Skip navigation.

வாழ்க தமிழ்!வளர்க அதன் சிறப்பு!

வீழ்வது நாமாயினும் வெல்வது நம் தமிழ் மொழியாக இருக்கட்டும்!

Posts tagged with "small"

எது நாத்திகம்? (சிறுகதை)

, ,

"ஆனந்த் நீ ஒரே ஒரு தடவை வந்து அவரைப் பார். அப்புறம் நீ அவர் பக்தனாயிடுவாய்"

கதிர் இதைச் சுமார் நூறு தடவையாவது சொல்லியிருப்பான். கடைசியில் அவன் தொந்தரவு பொறுக்க முடியாமல் ஆனந்த் புவனகிரி சுவாமிகளைப் பார்க்கச் சம்மதித்தான்.

புவனகிரி சுவாமிகள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர். கீதையாகட்டும், திருவாசகமாகட்டும் சுவாமிகள் பேசும் போது எப்படிப்பட்ட மனதும் கரைந்து விடுமாம். பௌர்ணமி அன்று பூஜை முடிந்து அவர் கொடுக்கும் குங்குமத்திலும் விபூதியிலும் பலருக்கு குட்டிக் கிருஷ்ண விக்கிரகமும், லிங்கமும் கிடைத்திருக்கின்றனவாம். அவர் அன்று பூஜை செய்யும் போது அவர் தலைக்கு மேலே சில சமயம் ஏதோ ஜோதி தெரிவதுண்டாம். இப்படிப் பலரும் பல கதைகள் அவரைப் பற்றிச் சொன்னார்கள். கதிர் ஒரு முறை அவரை தரிசித்து விட்டு அவரது பரம பக்தனாகி விட்டான். அவரது பக்தராக அங்கீகரிக்கப் படுபவர்களுக்கு அவரது படம் டாலராகத் தொங்கும் செயின் ஒன்றைத் தருவாராம். முதல் சந்திப்பிலேயே அந்தச் செயினைக் கதிர் பெற்றுக் கொண்டு வந்து விட்டான். அன்றிலிருந்து தன் நண்பனையும் அவரிடத்திற்கு அழைத்துப் போக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறான்.

ஆனந்திற்கு இது போன்ற பௌர்ணமி பூஜை அற்புதங்கள் எல்லாம் ஆன்மீகத்திற்கு அவசியம் என்று தோன்றவில்லை. ஆகவே முடிந்த வரை அங்கு போவதைத் தள்ளிப் போட்டான். இன்று போய்த் தான் பார்ப்போமே என்று அவரது ஆசிரமத்திற்குக் கிளம்பியுள்ளான்.
நண்பர்கள் ஆசிரமத்தை அடைந்த போது அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. சுவாமிகள் ஒரு சிம்மாசனம் போன்ற நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். ஒரு பக்தர் அவருக்குப் பாத பூஜை செய்து கொண்டிருந்தார். அங்கு வரிசையாக சிலர் நிற்பதைப் பார்த்து ஆனந்த் கதிரிடம் விசாரித்தான்.

"அதுவா. அவர்களும் சுவாமிகளுக்குப் பாத பூஜை செய்ய நிற்கிறார்கள். ஆயிர ரூபாய் கட்டணும்" என்று சொன்ன கதிர் ஆனந்தின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு "அது... ஆசிரமத்தைப் புதுப்பிக்கிறாங்க. அதுக்காகத் தான் வாங்கறாங்க" என்றான்.

சுவாமிகளின் பாத பூஜை முடிந்தது. அவர் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். அன்று பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயம் பற்றிப் பேசினார். பிழையில்லாமல் சமஸ்கிருத சுலோகங்களும் பெரும் தத்துவ சிந்தனைகளும் அவர் வாயிலிருந்து சரளமாக வந்தன. 'ஸ்திதப் ப்ரக்ஞன்' யாரென அழகாக விவரித்தார். எவனொருவன் தன் ஆசைகளை எல்லாம் களைகிறானோ, இன்ப துன்பங்களை ஒரு போல பாவிக்கிறானோ, பற்றுதலோ, கோபமோ, பயமோ இல்லாதிருக்கிறானோ அவனே ஸ்திதப் ப்ரக்ஞன் என்று சொல்லச் சொல்ல அவர் பின்னால் ஓடிக் கொண்டிருந்த டேபிள் ·பேன் திடீரென்று தன் ஓட்டத்தை நிறுத்தியது. அவர் பேச்சும் நின்றது. ஒரு சிஷ்யன் அதைச் சரி செய்ய முயன்று முடியாமல் சிறிது நேரம் திணறினான். வியர்த்து தவித்துப் போன சுவாமிகள் அவனை எரிச்சலுடன் பார்த்தார். வேறொருவன் எங்கிருந்தோ ஓடோடி வந்து சரி செய்யும் வரை ஏதோ நடக்கக் கூடாத விபரீதம் நடந்து விட்டது போன்ற ஒரு உணர்வுடன் கூட்டத்தினர் அந்தக் காட்சியைப் பார்த்தனர்.

ஒரு வழியாக ·பேனும் ஓட அவர் பேச்சும் தொடர்ந்தது. அந்த சமயத்தில் ஒரு பிரபல பத்திரிக்கை நிருபர் வந்து சுவாமிகளைப் படம் எடுக்கத் துவங்கினார். அந்த நிருபர் தன் பணியை முடிக்கும் வரை சுவாமிகளின் பேச்சு கீதையிலும் கண்கள் நிருபர் மீதும் இருந்தன. பின்பு அறுபத்தி ஏழாவது சுலோகத்தை அழகாகச் சொன்னார். 'கடலில் உள்ள ஓடத்தை பெருங்காற்று அடித்துச் செல்வது போல தன்வசப்படுத்தாத ஒரு புலனும் மனிதனின் புத்தியை கவர்ந்து செல்கிறது.'

