட்ட ஆலோசனையாளர்களை பயிற்சிகொடுத்து இணைய பழக்கத்திலிருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளது என்பதை இதன் ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.

இதே போல சீனாவிலும் சுமார் 17.1 விழுக்காடு பதின் வயதினர் இணையத்துக்கு அடிமையாகி இருக்கும் தகவலில் சீன அரசு அரண்டு போய் மீட்பு நடவடிக்கைகளில் துரிதமாய் இறங்கியிருக்கிறது. தாய்லாந்து, தென்கொரியா, வியட்னாம் போன்ற அரசுகளுடன் சீன அரசு இதற்கான விவாதம் நடத்தி பொது ‘கணினி காஃபே’ களில் பதின் வயதினருக்கு தடையும், இணைய விளையாட்டுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் விதித்திருக்கிறது. அது மட்டுமன்றி இளைஞர்களைக் கெடுக்கும் பல்வேறு இணைய தளங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

சீனாவில் மக்கள் இணைய அடிமைத்தனத்தைப் புரிந்து கொண்டு அதற்குரிய சிகிச்சையையும் பெற முன்வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக பீஜிங் அருகே உள்ள டாக்ஸிங் மருத்துவமனையில் தினமும் 60 பேர் முதல் 280 பேர் வரை இணைய அடிமைத்தனத்திலிருந்து மீளும் சிகிச்சைக்காக வருகின்றனர் என்பது இந்தச் சிக்கலில் ஆழத்தைச் சுட்டுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் 12 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டோர் என்பது கவலைக்குரிய தகவலாகும்.

இது தவிர சீனாவில் இராணுவத்தினரால் நடத்தப்படும் முழுமையாய் சிறை போன்ற பூட்டிய அறைகளுக்குள் நடக்கும் போதை மீட்பு சிகிச்சைகளும் இணைய பாதிப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கவனிக்கத் தக்கது.

வீட்டுக்கு தொலைபேசி கட்டணம் கட்டுவது முதல், அலுவலக வேலை வரை எல்லா இடங்களிலும் கணினியும் இணையமும் ஆக்கிரமித்திருக்கும் காலம் இது. இணையம் இல்லாத வாழ்க்கையை அலுவலகங்களோ, நிறுவனங்களோ நினைத்துப் பார்க்க முடிவதில்லை இப்போது. மேலை நாடுகளிலெல்லாம் இணையம் இல்லாவிடில் வீடுகளிலும் பல வேலைகள் முடங்கிவிடும் எனும் சூழல். இப்படி தேவைக்காய் மட்டும் பயன்படுத்தினால் மிக மிக பயனுள்ளதாய் இருக்கும் இணையம், பொழுது போக்குக்காய் உலவும் போது சிக்கல்களின் தந்தையாகி விடுகிறது.

முதலில் கொஞ்ச நேரம் என ஆரம்பிக்கும் இந்த பழக்கம். படிப்படியாய் அதிகரித்து இருக்கும் நேரத்தையெல்லாம் ஆக்கிரமிக்கும். வெறுமனே விளையாட்டாய் ஆரம்பிக்கும் ஒரு பழக்கம் எப்படி குடும்ப உறவுகளையும், அலுவல்களையும் சிதைத்து ஒட்டு மொத்த வாழ்வுக்கும் வேட்டு வைக்கிறது என்பதன் சோக உதாரணமாய் நிற்கிறது இந்த இணைய அடிமைத்தனம்.

ஒன்றை அதிகமாய் பற்றிக் கொண்டு முதன்மையான பல செயல்களை உதாசீனப்படுத்தும் எதுவுமே மனிதனை அடிமையாக்குகிறது எனக் கொள்ளலாம். அந்த வகையில் மாயைக்குள்ளும், போலித்தனமான பொழுதுபோக்குக்குள்ளும் இழுத்து படிப்பு, வேலை, குடும்பம் என அனைத்தையும் உதாசீனப்படுத்த வைக்கும் இணையம் நிச்சயம் அடிமைத்தனமே என பல்வேறு உளவியலார்கள் உரத்த குரல் கொடுக்கின்றனர்.

இணைய பழக்கத்துக்கு அடிமையாதல் ( Internet Addiction Disorder – IAD ) எனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி இணையத்தில் உலவத் தோன்றும், நள்ளிரவில் எழும்பி மின்னஞ்சல் வந்திருக்கிறதா என பார்க்கத் தோன்றும், இணைய இணைப்பு இல்லாவிட்டால் எதையோ பறிகொடுத்தது போல் தோன்றும், சாப்பிட மறந்து போகும் என விளக்குகிறார் இந்த அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர். இப்படிப் பட்டவர்களை கண்டறிந்து உடனடியாக மருத்துவ உதவிக்கோ, ஆலோசனைக்கோ வழி செய்தல் அவசியம்.

இன்றைய அதிவேக இணைய இணைப்புகளும், கம்பியில்லா இணைய இணைப்புகளும் இத்தகைய அடிமைத் தனங்களை இன்னும் அதிகப்படுத்துகின்றன. இணையத்தில் கிடைக்கும் எல்லையற்ற பாலியல் படங்களும், தகவல்களும், கதைகளும் பல்வேறு தரப்பினரையும் சிற்றின்பச் சிறைக்குள் லாவகமாய்ப் பூட்டி விடுகின்றன.

தாழ்வு மனப்பான்மையுடன் உலவும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இணையம் ஒரு போலியான தைரியத்தைக் கொடுத்து முகம் தெரியாத பலருடன் உரையாட வைக்கிறது. எனவே இவர்கள் இணைய வாழ்க்கையில் ஹீரோக்களாய் தங்களைப் பாவித்துக் கொண்டு உலாவருகின்றனர். இத்தகையோர் சராசரி வாழ்க்கைக்குத் திரும்புவதை விரும்புவதில்லை என கனடாவைச் சேர்ந்த உளவியலார் ஒருவர் தெரிவிக்கிறார்.