ஆனந்த் கதிரைப் பார்த்தான். கதிர் பக்தியுடன் சுவாமிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சுவாமிகளின் பேச்சு முடிந்தவுடன் கூட்டத்திலிருந்து பலரும் ஒவ்வொருவராகச் சென்று சுவாமிகளின் பெருமைகளைப் பேசினார்கள். அவரை ஆன்மீக சிகரம் என்றார்கள். மஹா யோகி, மகரிஷி என்றெல்லாம் அழைத்தார்கள். சுவாமிகள் மலர்ந்த முகத்துடன் அதை ரசித்ததாகத் தோன்றியது. அப்படிப் பேசிய சில பக்தர்களை அழைத்து தனது பட டாலர் உள்ள செயினையும் தந்து ஆசிர்வதித்தார். ஆனந்த் எதிர்பாராத விதமாக கதிரும் எழுந்து போய் பேசினான். ஒரே சந்திப்பில் தான் சுவாமிகளின் பக்தனாகியது எப்படி என்று விவரித்தான். அதோடு அவன் நிறுத்த்¢யிருக்கலாம். தொடர்ந்து வேண்டிக் கொண்டான். "என் நண்பன் ஆனந்தும் இங்கு வந்திருக்கிறான். அவனையும் தங்கள் பக்தனாக ஏற்றுக் கொண்டு ஆசி வழங்கும்படி சுவாமிகளை நமஸ்கரித்து கேட்டுக் கொள்கிறேன்"

ஆனந்த் பெரிய தர்மசங்கடத்தில் சிக்கித் தவித்தான். கதிர் அவனருகே வந்து அவனைப் போகச் சொல்ல, எல்லோரும் அவனையே பார்த்தார்கள். அவனது தயக்கத்தைக் கூச்சம் என்று எடுத்துக் கொண்ட சுவாமிகள் பெருந்தன்மையோடு அவனை பேச அழைத்தார். வேறு வழியில்லாமல் ஆனந்த் போனான்.

"மன்னிக்கணும். எனக்கு உங்கள் பக்தனாகும் எண்ணமே இல்லை. நான் பேசினால் இதற்கு முன்னால் பேசியவர்கள் பேசிய மாதிரி இருக்காது. என் மனதில் பட்டதை அப்படியே சொல்வேன். அது நல்லாயிருக்காது" என்று வெளிப்படையாக அவன் சொன்னவுடன் சுவாமிகள் அந்தப் பத்திரிக்கை நிருபரைப் பார்த்து புன்னகை செய்த படி "பரவாயில்லை. சொல்" என்றார். அவனது எந்த விமரிசனத்திற்கும் வேதங்களில் இருந்தும் ஆன்மீக இலக்கியங்களில் இருந்தும் பல எடுத்துக் காட்டுகள் சொல்லி அந்த நிருபரைப் பிரமிக்க வைக்க ஒரு சந்தர்ப்பமாக இதை அவர் நினைத்த மாதிரி இருந்தது.


அதற்கு மேல் ஆனந்த் தயங்கவில்லை. "சுவாமி. ஒரு சராசரி மனிதனுக்குத் தேவையான பணம், சௌகரியங்கள், மற்றவர்களுடைய அங்கீகாரம் எல்லாம் உங்களுக்கும் தேவைப்படுகிறது என்பதை இங்கே நானே கண்கூடாகப் பார்த்தேன். ஒரு மகரிஷி ஸ்தானத்தில் உங்களை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. "

அவன் இப்படிச் சொல்வான் என்று யாருமே அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. சுவாமிகளின் முகம் கறுத்தது. அவரது சீடர்களில் ஒருவர் அவனுக்குப் பதில் சொல்ல விரைந்து வந்தார்.

"வேதங்களையும் உபந்¢ஷத்துகளையும், தேவாரம் திருவாசகங்களையும் கரைத்துக் குடித்த சுவாமிகளை சாதாரண மனிதன் என்று சொல்வது குருடன் ஓவியனைக் குறை சொல்வது போலத்தான். அவர் அளவுக்கு வேண்டாம், அவருக்குத் தெரிந்த இந்த ஆன்மீக நூல்களில் இருந்து கொஞ்சமாவது உன்னால் சொல்ல முடியுமா தம்பி"

சுவாமிகள் முகம் மலர்ந்தது. ஒருசிலர் கை தட்டினார்கள்.

ஆனந்த் புன்னகை மாறாமல் பதில் சொன்னான். "என்னால் முடியாது என்று நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இத்தனையும் என் கம்ப்யூட்டர் டிஸ்கின் உள்ளே இருக்கின்றன. அதற்காக நான் என் கம்ப்யூட்டரைக் கும்பிட முடியுமா? இதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் மகரிஷி ஆகி விடுவதில்லை. இந்த போதனைகளை ஒவ்வொரு கணமும் தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுபவர் தான் மகரிஷி. அந்தப் பெயருக்குப் பொருத்தமாய் ஒருவர் திருவண்ணாமலையில் ஒரு காலத்தில் இருந்தார்...."

மேலே அவனைப் பேச விடாமல் சுவாமிகளின் சில பக்தர்கள் கத்த ஆரம்பித்தனர். அந்த ஆசிரமம் கிட்டத் தட்ட ஒரு மினி சட்டசபையாக மாறியது. ஆனந்த் அமைதியாக அங்கிருந்து வெளியேறினான். கதிர் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, ஓரிருவர் ஆனந்தைத் தொடர்ந்து வெளியேறினார்கள்.

கோபத்தில் முகம் சிவக்க புவனகிரி சுவாமிகள் சொன்னார். "இது போன்ற நாத்திகம் பேசும் மூடர்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. இனி இது போன்ற ஆட்களை அழைத்து வந்து யாரும் ஆன்மிகத்தைக் களங்கப் படுத்த வேண்டாம்".

(Soruce:- http://enganeshan.blogspot.com/2007/10/blog-post_1813.html)

கணினி தொழில்நுட்பத்தில் குட்டிக் கதைகள்...........

, , ,


கணினி தொழில்நுட்பம், நிரல் (Programme) உருவாக்குதல் குறித்து சுவையான குட்டிக் கதைகள் உள்ளன. ஜென் கதைகளின் பாணியில் இருக்கும் இவை ஜெஃப்ரி ஜேம்ஸ் எழுதிய "தி தாவோ ஆஃப் புரோகிராமிங்" என்ற தொகுப்பில் இருக்கின்றன.

மானேஜரைக் காப்பாற்றிய புரோகிராமர்

ஒரு கம்பெனியில் ஒரு மானேஜரை வேலை விட்டுத் தூக்குவது என்று முடிவெடுத்தார்கள். ஆனால் அவருக்குக் கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு புரோகிராமர் புதிதாக ஒரு புரோகிராமை எழுதினார். அந்த புரோகிராம் பிரபலமடைந்து நிறைய விற்பனை ஆனது. எனவே இதன் விளைவாக அந்த மானேஜரின் தலை தப்பித்தது.

மானேஜர் அந்த புரோகிராமருக்கு போனஸ் கொடுக்க முயற்சி செய்தார். புரோகிராமர் வாங்க மறுத்துவிட்டார். "சுவாரஸ்யமான கான்செப்ட்டாக இருக்கிறதே என்றுதான் அந்த புரோகிராமை எழுதினேன். எனவே நான் ஒரு சன்மானத்தையும் எதிர்பார்க்கவில்லை" என்றார் புரோகிராமர்.

இதைக் கேட்ட மானேஜர், "இந்த புரோகிராமர் அற்பமான பதவியில் இருந்தாலும் ஒரு ஊழியனின் கடமையை ஒழுங்காகப் புரிந்து வைத்திருக்கிறான். இவனை மானேஜ்மென்ட் கன்சல்டன்ட் என்கிற மகத்தான பதவிக்கு உயர்த்துவோம்" என்றார்.

மானேஜர் புரோகிராமரிடம் இதைச் சொன்னபோது அவர் மீண்டும் மறுத்து இப்படிச் சொன்னார் : "நான் புரோகிராமிங் செய்வதற்காகத்தான் உயிர் வாழ்கிறேன். எனக்குப் பதவி உயர்வு கொடுத்துவிட்டால் நான் மற்றவர்கள் நேரத்தை வீணாக்குவதைத் தவிர உருப்படியாக வேறெதுவும் செய்ய மாட்டேன். சரி, நான் போகலாமா? நான் ஒரு புரோகிராம் எழுதிக் கொண்டிருக்கிறேன்."

வேலை நேரம்

ஒரு மானேஜர் தன் புரோகிராமர்களிடம் சொன்னார் : "உங்கள் வேலை நேரத்தைப் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இனிமேல் நீங்கள் காலை ஒன்பது மணிக்கு வந்து மாலை ஐந்து மணிக்குக் கிளம்ப வேண்டும்." எல்லா புரோகிராமர்களும் இதைக் கேட்டு கடுப்பானர்கள். அவர்களில் பலர் உடனே ராஜினாமா செய்தார்கள்.


எனவே அந்த மானேஜர் சொன்னார் : "ஓ.கே., அப்படியென்றால் உங்கள் வேலை நேரத்தை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் ப்ராஜெக்ட்களை நேரத்தில் முடித்துவிட வேண்டும்." இந்த ஏற்பாட்டில் திருப்தி அடைந்த புரோகிராமர்கள், பகலில் வந்து அடுத்த நாள் அதிகாலை வரை வேலை செய்யத் தொடங்கினார்கள்.

ஒரு ப்ராஜெக்ட்டை முடிக்க ஆகும் நேரம்

ஒரு மானேஜர் ஒரு டாப் புரோகிராமரிடம் போனார். ஒரு புதிய அப்ளிகேஷனை உருவாக்குவதற்கு என்னென்ன தேவை என்ற விபரங்கள் அடங்கிய டாக்குமென்ட் ஒன்றைக் காட்டினார். "இந்த சிஸ்டத்தை வடிவமைக்க ஐந்து புரோகிராமர்களை நியமித்தால் இந்த வேலை முடிய எவ்வளவு காலம் ஆகும்?" என்று டாப் புரோகிராமரைக் கேட்டார்.

"ஒரு வருடம் ஆகும்" என்று டாப் புரோகிராமர் உடனே பதிலளித்தார்.

"ஆனால் இந்த சிஸ்டத்தை நாம் உடனடியாக முடித்தாக வேண்டுமே! நான் அதற்கு 10 புரோகிராமர்களைப் போட்டால் எத்தனை நாள் ஆகும்?" என்றார் மானேஜர்.

டாப் புரோகிராமர் எரிச்சல் அடைந்தார். "அப்படியென்றால் இரண்டு வருடம் ஆகும்" என்றார்.

"100 புரோகிராமர்களை நியமித்தால்?"

டாப் புரோகிராமர் தோளைக் குலுக்கினார். "பிறகு அந்த டிசைனை செய்து முடிக்கவே முடியாது."

உண்மை எதில் இருக்கிறது?

ஒரு புரோகிராமிங் ஞானி உண்மையின் தன்மையைப் பற்றி தனது இளம் சீடர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

"உண்மை என்பது எல்லா சாஃப்ட்வேர்களிலும் பொதிந்திருக்கிறது - அவை எவ்வளவு அற்பமானவையாக இருந்தாலும் சரி" என்றார் ஞானி.

"உண்மை கையடக்க கால்குலேட்டரில் இருக்கிறதா?" என்றான் ஒரு சீடன்.

"இருக்கிறது" என்றார் ஞானி.

"உண்மை ஒரு வீடியோ கேமில் இருக்க முடியுமா?" என்றான் அந்த சீடன்.

"அது வீடியோ கேமிலும் இருக்கிறது" என்றார் ஞானி.

"உண்மை கம்ப்யூட்டரில் இருக்கும் chip-ல் இருக்கிறதா?"

இதைக் கேட்ட ஞானி செருமிக்கொண்டார், லேசாக நெளிந்தார். பிறகு சொன்னார் : "இன்றைய பாடம் முடிந்தது."

பெரிய கம்பெனி

ஒரு சீடன் தனது புரோகிராமிங் குருவைக் கேட்டான் : "ஒரு கம்பெனி மற்ற கம்பெனிகளை விட மிகப் பெரிதாக இருக்கிறது. குள்ளர்களுக்கு இடையில் ஒரு ராட்சஸன் போல் அது தனக்குப் போட்டியான நிறுவனங்களை விட மிகவும் உயர்ந்திருக்கிறது. அதன் பிரிவுகளில் ஒன்றை எடுத்துக் கொண்டால் கூட அந்த ஒரு பிரிவே தனி கம்பெனியாக இயங்கலாம். இது எப்படி நடக்கிறது?"