இணையத்தில் ஒரு துணையை வைத்துக் கொண்டு தொடர்ந்து அவர்களுடன் உரையாடுவதும் முகம் தெரியா பாலியல் உறவுகளைத் தொடர்வதும் மனதளவில் வாழ்க்கைத் துணைக்கு துரோகம் இழைப்பதே. இதை மறைக்க பொய்பேசுவதும், திருட்டுத் தனமாய் இணையத்தில் புகுவதும் என குடும்ப வாழ்க்கையின் மதிப்பீடுகள் சிதைவடைகின்றன.

அலுவலகங்களில் கூட பணியாளர்கள் இணையத்தை அலுவலகத் தேவையை மீறி பல மணி நேரங்கள் பயன்படுத்துவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. சுமார் எழுபது விழுக்காடு பேர் அலுவலகங்களில் இணையத்தை அலுவலகம் சாராத பணிகளுக்காய் பயன்படுத்துவதாய் சமீபத்தில் ஒரு ஆய்வு தெரிவித்திருந்தது.

இணையத்தை அதிகம் பயன்படுத்துவோரில் 24 விழுக்காட்டினர் அது தங்கள் வாழ்வில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதை ஒத்துக் கொள்கின்றனர். உலக அளவிலான கருத்துக் கணிப்பு ஒன்று இணையம் பயன்படுத்துவோரில் 50 விழுக்காடு குடும்பங்களில் உறவு விரிசல், சண்டை, அமைதியின்மை என பிரச்சனைகள் தலைதூக்க இணையம் காரணமாய் இருப்பதாய் தெரிவிக்கிறது.

இணையத்தைப் பயன்படுத்த ஆரம்பிப்பவர்களில் சுமார் 11 விழுக்காடு பேர் இணைய அடிமைகளாக மாறி விடுவதாகவும் ஒரு அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் மட்டுமே சுமார் 22 கோடி பேர் இணைய இணைப்பு வைத்திருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். எனில் உலகெங்கும் எந்தனை கோடி பேர் இணையம் பயன்படுத்துகின்றனர், அவர்களில் பதினோரு விழுக்காடு என்பது எத்தனை கோடி என கணக்கிட்டால் இந்த பாதிப்பின் வீரியம் சிறிதல்ல என்பது புலனாகும்.

இணையத்தில் இப்போது உரையாடல் பகுதிகளில் உலவுவோரில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். ஆண்களே அதிகம் நேரத்தைக் கரைத்துக் கொண்டிருந்த இந்த பகுதிகளில் பெண்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருப்பது எல்லா பாலினரையும் வசப்படுத்தும் வலிமை இணையத்துக்கு இருப்பதையே படம் பிடிக்கிறது.

கல்வியில் தோல்வி, திருமண வாழ்வில் தோல்வி, சுய முன்னேற்றத்தில் தோல்வி, அலுவலில் தோல்வி என பல்வேறு தோல்விகளை தோளில் சுமத்தும் இந்த இணைய அடிமைத்தனம் மன அழுத்தம், மாயை வாழ்க்கை என பல்வேறு உளவியல் சிக்கல்களையும் வருவித்து விடுகிறது.

மேலை நாடுகளில் பதினாறு வயதுக்கு உட்பட்ட பல பதின் வயதினர் பாலியல் அடிமைகளாக இருக்கின்றனர். அதாவது நேரடியாக பாலியல் தவறுகளில் ஈடுபடாமல் இணணயத்தில் உரையாடல்களிலும், சிற்றின்பப் பேச்சுகளிலும் சிக்கி அடிமைத்தனத்துக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.

இணையத்துக்கு அடிமையாபவர்களில் 54 விழுக்காட்டினர் மன அழுத்தத்துக்கும், போதை போன்ற அடிமைத்தனத்துக்கும் தள்ளப்படுவதாக ஒரு அதிர்ச்சியூட்டுகிறது ஒரு ஆய்வு.

தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்ப்பதைப் போல ஒரு பழக்கம் தானே என பலர் இதை இலகுவாகக் கணிப்பதுண்டு. ஆனால் தொலைக்காட்சியைப் பொறுத்தவரை ஒளிபரப்புபவற்றை மட்டுமே பார்க்க வேண்டிய கட்டாயம் பார்வையாளனுக்கு உண்டு. ஆனால் இணையம் அப்படியல்ல. விரும்புவதைத் தேடிச் சென்று பெற்றுக் கொண்டே இருக்கலாம் என்பதும், வாழ்வைச் சீரழிக்கும் சிற்றின்பச் சங்கதிகளின் சங்கமமாக இருக்கிறது என்பதும் இணையம் தொலைக்காட்சியைப் போலன்றி மிக மிக ஆழமான பாதிப்பை சமூகத்தில் ஏற்படுத்தக் கூடியது என்பதை வலுப்படுத்துகிறது.

திரைப்படங்களுக்கு ஒரு முடிவு உண்டு, நாவல்களுக்கும் ஒரு கடைசிப் பகுதி உண்டு, தொலைக்காட்சிக்கும் போரடித்துப் போகும் ஒரு நிலமை உண்டு. ஆனால் இணையம் உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப உங்களை உள்ளிழுத்துக் கொண்டே இருக்கும் ஒரு வசிய வலை.

இதை ஒரு தனி மனித பாதிப்பாய் மட்டுமே கருதிக் கொள்வது இந்தப் பாதிப்பின் வீரியத்தைப் புரிந்து கொள்ளாமையேயாகும். இணையத்தை இன்றைய பெரும்பாலான பதின் வயதினரும், இளைஞர்களும் பயன்படுத்துகின்றனர். இவர்கள் இணையத்தில் செலவிடும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க, அவர்களுடைய சமூகப் பங்களிப்பு குறைகிறது. ஒரு பலவீனமான சமூக கட்டமைவு உருவாக இணைய அடிமைத்தனம் மறைமுகமாய் தூண்டுகிறது. எனவே இந்த அடிமைத்தனம் ஒரு சமூக அவலம் என்பதை உணர்தல் அவசியம்.