குரு பதில் சொன்னார் : "ஏன் இப்படி முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கிறாய்? அந்த கம்பெனி ரொம்பப் பெரிதாக இருப்பதால் பெரிதாக இருக்கிறது, அவ்வளவுதான். அது ஹார்டுவேரை மட்டும் தயாரித்தால் யாரும் அதை வாங்க மாட்டார்கள். அது சிஸ்டம் மெயின்டெனன்ஸ் மட்டும் செய்தால் மக்கள் அந்த கம்பெனியை ஒரு வேலைக்காரனைப் போல் நடத்துவார்கள். ஆனால் அது இந்த எல்லா விஷயங்களையும் சேர்த்து செய்வதால் மக்கள் அதைக் கடவுளைப் போல் நினைக்கிறார்கள்! அது போராட முயற்சி செய்யவில்லை. எனவே அது பிரயத்தனம் இல்லாமலே ஜெயிக்கிறது."

பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரையின் படைப்புகள்

, ,

சொல்லாதது

அவளுக்கு, சுந்தரி என்ற பெயர் காரணப் பெயராகவே அமைந்தது என்று எந்த இலக்கணப் பண்டிதரும் சொல்லவில்லை, சொல்வானேன்? மலரை எடுத்து வைத்துக் கொண்டு ஆஹா! என்ன மணம், எவ்வளவு இன்பம் என்று சொல்லாமலே, எவ்வளவு பேர், முகந்து ரசிக்கவில்லையா? சுந்தரியின் சிறு பிராயமுதலே அவளுடைய அழகைக் கண்டவர் களித்தனர். கடைவீதி போய்விட்டு திரும்புவதற்குள், கன்னத்திலே எத்தனையோ முத்தம், கையிலே பலவகைப் பண்டம் அப்பெண்ணுக்கு. பள்ளியில் பல நாள் ஆசிரியருக்குக் கோபம், பாடத்திலே அந்தப் பாவை நினைவைச் செலுத்தாததால், அப்படிப்பட்ட மாணவியை, முட்டாள், தடிக்கழுதை, உதைக்கிறேன் பார், என்று எவ்வளவோ வசைமொழி சொல்லலாம். ஆசிரியருக்கு அகராதியா தெரியாது? ஆனால் அவர் ஒரு நாளாவது, சொல்ல வேண்டுமென்று எண்ணியதை சொன்னதேயில்லை. புன்சிரிப்புடன் தலையை அசைப்பார், சுந்தரியின் முகத்திலே கொஞ்சம் பயம் தட்டுப்படும், அது ஒரு புதுவிதமான களையைத் தரும். அதை ரசிப்பார் ஆசிரியர். வேறு மாணவியின் காதை இழுப்பார், கன்னத்தைக் கிள்ளுவார், தலையைக் குட்டுவார், சுந்தரி மீது சுடுசொல் வீசமாட்டார், அந்த மலர் வாடி விடுமோ என்று நினைத்து.

"குட்டி பெரியவளானால் மகா ரூபவதியாக இருப்பாள். கண்களே போதும் ஆளை மயக்க, அந்தப் புன்சிரிப்பு இருக்கிறதே, அதுபோல நான் கண்டதேயில்லை. சுருண்டு கருத்து அடர்ந்து, காற்றிலே அலையும் அவளுடைய கூந்தல் இருக்கிறதே, அடடா என்ன நேர்த்தி, இலாவண்யம்" என்று, சுந்தரியின் பாலப்பருவ ரசிகர்கள் சொல்லவில்லையே தவிர, அவ்விதமும், அதற்கு மேலும் நினைக்காதவர்களே கிடையாது.

"சுந்தரி, நாமோ ஏழைகள், விதவிதமான துணிகள் உனக்குக் கிடையாது. நான் ஆப்பம் சுட்டு விற்று அதைக் கொண்டு தானே இரண்டு ஜீவன்கள் வாழ வேண்டும்! உன் தகப்பனோ, எங்கோ தேசாந்திரம் போய்விட்டான். நாம் என்ன செய்யலாமடி கண்ணே! சோற்றுக்கு ஊறுகாய் தான் உனக்கு வறுவல், கூட்டு, வடை எல்லாம்" என்று சுந்தரிக்கு அவளுடைய தாயார் தனபாக்கியவதி சொல்லவில்லை; சுந்தரிக்குத்தான் இது தெரியுமே, அந்த பச்சை மேல்சொக்காயும், பாக்குக் கலர் பாவாடையும், அவளுடைய சிவந்த மேனிக்கு அழகாகத்தான் இருந்தது. பம்பாய் நகர சீமை வாயிலும் அவளுக்கு எதற்கு? அழுமூஞ்சி அலமு, பொட்டைக் கண் பொன்னி, வழுக்கைத் தலை வனிதா, அவர்களுக்கு வேண்டும் இந்த மேனி மினுக்கிகள் என்று தனபாக்கியம் சொல்லவில்லை. ஆப்பம் சுட்டு விற்பவளுக்கு பணக்காரவீட்டுப் பெண்களைக் கேலி செய்யும் உரிமை உண்டா?

சுந்தரியின் வளர்ச்சியும், வீட்டிலே வறுமையின் முதிர்ச்சியும், ஒன்றை ஒன்று போட்டியிட்டன. இந்த அமளியின் இடையே, அவளுடைய அழகு வளர்ந்தபடி இருந்தது, எதையும் சட்டை செய்யாமல்.

"எனக்கு மட்டும் கொஞ்சம் சொத்து ஒரு சொந்த வீடு இருந்துவிட்டால், என் தங்கத்துக்கு ஏற்றவனாக ஒருவனைத் தேடிப் பிடித்துக் கலியாணம் செய்து வைக்க முடியும். கண்டேன் கண்டேன் என்று கைலாகு கொடுக்க எவரும் சம்மதிப்பார்கள். சுந்தரி, ஆப்பக்கடைகாரியின் பெண்ணாயிற்றே, எந்தத் தடியனோ, வெறியனோ, எவனோ ஒருவனுக்குத்தானே வாழ்க்கைப்பட்டாக வேண்டும்" என்று தனபாக்கியம் சொல்லவில்லை, அவளுடைய கண்ணீர், ஏற்கனவே தூசி நிரம்பிக் கிடந்த தலையணையை மேலும் அதிகமாக அழுக்காக்கி விட்டது.

"அழகான பெண், அடக்கமானவள், ஏதோ கொஞ்சம் படித்தும் இருக்கிறாள். ஏழைதான், இருந்தால் என்ன? நம் வீட்டில் உலாவினாலே போதும் கிருகலட்சுமியாக இருப்பாள். நமது பையனுக்கு ஏற்ற பொருத்தமான பெண் என்ன செய்வது? அவள் ஆப்பக்காரிக்கா பிறக்க வேண்டும்? அரசமரத்தை ஆறு வருஷம் சுற்றியும் பயனில்லாமல், அடுத்த தெருவிலே அழுதுகொண்டிருகிறாளே தாசில்தாரின் சம்சாரம் தில்லை, அவள் வயிற்றிலே பிறந்திருக்கக்கூடாதா? நமது பையனுக்குக் கலியாணம் செய்து கொள்ளலாமே" என்று லோகு முதலி சொல்லவில்லை. மனதிலே! இது போலப் பலமுறை அவர் நினைத்தார்; சொல்லவில்லை வெளியே. லோகு முதலி பணம் படைத்தவர், பெண் இழந்தவர். ஒரே மகன் அவருக்கு. ஒய்யாரமான பையன். அவனுக்குச் சுந்தரியிடம் மையல்.

"கனகு, ஏனப்பா, அடிக்கடி அந்த ஆப்பக்கடைக்கு போய் வருகிறாயாமே, அந்தப் பெண் சுந்தரியை நேசிக்கிறாயாமே" என்றும் லோகு முதலி சொன்னதில்லை. மகனிடம் இதுபோலப் பேசக்கூடாது என்ற சம்பிரதாயத்தினால்.

"எனக்கு என்னமோ அப்பா, அந்த கடைப் பக்கம் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது போய் வராவிட்டால், சந்தோஷம் உண்டாவதில்லை. அப்பா சுந்தரியின் அழகு என்னை என்ன பாடுபடுத்துகிறது தெரியுமா? தூக்கமே இருப்பதில்லை. தவறித் தூங்கினாலோ, கனவுதான். கனவிலே அந்த கிளிமொழியால் பிரசன்னமாகிறாள் அப்பா. நான் என் உயிர் போவதானாலும் சுந்தரியைத் தவிர வேறு ஒரு பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ளவே மாட்டேன். சத்தியமாக சொல்கிறேன் அப்பா. சுந்தரிதான் எனக்கு வேண்டும். இல்லாவிட்டால் கலியாணமே வேண்டாம்" என்று கனகசபேசன் சொல்லவில்லை. தந்தையிடம் தனயன் இதுபோலப் பேசுவது தகுமா?

சுந்தரியாவது சொன்னாளா மனதிலே நினைத்ததை. சொல்லவேயில்லை. "அம்மா, கனகு, என்னைக் கண்டதும் ஒரு மாதிரியாகச் சிரிக்கிறான். தண்ணீர் கேட்கிறானே, அப்போது நான் குவளையைக் கொடுக்கும்போது வேண்டுமென்றே என்னைத்தொடுகிறான். என்னைத்தான் கலியாணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறுகிறான். என் காதில் படும்படி " என்று சுந்தரி சொல்லவில்லை. அவள் சொல்வானேன். சுந்தரியைப் போலத் தனபாக்கியமும் வாலிபப் பெண்ணாக இருந்தவள்தானே!

"சுந்தரி உன்னை நான் கட்டாயமாகக் கலியாணம் செய்து கொள்கிறேன். ஏமாற்றிவிடுவேன் என்று எண்ணாதே. ஏழை வீட்டுப் பெண்தானே என்று எங்கள் வீட்டிலே தள்ளிவிடுவார்கள் என்றும் கருதாதே. பார் எப்படியாவது எங்கள் வீட்டாரைச் சரிபடுத்திக் கொண்டு உன்னைக் கலியாணம் செய்துகொள்கிறேன்!"

"என்னையாவது நீங்கள் கலியாணம் செய்து கொள்வதாவது, அறுபது வேலிக்குச் சொந்தக்காரர் உங்கள் அப்பா, நான் ஆப்பக்காரி மகள். என்னையாவது நீங்கள் கலியாணம் முடிப்பதாவது. அதெல்லாம் நடவாத காரியம். ஏன் வீணாக என்னை ஏய்க்கப் பார்க்கிறீர்கள்!"

"சுந்தரி, சத்தியம் செய்கிறேன். என்னை நம்பு."

"சத்தியமா? ஆசைக்குக் கண்மண் தெரியாது. அதனாலே பேசுகிறீர்கள் இதுபோல வீணாக என்னைக் கெடுக்க வேண்டாம். நான் ஏழை,"

"எங்கள் விட்டிலே மண்டை உடையக் கூடிய சண்டை நடப்பதானாலும் சரி உன்னைத்தான் கலியாணம் செய்து கொள்வது என்று நான் தீர்மானித்து விட்டேன்."

"மனக்கோட்டை இது, இடிந்துபோகும். இலுப்பப்பட்டி மிராசுதார் மகள் முகம் இஞ்சி தின்ற குரங்கு போல இருக்குதாம்! இருந்தால் என்ன, அவள்தான் உனக்கு நாயகியாக வரப்போகிறவள்...."

"சீ ! அந்தக் குரங்கையா, நான் கலியாணம் செய்து கொள்வேன்?"

இவை சுந்தரிக்கு கனகு சொல்லாதவை. கனகுக்குச் சுந்தரியும் சொன்னதல்ல!

சிலகாலத்துக்குப் பிறகு இலுப்பப்பட்டி மிராசுதாருக்குத் தான் கனகு மருமகனானான்.

"குரங்குபோல் இருக்கிறாயே, உன்னைக் கட்டிக்கொண்டேனே, நான் ஒரு மடையன். அப்பன் மிரட்டினால் என்ன, பிடிவாதமாக இருந்தால், எப்படி நடந்திருக்கும் இந்தக் கலியாணம்? பாழான பணத்தாசை எனக்கும் பிடித்துக் கொண்டதால்தான், நானும் இதற்கு ஒப்புக்கொண்டேன். பத்தரை மாற்றுத் தங்கம் போன்ற சுந்தரியை இழந்துவிட்டேன், இனி உன்னோடு அழவேண்டும். என் விதி! விதி என்ன செய்யும்? என் புத்தியைக் கட்டையால் அடிக்க வேணும்" என்று கனகு சொல்லிக்கொள்ளவில்லை, எண்ணாமலுமில்லை. அவன்தான் என்ன செய்வான் பாவம்! அறுபது வேலிநிலமும் இலுப்பப்பட்டியாரிடம் அடகு இருந்தது. தன்னுடைய அழுமுஞ்சியைக் கனகு கழுத்திலே கட்டிவிட்ட பிறகுதான், வட்டியும் அசலும் செல்லாகி விட்டதாக மிராசுதார் எழுதிக்கொடுக்க இசைந்தார். பட்ட கடனுக்கு இது தண்டனை என்று கனகு நினைத்துக்கொண்டான். சொல்ல முடியுமோ?