இணைய அடிமைத்தனம் நமது இளைய தலைமுறையினரை ஒட்டு மொத்தமாய் செல்லாக்காசுகளாக்கி விடும் அபாயத்திலிருந்து தப்பிக்க பெற்றோர், வழிகாட்டிகள் விழிப்புடன் இருத்தல் அவசியம். பதின் வயதினர் இணைய அடிமைகளாவதிலிருந்து தடுக்க இவற்றைக் கடைபிடிக்கலாம்.

• இணைய அடிமைத்தனமும் மற்ற அடிமைத்தனங்களும் ஒரே போல வீரியமுடையவை என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும். வீட்டிலே தானே இருக்கிறான், அறையில் தானே எப்போதும் இருக்கிறான் என அலட்சியமாய் இருக்கக் கூடாது.

.
• அத்தியாவசியத் தேவை இல்லாத போது இணையத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். கொஞ்ச நேரமே இணையம் பயன்படுத்துவோருக்கு இணைய அடிமைத்தன சிக்கல் உருவாவதில்லை. எனவே மிகக் குறைந்த நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த அனுமதித்தல் சிறப்பானது.

.
• சமூக விழாக்கள், விளையாட்டுப் பயிற்சிகள் என பதின் வயதினர் யதார்த்த நிகழ்வுகளில் அதிகம் ஈடுபட உற்சாகப்படுத்த வேண்டும். உடற்பயிற்சிகள் செய்ய அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
• குடும்ப உரையாடல்களை அதிகப்படுத்த வேண்டும். குழந்தைகளில் வாழ்வில் நடந்த சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுடைய எதிர்பார்ப்புகளைத் தெரிந்து கொள்ளவும் குடும்ப உரையாடல்கள் வழிவகுக்கும். இவை பதின் வயதினர் வழி தவறிச் செல்லாமல் இருக்க உதவும்

.
• இரகசியமாய் இணையத்தில் பதின் வயதினர் உலவ அனுமதி மறுக்க வேண்டும். முடியாத பட்சத்தில் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். பதின் வயதினர் எந்தெந்த தளங்களுக்குச் செல்கின்றனர் என்பதைக் கண்காணித்தல் நல்லது.

.
• கணினி அறிவு அதிகம் உடைய பெற்றோரெனில் சந்தையில் கிடைக்கும் ஃபில்டர் மென்பொருட்கள் வாங்கி கணினியில் நிறுவலாம். இவை தேவையற்ற இணைய தளங்களைத் தடுக்கும்.

.
• இணையத்தில் தொலைபேசி எண்கள், வீட்டு விலாசம், கடன் அட்டை எண்கள், புகைப்படங்கள் போன்றவற்றை தரக்கூடாது என பதின் வயதினரை எச்சரிக்க வேண்டும். இணைய சூதாட்டங்கள், இணைய விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபட குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பது நல்லது.

.
• தேவையில்லையெனில் பிராண்பேண்ட் இணைப்புகள் வாங்காமல் இருக்கலாம். டயலப் எனப்படும் குறைந்த வேக இணைப்புகளைப் பயன்படுத்துவது இணைய அடிமைத்தனத்திலிருந்து பெருமளவுக்கு விடுதலை தருகிறது.

.
• குடும்பமாக அவ்வப்போது இணையமே இல்லாத இயற்கைச் சூழல் நிறைந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம்.

.
• நண்பர்கள், புத்தகங்கள் என நல்ல வகையில் நேரத்தைச் செலவிட உற்சாகப்படுத்துதல். நல்ல நண்பர்களை வீட்டுக்கு அழைத்து நல்ல உரையாடல்களை ஊக்கமூட்டலாம்.

எல்லா வினைக்கும் அதற்குச் சமமான எதிர் வினை இருக்கிறது எனும் நியூட்டனின் விதியை இணையமும் நிரூபிக்கிறது. கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்பதை இளம் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

நிலவும், சுட்டிக் காட்டும் விரலும்...........

, , , ...

அறிவு முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. ஆர்வம் இருக்குமானால் அறிவைப் பெறுவதும் இன்றைய காலத்தில் பெரிய விஷயமல்ல. புத்தகங்களில் இருந்து அறிவு கிடைக்கிறது. அறிந்தவர்களின் பேச்சில் இருந்து அறிவு கிடைக்கிறது. இண்டர்நெட் போன்ற விஞ்ஞான வளர்ச்சி சாதனங்கள் மூலமாகவும் அறிவு கிடைக்கிறது. ஆனால் அறிந்து கொள்வது மட்டுமே போதுமா? அது ஞானமாகி விடுமா?

டான் மில்மன் என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் தன் ஆன்மீக குருவாக ஒரு கேஸ் ஸ்டேஷனில் பணி புரியும் ஒரு வயதான மனிதரை ஏற்றுக் கொண்டிருந்தார். பணி சாதாரணமானதென்றாலும் அந்த மனிதரின் பக்குவம், பேச்சு, நடவடிக்கை எல்லாம் அவரை வித்தியாசப்படுத்தி ஆன்மீக முதிர்ச்சியைக் காட்டியதால் அவருக்கு சாக்ரடீஸ் என்ற பெயரிட்டு அழைத்தார்.

ஒரு முறை சாக்ரடீஸ் காரைத் துணியால் துடைத்துக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் டால் மில்மன் கேட்டார். "சாக்ரடீஸ், அறிவுக்கும் ஞானத்திற்கும் இடையே என்ன வித்தியாசம்?".