தேசாந்திரம் செய்துக் கொண்டிருந்த திருவேங்கடம், "எனக்கு மனைவி உண்டு. ஒரு மகளும் உண்டு. சிவப்பாக இலட்சணமாக இருப்பாள். என் மனைவி எப்படியோ கஷ்டப்பட்டு ஏதேதோ பாடுபட்டு, என் மகளை வளர்த்து வருகிறாள். எனக்கு வேலை செய்ய முடிவதில்லை. வீட்டைக் கவனிக்க முடியவில்லை. இப்படி ஊருராக அலைந்து, அரை வயிற்றுக் கஞ்சிக்கு ஆளாய்ப் பறக்க முடிகிறதே யொழிய வீட்டோ டு இருக்கப் பிடிக்கவில்லை. நான் கட்டியிருப்பது காவிதான். ஆனால் கள்ளச் சாவி கிடைத்தால் போதும், போதைக்குச் சரியான "சான்சு" கிடைத்துவிடும். அது ஒன்றுதான் வாழ்க்கையிலே எனக்கு இருக்கும் திருப்தி" என்று திருவேங்கடம் சொல்லவில்லை. ஆனால் அவன் எண்ணம் அதுதான், சுந்தரியின் பருவ நிலையைப் பற்றியோ, கனகுவின் காதல் விஷயம் பற்றியோ, அந்தக் காதலை அவன் வீட்டு நிர்ப்பந்ததினால் கைவிட வேண்டிநேரிட்டது பற்றியோ, ஊரூராகச் சுற்றிக் கொண்டு ஒய்வுக்கு மடங்களிலே தங்கி, தேர் திருவிழாக் காலங்களிலே, திருப்தியாக வாழ்ந்து வந்த திருவேங்கடத்துக்கு யாரும் சொல்லவில்லை.

கனகுவின் மனைவியானாலே இலுப்பப்பட்டியார் மகள் காவேரி, அவளுக்கு கனகுவோ, வேறு யாரோ சொல்லவில்லை ஆப்பக்கடையக்காரின் மகளிடம் கனகு காதல் கொண்டிருந்த கதையை. எப்படி அவ்வளவு பணக்காரப் பெண்ணிடம் இதைப் பேசுவது என்ற பயத்தால்.

இவ்வளவுதானா, கனகுவின் இஷ்டப்படி சுந்தரி சில வேளைகளில் நடந்து கொண்ட விஷயத்தை யாரும் தனபாக்கியத்துக்குச் சொல்லவில்லை.

"இது ஏன் இந்தப் பெண் இவனோடு இப்படிக் குலாவுகிறாள்" என்று தனபாக்கியம் பல சமயங்களிலே எண்ணினதுண்டு. சொன்னதில்லை. "அடி அம்மா, ஜாக்கிரதை, அவன் அப்படி இப்படி என்று ஏதாகிலும் கெட்ட பேச்சுச் சொன்னால் கேட்காதே. அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டி வை" என்றும் சுந்தரிக்கு அவள் தாயார் சொல்லவில்லை. கனகு கெட்டப் பேச்சுப் பேசியிருந்தால் தானே, சுந்தரி அம்மாவிடம் தானாகவாவது சொல்லியிருப்பாள்? அவன் சொன்னதுதான் இவளுக்கு ஆனந்தமாக இருந்ததே கேட்க.

"அம்மா, வாயைக் குமட்டுகிறது. சாதம் பிடிக்கவில்லை. மயக்கமாக இருக்கிறது. என்னமோ போல இருக்கிறது உடம்பு" என்று சுந்தரி சொல்லாமலேயே, தனபாக்கியம் நிலைமையைக் கண்டுகொண்டாள். "ஐயையோ, மோசம் வந்து விட்டதே, அந்தப் பயல் அநியாயமாக ஏதுமறியா என் மகளைக் கெடுத்து விட்டான் போலிருக்கிறதே. நான் என்ன செய்வேன்? ஏழை என்பதற்காகவே இவளை நல்ல இடத்திலே யாரும் கேட்கவில்லை. இப்படியும் நேரிட்டு விட்டால் என் கதி என்னாவது? அடி பாழும் பெண்ணே, இப்படி என் அடிவயிற்றிலே நெருப்பைக் கொட்டினாயே! அவ்வளவு திமிரா உனக்கு? ஆணவமா? கொழுத்துப் போனாயா!" என்றெல்லாம் சொல்லித் தனபாக்கியம் சுந்தரியைக் கண்டிக்கவில்லை. விஷயம் வெளிவந்து விட்டால் விபரீதமாகிவிடுமே என்ற பயத்தால். ஆனால் தனபாக்கியத்தின் பெருமூச்சும், தானாக வழிந்த கண்ணீரும் சுந்தரிக்கு இதைவிட விளக்கமாகத் தாயின் மனோவேதனையைத் தெரிவித்தது.

"தம்பி, ஊரில் உனக்கு உத்தமன் என்று பெயர் இருக்கிறது. நல்ல குணமென்று புகழாதவர்கள் இல்லை. ஏழைகளிடம் இரக்கம் காட்டுகிறாய். இலுப்பப்பட்டி மிராசுதாரரின் இறுமாப்பினால் கஷ்டமடைந்தவர்களை யெல்லாம் உன் கருணையால் காப்பாற்றுகிறாய். இவ்வளவு நல்லவனான உன்னால் என் குடும்பமே பாழாகிவிட்டதே. அதோ சுந்தரி படும் வேதனையைப் பாரடா அப்பா! எந்தப் பாவி கொடுத்த மருந்தும் அதைக் கரைக்கவில்லையே, வளருகிறதே உன்னால் ஏற்பட்ட வம்பு. ஊரார் தூற்றுகிறார்களே, சுந்தரியின் கண்ணீர் என்னைச் சித்திரவதைக்கு ஆளாக்குகிறதே. ஏதோ பணத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டோ , அப்பனுக்குப் பயந்தோ ஒருவளைக் கலியாணம் செய்துகொண்டாய், உன் அன்பு மொழியை நம்பினாள் இந்த அபலை. இவளையும் ஏற்றுக்கொள்ளக் கூடாதா இரண்டாந்தாரமாக? இழிவு போகுமே". என்று தனபாக்கியம் கனகனிடம் கூறவில்லை, கூறிப் பார்ப்போம் என்று பல தடவை எண்ணுவாள். எப்படிக் கூறுவது சொல்லிப்பயன் என்ன என்று எண்ணி, ஏங்குவாள்.