சாக்ரடீஸ் சொன்னார். "காரை எப்படித் துடைப்பது என்று அறிந்து வைத்திருப்பது அறிவு. அப்படியே துடைப்பது ஞானம்"

எதையும் அறிந்து கொள்ள ஆர்வமும், முயற்சியும் போதும். ஆனால் அறிந்தபடி நடப்பது அவ்வளவு சுலபமல்ல. எது சரி என்று அறிவது அறிவு என்றால், அந்த சரியான பாதையில் செல்வது ஞானம். எது சிறந்தது என்று அறிவு என்றால், அப்படிச் சிறப்பாக வாழ்வது ஞானம்.

அறிவுக்கு துல்லியமான அளவுகோல் இருக்கிறது. இவர் இத்தனை நூல்கள் படித்திருக்கிறார், இவர் இத்தனை விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறார் என்று சரியாகச் சொல்ல முடியும். ஆனால் ஞானம் அப்படி மேம்போக்காக சுலபமாக அளக்கக் கூடியதல்ல. உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே உணர முடியும். அதனால் தான் அறிவாளிகளை அடையாளம் கண்டு கொள்ள முடிந்த அளவுக்கு நம்மால் ஞானிகளை அடையாளம் காண முடிவதில்லை.

அதன் விளைவு ஆன்மீக அறிவாளிகளை எல்லாம் ஞானிகள் என்று கணிக்கும் தவறுகளை செய்து விடுகிறோம். 'அவர் நான்கு வேதங்களையும் படித்தவர், மகா ஞானி' என்று பலர் சொல்லக் கேட்கலாம். வேதங்களைப் படித்தவர் என்பது உண்மை, ஆனால் ஞானி என்பது அனுமானம் மட்டுமே. வேதங்களைப் படித்ததால் மட்டுமே ஞானியாக விட முடியாது. படித்தது உணரப்பட்டு வாழ்க்கையில் வெளிப்பட்டால் மட்டுமே ஞானம் ஆகும். அது வரை அவருக்கு 'நான்கு வேதங்களைப் படித்தவர்' என்ற அடைமொழி மட்டுமே பொருந்தும். இந்த சூட்சுமத்தை அறியாமல் ஆன்மீக அன்பர்கள் எத்தனை பேரை ஞானியாக நம்பி ஏமாறுகிறார்கள் என்பதற்கு நிகழ்காலத்தில் எத்தனையோ உதாரணங்களைப் பார்க்கலாம்.

உண்மையாக ஆன்மீகத்தில் ஈடுபாடுகள் உள்ளவர்களில் பலரும் கூட அறிவதையே ஞானமாக எண்ணித் தங்களை ஏமாற்றிக் கொள்கிறார்கள். படித்துக் கொண்டே போகிறார்கள். சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டே போகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலமாக தாங்கள் ஞானமார்க்கத்தில் வேகமாகப் போய்க் கொண்டு இருப்பதாக எண்ணுகிறார்கள். உண்மை அதுவல்ல என்பதே கசப்பான உண்மை. எத்தனை படித்தாலும், கேட்டாலும் ஒரு சிறு அம்சத்தைக் கூட பின்பற்ற முடியவில்லை என்றால் அந்த அறிவு வியர்த்தமே. எல்லாம் தெரியும் என்கிற தவறான அகங்காரம் மட்டுமே அந்த அறிவின் பலனாக இருக்கும்.

நல்ல விஷயங்களைப் படித்தோ கேட்டோ அறிந்தவுடன் நாம் செய்யக்கூடிய ஒரே உருப்படியான விஷயம் என்னவென்றால் இதை நம் வாழ்வில் எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்று சிந்தித்து நடைமுறைப் படுத்துவது தான். அப்போது தான் அது அவ்வளவு சுலபமல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் திரும்பத் திரும்ப அதை சிந்தித்து விடாமுயற்சியுடன் நடைமுறைப்படுத்தும் போது தான் ஞானம் சித்தியாகிறது. அந்த அறிவு வாழ்க்கைக்குப் பயனுள்ளதாகிறது.

ஆதிசங்கரர் ஒரு அழகான உவமையைச் சொல்வார். "நிலவைச் சுட்டிக் காட்டும் விரலையே பார்த்துக் கொண்டு இருந்தால் நிலவை நாம் காண முடியாது". விரல் எங்கு சுட்டிக் காட்டுகின்றதோ அங்கு பார்ப்பதே ஞானம். கற்கும் அறிவு அந்த விரல் போல. அது நிலவு அல்ல. நிலவு என்கிற ஞானத்தைக் காண பார்வையை விரலில் இருந்து எடுத்து அது காட்டும் திசைக்குத் திருப்ப வேண்டும். கற்ற விஷயங்கள் சொல்லும் வழியில் நம் வாழ்க்கையைத் திருப்ப வேண்டும். அதுவே ஞானம்.

வேதங்கள், உபநிஷத்துகள், திருக்குறள், கீதை போன்ற வழிகாட்டும் நூல்கள், சுயமுன்னேற்றப் புத்தகங்கள் எல்லாம் விரல்களே. அவற்றையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு நிலவைக் கண்டு விட்டதாக திருப்தியடைவது நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வது போலத் தான். என்ன சொல்கின்றன என்றறிந்து அதன்படி வாழ ஆரம்பிப்பதே ஞானத்திற்கான ஆரம்பம்.

(Source:-http://www.enganeshan.blogspot.com/ )

யார் மாற வேண்டும்?

, , ,

ஒரு சமயம் இரண்டு அமெரிக்க போர்ப்படைக் கப்பல்கள் கடலில் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் பயணித்துக் கொண்டு இருந்தன. பனிமூட்டத்தினால் சில நாட்கள் தொடர்ந்து அவர்களுடைய பயணம் தாமதப்பட்டு வந்தது. ஒருநாள் இரவு கடும் பனிமூட்டத்தில் கடற்பகுதி மூடியிருந்ததால் முன்னால் சென்று கொண்டு இருந்த போர்ப்படைக் கப்பலின் மேற்தளத்தில் கப்பலின் கேப்டன் நின்று மேற்பார்வை இட்டுக் கொண்டு இருந்தார்.

அப்போது தொலைநோக்கி வழியாக கண்காணித்துக் கொண்டு இருந்த கடற்படை வீரர் கேப்டனிடம் சொன்னார். "ஐயா நாம் போகின்ற பாதையில் சற்று தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிகிறது. இன்னொரு கப்பலாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுகிறேன்"

"அது நின்று கொண்டு இருக்கிறதா இல்லை, நகர்கிறதா?"

"நகராமல் தான் இருக்கிறது"

"உடனடியாக அவர்களுக்கு சிக்னல் அனுப்பு. நமது கப்பல் போகின்ற வழியில் அது நிற்கிறது என்று தெரிவி. 20 டிகிரி விலகிப் போகச் சொல்."

அப்படியே சிக்னல் அனுப்பப் பட்டது. அங்கிருந்து உடனடியாக மறுமொழி வந்தது. "நீங்கள் 20 டிகிரி விலகிப் போவது நல்லது".

எரிச்சலடைந்த கேப்டன் சிக்னல் அனுப்பினார். "நான் கேப்டன் சொல்கிறேன். 20 டிகிரி விலகிப் போங்கள்"

மறுமொழி உடனடியாக வந்தது. "ஐயா நான் கப்பல்படையின் இரண்டாம் நிலை ஊழியன். தயவு செய்து 20 டிகிரி விலகிப் போங்கள்"

கேப்டனுக்கு ஒரு இரண்டாம் நிலை ஊழியன் இப்படி கீழ்படியாமல் நடந்து கொள்வது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. "இது போர்ப்படைக் கப்பல். உடனடியாக 20 டிகிரி விலகுங்கள்"

பதில் உடனடியாக வந்தது. "இது கலங்கரை விளக்கம்"

மறு பேச்சு இல்லாமல் போர்ப்படைக் கப்பல்கள் தங்கள் பாதையை 20 டிகிரி மாற்றிக் கொண்டன.

(இது அக்கப்பலில் பயணித்த கடற்படை வீரர் கடற்படையினரின் பத்திரிக்கையில் தெரிவித்து அதை ஸ்டீபன் கோவே தன் புத்தகம் ஒன்றில் மேற்கோள் காட்டியிருந்தார்).

ஒவ்வொருவர் வாழ்க்கைப் பாதையிலும் இப்படி சில கலங்கரை விளக்கங்கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. நம் விருப்பப்படி மாறவோ, நமக்காக விலகி வழி விடவோ செய்யாத சில இருக்கத்தான் செய்கின்றன. மாற்றவே முடியாத இது போன்ற குறுக்கீடுகள் வரும் போது நாம் தான் நம் பாதையை சற்று மாற்றிக் கொண்டு செல்ல வேண்டும். அதை விட்டு விட்டு நான் மாற மாட்டேன், அதை மாற்றியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து எதிர்த்து நின்றால் அது வடி கட்டிய முட்டாள்தனமாகவே இருக்கும்.

இப்படிப் பட்ட சூழ்நிலைகளில் தங்களை மாற்றிக் கொள்ள நேரிடுவது சிலருக்கு கௌரவக்குறைவாக தோன்றுவதுண்டு. மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கேப்டனுக்கு வந்த கோபம் போல "ஈகோ" பிரச்சினை எழுவதுண்டு. ஆனால் சந்தர்ப்பங்களின் தன்மை அறிந்து தெளிவுடன் மாறுவதும், வளைந்து கொடுப்பதும் பக்குவமேயன்றி தோல்வியல்ல.

ஒரு ஆங்கிலக் கவிஞன் கடவுளிடம் பிரார்த்தனை செய்தான். "கடவுளே! உலகில் மாற்ற முடிந்த விஷயங்களை மாற்றும் சக்தியையும், மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும், இந்த இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்து தெளியும் ஞானத்தையும் எனக்குத் தருவாயாக!"

கடவுளிடம் நாம் வேண்டுவதும் அதுவாகவே இருக்கட்டும்.


(Source:- http://www.enganeshan.blogspot.com/)

வெற்றிக்கு ஏழு குறள்கள்.............

, , ,

எல்லா சுயமுன்னேற்ற நூல்களையும் சேர்த்து சாராம்சத்தை சுருக்கமாக அறிய முற்படுகிறீர்களா? உங்களுக்கு திருக்குறள் தான் ஒரே புகலிடம். கடுகைத் துளைதேழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்ற வர்ணனை திருக்குறளைப் பொருத்த வரை சிறிதும் மிகையல்ல.

எந்த சூழ்நிலையானாலும் சரி அதைச் சமாளிக்க என்ன அறிவுரை வேண்டுமானாலும் ஒருவன் திருக்குறளில் இருந்து பெற்றுத் தெளிவடைய முடியும். ஆன்மீகம் ஆகட்டும், லௌகீகம் ஆகட்டும், அறம் ஆகட்டும், தொழில் ஆகட்டும், அமைதி ஆகட்டும், மகிழ்ச்சி ஆகட்டும் குழப்பாமல் வழி காட்டும் அறிவுப் பொக்கிஷம் திருக்குறள் தான்.

நீங்கள் வெற்றியடைய விரும்புகிறீர்களா? உங்களுக்குப் பல நூல்கள் படிக்க நேரமும் பொறுமையும் இல்லையா? உங்களுக்கு திருக்குறள் உதவும். அதிலும் நீங்கள் எல்லாக் குறள்களையும் படிக்க வேண்டியதில்லை. ஏழே ஏழு குறள்களை நினைவில் நிறுத்தி பின்பற்றுங்கள் போதும்.