"அம்மா கன்னி கருவுற்றால், ஊர் தூற்றும் என்று பயந்து ஓடிவிட்டோ ம், நீ காப்பாற்று" என்று சொல்ல மனம் இடந்தரவில்லை, தனபாக்கியத்துக்கு. ஊரை விட்டு தொலைந்தால் போதும், என்று சுந்தரியை அழைத்துக் கொண்டு வேறு ஊர் வந்து குடி ஏறினாள். சுந்தரிக்குப் பத்தாம் மாதம்! மருத்துவம் பார்க்க வந்த கிழவியிடம், தனபாக்கியம், அபாக்கியவதி சுந்தரியின் அந்தரங்கக் கதையைக் கூறவில்லை. "அவளுடைய புருஷன் அக்கரைக்கு ஓடிவிட்டான்" என்று பொய்யுரைத்தாள். தாலி இருந்தது சுந்தரியின் கழுத்திலே தாய் மகளுக்குக் கட்டிய தாலி!!

தங்க விக்ரஹம் போன்ற குழந்தை பிறந்தது சுந்தரிக்கு. பேரன் பிறந்தது தெரியாமல் பெருமாள் கோவிலிலே பலமான பூஜை நடத்திக் கொண்டிருந்தார் லோகு முதலி.

கலியாணமோ இல்லை, குழந்தையோ தவழ்ந்தது அந்தக் குடிசையிலே! மாளிகையிலே, கனகனும், காவேரியும், கனகபாடிகளின் பூஜை, காளி உபவாசியின் தாயத்து, சித்த வைத்தியரின் செந்தூரம் ஆகியவற்றை நம்பிக் கிடந்தனர், பலனின்றி.

"என் மகன் ராஜகோபால் இருக்கிறான். எனக்கென்ன கவலை!" என்று கனகு யாரிடம் கூறுவான்? எப்படிக் கூறுவான்? விஷயமே அவனுக்குத் தெரியாது? தெரிந்தாலும் கூறமுடியுமா?

"போனவன் திரும்பவில்லையே!" என்று பலர் ஆயாசமும், ஆச்சரியமும் கொண்டு, சுந்தரியைக் கேட்டனர். அக்கறை இல்லை அவருக்கு, ஆகவே அவர் அக்கரையில் இருக்கிறார், என்று சாக்குக் கூறுவது தவிர, வேறு வழியில்லை. விழியிலே நீர் வழிய வழிய வதைப்பட்டுக் கிடந்த அந்த வனிதைக்கு காலம் அவளுடைய கவலையைப் பற்றிய கவலையால் ஓய்ந்து விடுமா? அது ஓடிக்கொண்டே இருந்தது. ஓராண்டு, ஈராண்டு, மூவாண்டு, ஐந்து ஆண்டுகள் கழிந்தன. தாலியுடன் மணமாகாத மங்கை உலவிக் கொண்டிருந்தாள். தகப்பனாரைக் காணாது தத்தி நடக்கும் பருவமடைந்தான் தங்கராஜன், தாய் தங்கமே என்று கொஞ்ச, பாட்டி ராஜா என்று கொஞ்ச, இரண்டு அசை மொழிகளும் திரண்டு, குழந்தைக்கு தங்கராஜன் என்ற பெயராக ஏற்பட்டது. தங்கராஜனின் தகப்பரின் "ராஜ்யம்" "தங்கம்" இரண்டுக்கும் தேய்வு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது, இந்த ஐந்து வருஷங்களிலே! இலுப்பப்பட்டி மிராஸ்தாருக்கு ஒரு வியாஜ்யம். அது முனிசீப்புக்கோர்ட்டிலிருந்து ஹைகோர்ட் சென்றது. இந்தப் பிரயாணச் செலவு மிராஸ்தாரின் தங்க நகைகளை மார்வாடிக்கும், நிலத்தின் முக்கிய பகுதிகளை வேறோர் ஜெமீனுக்கும் கட்டணமாக்கிவிட்டது.

"எந்த வேலையிலே நீ எனக்கு மருமகனாக வந்தாயோ, அன்றே என்னைச் சனி பிடித்துக் கொண்டது. என் முகத்திலே விழிக்காதே. உன்னைக் கண்டாலே எனக்குக் கடுங்கோபம் பிறக்கிறது."

"உனக்கு இவ்வளவோடா நின்றுவிடும் கேடு? நீ படவேண்டியது எவ்வளவோ இருக்கிறது; உன்னுடையப் பணத்திமிரினால், எவ்வளவு ஏழைகளை கண் கலங்கச் செய்திருக்கிறாய்? அதனுடைய பலனை அடைகிறாய். என் மீது கோபித்துக் கொள்கிறாயே. உன் அட்டகாசத்தால் ஊரிலே உனக்குப் பகை. வியாஜ்யம் பிறந்ததும் உன் விரோதிகள் உன்னைத் தீர்த்துக் கட்ட வேலை செய்கிறார்கள். படு, எனக்கென்ன! நான் என்ன செய்வது? உன்னாலே நான் கெட்டேன். என்னாலே அந்தப் பெண் கெட்டுச் சீரழிந்து, எங்கோ போய்விட்டாள். உன் முகத்தைப் பார்க்கும்போதே எனக்கு வருகிற கோபம் கோடாரியையோ, அரிவாளையோ தேடச் செய்கிறது."

மாமனாரும் மருமகனும் சொல்லிக் கொள்ளவில்லையேயொழிய, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் கண்கள் இக்கருத்துக்களையே காட்டின.

கேஸ் தோற்று விட்டது. கஷ்டம் முற்றிவிட்டது. இலுப்பப்பட்டி கைமாறிவிட்டது போலத்தான் - என்று மிராசுதாரர் சொல்லவில்லை. அவருடைய வயிற்று வலி, வாந்தி, காய்ச்சல் இவைகள் வேறு என்ன கூறின!!

சீமானின் மருமகனாகிச் சிங்காரமாக வாழ நினைத்த கனகு, சீரழிந்த மிராசு குடும்பத்தைக் காப்பாற்றித் தீர வேண்டிய பொறுப்பைத் தான் பெற்றான். குளிக்கப் போனவன் சேறு பூசிக்கொண்ட கதை போல!