1) எண்ணத்தில் உறுதி:

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியராகப் பெறின். (666)

நினைத்ததை நினைத்தபடி அடைபவர் யார் தெரியுமா? தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருப்பவர்கள் தான். எண்ணத்தில் உறுதி இல்லா விட்டால் அது செயலில் முடியாது. செயலில் முடியாத எண்ணங்கள் விதைக்காத விதைகள். மாறாத உறுதியான எண்ணம் தான் எல்லா வெற்றிக்கும் ஆரம்ப விதி

2) Think positive

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினினும் தள்ளாமை நீர்த்து. (596)

எண்ணுவதெல்லாம் உயர்வானதாகவே இருக்க வேண்டும். பாதகமான சூழ்நிலைகளிலும் உயர்வான எண்ணங்களை எண்ணுவதை விட்டு விடக் கூடாது. எண்ணமே வாழ்க்கை என்பது அனுபவ உண்மை. சாதகமான சூழ்நிலைகளில் பாசிடிவ் ஆகவும், உயர்வான எண்ணங்களையும் நினைப்பது பெரிய விஷயமல்ல. பாதகமான சூழ்நிலைகளிலும் அதே எண்ணங்களோடு இருப்பவன் தான் வெற்றியை தனதாக்கிக் கொள்கிறான்.

3) விடாமுயற்சி

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்கு செல்லாதது இல். (472)

தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்கு அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது எதுவும் கிடையாது. வெற்றிக்கு ஆயிரம் வழிகள் இருக்கலாம். நம் இயல்புக்குப் பொருந்துகிற வழியைத் தேர்ந்தெடுத்து அதற்கு அறிய வேண்டிய அனைத்தையும் அறிந்து அந்த வழியில் விடா முயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்.

4) இந்த ஐந்தில் கவனம் தேவை

பொருள்கருவி காலம் வினையிடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். (675)

வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தினையும் குழப்பம் இல்லாமல் சிந்தித்து செயல் புரிய வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றில் குழப்பம் இருந்தால் கூட அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும்.

5) இந்த நான்கைத் தவிருங்கள்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (605)

காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் இந்த நான்கும் கெடுகின்ற இயல்புடையவர்கள் விரும்பி ஏறும் மரக்கலம் என்கிறார் திருவள்ளுவர். வெற்றியடைய வேண்டுபவர்கள் தோல்விக்கான வாகனத்தில் பயணம் செய்யலாமோ?

6) இவை இரண்டும் வழுக்குப்பாறைகள்

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. (854)

ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும், யாருக்கும் எளியவன். வெற்றியின் உயரத்திற்குச் செல்பவர்கள் இந்த இரண்டு வழுக்குப் பாறைகளில் கவனமாக இருப்பது நல்லது. இல்லா விட்டால் இது வரை சாதித்தது எல்லாம் வீணாய்ப் போகும்.

7) இந்தப் பேருண்மையை மறக்காதீர்கள்

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை (659)

பிறர் வருந்துமாறு செய்து பெற்றதெல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய் விடும். நல்வழியில் வந்தவை தற்காலிகமாக இழக்கப்பட்டாலும் பின்னர் பயன் தரும். இந்த பிரபஞ்ச உண்மையை என்றுமே மறந்து விடாதீர்கள். வெற்றி என்பது எந்த வழியில் வருகிறது என்பது மிக முக்கியம். நேர்மையற்ற வழியில் மற்றவர் வயிறெரிந்து வருவதெல்லாம் நம்மை நிம்மதியாக இருக்க என்றுமே விடாது.

இந்த ஏழு குறள்களில் முதல் நான்கு வெற்றிக்கு வழி சொல்கின்றன. அடுத்த இரண்டும் தோல்வி தரக் கூடியவற்றில் எச்சரிக்கையாக இருக்கச் சொல்கின்றன. கடைசி குறள் வெற்றியின் நிறைவு நமக்கு என்றென்றைக்கும் நிலைக்க வேண்டுமானால் அது நியாயமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது

பின்பற்றி வெற்றி பெற வாழ்த்துக்கள்.


(Source:- http://www.enganeshan.blogspot.com/)

பொய்யைக் கண்டறிய சில வழிகள் !

, , , ...

( தமிழ் ஓசை - களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை)

பொய் பேசுபவர்களோடு பழகவும், இணைந்து பணியாற்றவும், வாழவும் வேண்டிய சூழல் எல்லோருக்குமே நேரிடுகிறது.

பொய் பேசுபவர்களிடம் அகப்பட்டு பணத்தையும், பொருளையும், நிம்மதியையும் இழந்து திரியும் மக்களைக் குறித்த செய்திகள் நாளேடுகளில் தினமும் இடம் பெறுகின்றன.

பொய் மெய்யுடன் கலந்து மெய்யும் பொய்யும் செம்புலப் பெயல் நீர் போல இன்று மனித பேரணியில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

பேசுவது பொய் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால் எப்படி இருக்கும் ? அதொன்றும் பெரிய வித்தையில்லை என்கிறார் பல ஆண்டுகாலம் அமெரிக்க காவல் துறையில் பணியாற்றிய நியூபெர்ரி என்பவர்.

ஒருவர் பேசுவது பொய்யா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க அவர் சில வழி முறைகளைச் சொல்கிறார்.

1. முதலில் பேசுபவர்களின் வார்த்தைகளைக் கவனியுங்கள். அதில் இருக்கும் தொடர்பற்ற, அல்லது இயற்கைக்கு முரணான செய்திகளை கவனமாய் கண்டறியுங்கள்.

முக்கியமாக மனித இயல்புகளுக்கு மீறிய வார்த்தைகளையும், நடக்க சாத்தியமற்ற கூறுகளையும் கண்டுணருங்கள்

2. உலகில் நான்கு விழுக்காடு பொய்யர்கள் மிகத் திறமை சாலிகள், மற்றவர்களைக் கண்டறிவது மிக மிகக் கடினம். மற்றவர்கள் எளிதில் மாட்டுவார்கள். பொய்யர்கள் என கருதும் நபர்களிடம், அவர்கள் எதிர்பார்க்காத ஒரு கேள்வியை எதிர்பார்க்காத நேரத்தில் கேளுங்கள். அவர்கள் பொய்யர்கள் என்றால் அந்த கேள்வியே அதைக் காட்டிக் கொடுத்து விடும்.

3. தெரிந்த நபர் எனில் அவருடைய இயல்புகளை வைத்து, அதில் தெரியும் மாற்றங்களை வைத்து அவரை கணக்கிடுங்கள். அமைதியான நபர் கலகலப்பாக இருப்பது போல் காட்டிக் கொள்வதும், கலகலப்பான நபர் சற்று அமைதியாய் இருப்பதும் நிகழ்ந்தால், ஏதோ செய்தி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

.
4. வெளிப்படுத்தும் உணர்வுகளை வைத்து எளிதில் இனம் கண்டு கொள்ளுங்கள். புன்னகையில் செயற்கை வாசமடிக்கிறதா ? நகைச்சுவை சொன்னால் உடனே சிரிக்காமல் இருக்கிறார்களா, நமது உரையாடலில் தேவையான உணர்ச்சிகள் வெளிப்படாமல் இருக்கிறதா ? இவையெல்லாம் பொய்யின் குழந்தைகள்.

.
5. திடீர் உணர்ச்சிகளை கவனியுங்கள். பெரும்பாலானவர்கள் எதையேனும் மறைக்க முயன்றால் கண நேரத்தில் அவர்களுடைய கண்களில் குற்றம் தோன்றி மறையும். பெரும்பாலும் காவல் துறையில் இருக்கும் திறமையான நபர்களால் மட்டுமே அதைக் கண்டு பிடிக்க முடியும் எனினும் கவனத்தில் கொள்வது நல்லது.

.
6. “நான் நினைக்கிறேன்”, “நான் நம்புகிறேன்” போன்ற உரையாடல்கள் பல வேளைகளில் பொய்யைச் சொல்ல பயன்படுத்தப்படும் வாக்கியங்கள். எனவே சூழலுக்கு ஏற்றபடி இந்த வார்த்தைகள் சொல்லும் பொருள் என்னவாய் இருக்கும் என கணித்துக் கொள்ளுங்கள்.

7. முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் என்னென்ன என்பதை கவனியுங்கள். சிலர் இல்லை என்று சொல்லும் போது அவர்களுடைய உடலசைவு “ஆம்” என்று சொல்லும். சிலர் ஒரே செய்தியை வேறு விதமாய் கேட்கும் போது வேறு விதமாய் பதிலளிப்பார்கள். அதை கவனியுங்கள்.

.
8. இயல்பாக இல்லாமல் இருக்கிறாரா என்பதை கவனியுங்கள். ஏதேனும் தவறு செய்துவிட்டவன் இயல்பாய் இருப்பதாய் காட்டிக் கொண்டாலும் இயல்பாய் இருப்பதில்லை.

.
9. பொய் சொல்பவர்கள் அல்லது உண்மையை மறைப்பவர்கள் தேவையற்ற நீண்ட விளக்கங்கள் கொடுப்பார்கள். ஆம், இல்லை என்னும் சிறு பதிலை எதிர்பார்க்கும் கேள்விக்குக் கூட அவர்கள் நினைத்திருக்கும் நீண்ட பதிலை சொல்கிறார்களா என கவனியுங்கள்.
பொய்யைக் கண்டறிய இது மிகவும் பயனளிக்கும்.

.
10. பேசும்போதெல்லாம் பொய்யே பேசுவார்கள் என்னும் எண்ணத்தோடு அணுகுதலும் தவறு. பொய் பேசுகிறார்கள் எனில் பேசுவது எல்லாமே பொய் என முடிவு செய்தலும் தவறு. ஒரு பொய் சொல்லப்பட்டால், அதை கண்டுணர்ந்தால், அதன் காரணத்தை அறிய முயலுங்கள்.
மேற்கூறிய செய்திகளெல்லாம் பொய்களைக் கண்டறியும், நிரூபிக்கப்பட்ட உண்மைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், குடும்ப உறவுகள் சார்ந்த சிக்கல்களில் சந்தேகக் கண்களை கழற்றி வைத்து விட்டு நம்பிக்கை கரம் கொண்டு அரவணைத்து நடப்பதே ஆரோக்கியமானது.

(Source:- http://xavi.wordpress.com/)

பெண்களும், மன அழுத்தமும்................

, , ,

ஒரு பெண்ணை சதாகாலமும் கணவனோ அல்லது சார்ந்திருக்கும் எவரோ திட்டிக்கொண்டே இருந்தால் என்ன நிகழும் ?. அவள் மிக மிகக் கொடிய மன அழுத்த நோய்க்குள் விழுவாள் என்கின்றது சமீபத்திய ஆய்வு ஒன்று.

மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் எழுபத்து ஐந்து விழுக்காடு மக்கள் பெண்கள் என்பது வெறுமனே புள்ளி விவரங்களைப் பார்த்து கடந்து செல்வதற்கானது அல்ல. அது நமது சமூகத்தின் மீதும், நமது கலாச்சாரக் கட்டமைப்புகளின் மீது கேள்விகளை எழுப்புவதற்கானது.

சமூகக் கட்டமைப்புகள் இன்னும் பெண்ணை முழுமையாய் அவளுடைய கோபத்தை வெளிக்காட்ட அனுமதிக்கவில்லை என்பதே உண்மை. அப்படி தனக்குள்ளேயே அடக்கப்படும் கோபம் மன அழுத்தத்தின் அடிப்படைக் காரணியாகி விடுகிறது.

ஒரு ஆண் தனது மன அழுத்தத்தை கோபத்தின் மூலமாகவோ, அல்லது தனக்கு விருப்பமான ஏதோ ஒரு வழியில் வெளியேற்றி விடுகின்றான். பெண்களுக்கு அத்தகைய வாய்ப்பு மிகக் குறைவாகவே வழங்கப்படுகிறது.

அவள் பெண் என்று கற்காலச் சமூகம் கட்டி வைத்த கோட்டைகளைத் தாண்ட முடியாமல், அதே அட்டவணைக்குள் தான் வாழ வேண்டி இருக்கிறது. இத்தகைய வரையறைகளைத் தாண்டும் போது ஆண்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதுவும் சமீப காலமாக அதிகரித்து வரும் மண முறிவுக்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநோய் மருத்துவர் ஒருவர்.

தனக்குள்ளேயே வெடித்துத் தன்னை அழிக்கும் மனக் கண்ணி வெடி ஒரு ரகமான மன அழுத்தத்தைப் பெண்களுக்குத் தருகிறது என்றால், தொழில் அழுத்தம், பணி சுமை, சுதந்திரமின்மை என பல செயல்கள் வெளியிலிருந்து தாக்குகின்றன.

பெண்களின் மன அழுத்தத்திற்கு உடலியல் ரீதியாகவும் காரணங்களும் பல உள்ளன. பெண்களுடைய ஹார்மோன்களின் சமநிலை ஆண்களைப் போல இருப்பதில்லை, வெகு விரைவிலேயே அதிக மாற்றத்தை அது சந்திக்கிறது. இயற்கை பெண்ணுக்கு அளித்திருக்கும் மாதவிலக்கு சுழற்சிகள் இதன் முக்கிய காரணமாய் இருக்கின்றன.

தான் பெண்ணாய் பிறந்து விட்டோமே எனும் சுய பச்சாதாபம் பல பெண்களுடைய வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் கொண்டு வருகின்றதாம். அதற்குக் காரணம் சமூகத்தில் ஒரு ஆணுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமும், சுதந்திரமும் பெண்ணுக்குத் தரப்படவில்லை என்பதும், அதை எடுக்க முயலும்போது அவள் முரட்டுத் தனமான கருத்துக்களால் முடக்கப்படுகிறாள் என்பதுமே.

நேரடியான மன அழுத்தம் பெரும்பாலும் மனம் சம்பந்தப்பட்டது. நம் மீது திணிக்கப்படுபவையோ, நம்மால் உருவாக்கப்படுபவையோ உள்ளுக்குள் உருவாக்கும் அழுத்தம் அது.

மகிழ்ச்சியாய் இருக்க முடியாத மன நிலை இத்தகைய மன அழுத்தத்தின் ஒரு முகம். ஆனந்தமாய் சுற்றுலா செல்லலாம் என அழைத்தாலும் சலனமில்லாமல் பதிலளிக்கும் மனம் அழுத்தத்தின் படிகளில் அமர்ந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.

மறை முகமாய் தாக்கும் மன அழுத்தம் உடல் வலிகளின் காரணமாக வரக் கூடும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக முதுகுவலி, கழுத்துவலி, வயிற்று வலி என வரும் வலிகள் இரவுத் தூக்கத்தைக் கெடுக்கின்றன. நிம்மதியற்ற சூழலையும், பல உபாதைகளையும் தந்து கூடவே மன அழுத்தத்துக்கும் விதையிடுகின்றன.

பெண்களுக்கு இத்தகைய மன அழுத்தம் வருவதற்கு அவர்களுடைய உடல் பலவீனமும் ஒரு முக்கிய காரணமாகி விடுகிறது.

ஒன்று மட்டும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். எந்த ஒரு மன அழுத்தத்தையும் எந்த ஒரு மருந்தும் முழுமையாய் குணமாக்கி விட முடியாது.

நம்மைச் சார்ந்து வாழும் சகோதரிகளின் மன அழுத்தத்திற்கான விதை நம் வார்த்தைகளிலிருந்தோ, செயல்களிலிருந்தோ விழுந்து விடாமல் கவனமாய் இருப்பது ஆண்களின் கடமை.

பெண்களும் சமூகம் என்பது ஆண்கள் மட்டுமான அமைப்பல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காற்றடித்தால் மூடிக் கொள்ளும் தொட்டாச்சிணுங்கி மனப்பான்மையிலிருந்து தைரியமாக சமூகத்தின் வீதிகளில் பழமை வாதிகளின் எதிர்ப்புகளுக்குப் பலியாகாமல் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

புரிதலும், அன்பு புரிதலும் கொண்ட, தேவையற்ற அழுத்தளுக்கு இடம் தராத, சின்ன சுவர்க்கங்களாக குடும்பங்கள் விளங்கினால், மன அழுத்தம் விடைபெற்றோடும் என்பதில் ஐயமேதும் இல்லை.

(Source:- http://xavi.wordpress.com)

தமிழின் பெருமை

1 = ஒன்று -one

10 = பத்து -ten

100 = நூறு -hundred

1000 = ஆயிரம் -thouand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்துநூறாயிரம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = நிகர்புதம் - one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 = கணம் -hundred billion

1000000000000 = கற்பம் -one trillion

10000000000000 = நிகற்பம் -ten trillion

100000000000000 = பதுமம் -hundred trillion

1000000000000000 = சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 = அன்னியம் -hundred zillion

1000000000000000000 = அர்த்தம் -?

10000000000000000000 = பரார்த்தம் --?

100000000000000000000 = பூரியம் -?

1000000000000000000000 = முக்கோடி -?

10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

உங்கள் மொழியில் எப்படி???

(Source:- http://ekaththalam.blogspot.com/2008/02/blog-post.html)
Download Opera, the fastest and most secure browser
December 2009
S M T W T F S
November 2009January 2010
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31