தேசாந்திரி திருவேங்கிடத்துக்குத் தன் குடும்பத்தின் நிலையை யாரும் கூறவில்லை. யாருக்கு என்ன அக்கரை! அவன் ஒரு நாள் அன்போடு, உபசரித்தான் ஒரு ஆண்டியை! அந்த ஆண்டி மாறுவேடத்திலே வந்திருந்த இலட்சாதிகாரி என்பதைத் திருவேங்கடத்துக்கு யாரும் சொல்லவில்லை. தனக்குக் கிடைத்த சோறு வேறொருவனின் பசியைத் தீர்க்க உதவட்டும் என்ற பெரிய தத்துவத்தையும் அவன் யாரிடமும் பாடங்கேட்டவனல்ல. அன்று அவனுக்குப் போதை! சோறு இருந்தது நிரம்ப, பசி இல்லை. பாதையிலே சுருண்டுக் கிடந்தான் ஒரு பரதேசி; தூக்கி எடுத்து வைத்துக்கொண்டு உபசரித்தான் திருவேங்கடம்.

பரதேசிக் கோலத்திலே பல ஊர் சுற்றித் தர்மவான்களின் தப்புலித்தனம், புண்ணியவான்கள் செய்யும் பாபச் செயல்கள், முதலிய லோக விசித்திரத்தைக் கண்டு அனுபவ அறிவு பெற்று வந்த அருமைநாயகம் பிள்ளை, பல இலட்சத்தைப் பாங்கியிலே வைத்திருந்தார். குடும்பம் கிடையாது. ஒரு ஆண்டிக்கு ஈரமுள்ள நெஞ்சு இருந்தது கண்ட அருமைநாயகம், அந்த ஆண்டிக்கே தன் சொத்து முழுவதையும் தந்துவிடுவது என்று தீர்மானித்து விட்டான். அதைச் சொன்னால் அவன் நம்ப மாட்டான் என்பதற்காகத் தன் எண்ணத்தைச் சொல்லவில்லை. தன்னுடன் வரும்படி கூறினான். 'வீடு நமக்கு நாடு முழுவதுமே; ஓடு உண்டு கையில்' என்ற விருத்தத்தைப் பாடியபடி சம்மதித்தான் திருவேங்கடம். இருவரும் பல ஊர் அலைந்துவிட்டு அருமைநாயகத்தின் ஊராகிய ஆற்றூர் வந்து சேர்ந்தனர். அந்த வேற்றூரிலே, தன் குடும்பம் இருப்பதைத் திருவேங்கடத்துக்கு யாரும் சொல்லவில்லை. யாருக்குத் தெரியும்! ஆற்றூரிலே அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருக்கையில், தனபாக்கியத்தைத் திருவேங்கடம் கண்டான். ஆச்சரியமடைந்தான், குடிசை சென்றான், சுந்தரியைக் கண்டான். தங்கராஜனைக் கண்டான். தகதகவென ஆடினான். சந்தோஷத்தால், மெல்ல மெல்ல விஷயத்தைத் தெரிந்து கொண்டான். அவன் மனம் துடித்தது.

"எங்கே இருக்கிறான் அந்தப் பாவி? அவன் கழுத்தை முறிக்கிறேன்."

"வேண்டாம் அவன் பெரிய பணக்காரன். உலகம் அவன் பக்கம் பேசும்."

"துறவிக்கு வேந்தன் துரும்பு. தெரியுமா? அவன் மனிதனாடி? இந்தச் சொர்ணவிக்கிரகத்தை அவன் கண்டானா? அவன் பணக்காரனானால் எனக்கென்ன பயமா? சீ! நான் எத்தனையோ பணக்காரன் பரதேசிப்பயலாகி விட்டதைப் பார்த்திருக்கிறேன் - இதோ இதே ஊரிலே இருக்கிறாரே அருமைநாயகம், இந்த ஆசாமி ஆண்டியாக இருந்தது எனக்கு தெரியும். பணமாம் பணம். அது என்னடி செய்யும்?"

திருவேங்கடம் தம் மனைவியிடம் இதுபோலச் சொல்லிக் கொண்டு இல்லை. மனதிலே எண்ணினான் பல. சொல்ல வாய் வரவில்லை.

திருவேங்கடத்தின் குடும்பத்தின் நிலைமையைத் தெரிந்து கொண்டார் அருமைநாயகம். நிர்க்கதியாகி நிந்தனைக்குட்பட்டுக் கிடந்த ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும் சக்தி தனக்கு இருந்ததற்காகச் சந்தோஷமடைந்தார். குடிசை காலியாகிவிட்டது. தங்கராஜன் பெரிய தாத்தா மடியில் கொஞ்ச நேரமும் சின்னத் தாத்தா தோளில் கொஞ்ச நேரமும் இருப்பான். கூத்தாடுவான், கூவுவான் - கண்டு களிப்பாள் சுந்தரி. மறுகணம் அவள் கண்களிலே நீர் பெருகும். ஏழ்மையிலே மூழ்கியிருந்த சமயத்திலாவது, சதா ஜீவனத்துக்கு வேலை செய்து கொண்டிருக்க வேண்டியிருந்ததால் விசாரப்பட நேரம் கிடைப்பதில்லை. அருமைநாயகத்தின் ஆதரவால் ஜீவனக் கஷ்டம் இல்லாமற் போகவே, சுந்தரிக்கு விசாரம் விடாத நோயாகிவிட்டது.

இலுப்பப்பட்டியார் இறந்தார். கனகனின் தகப்பனார் அவரைத் தொடர்ந்தார். காவேரி காசநோய்க்கு பலியானாள். கணவன் கப்பலேறினான். பர்மாவுக்குக் கடைக் கணக்கப் பிள்ளையாக! அக்கரையிலிருக்கிறான் சுந்தரியின் கணவன் என்று சொல்லி வந்த பொய்யே மெய்யாகிவிட்டது!

தங்கராஜனுக்கு வயது பத்தாகி விட்டது. அவனுக்குச் சொல்லவில்லை, தாயாரின் துயரத்தை. 'தகப்பன் அக்கரையிலே ஏன் இருக்கிறார். எவ்வளவு காலத்துக்கு இருப்பார்?' என்று அவன் கேட்கவில்லை. என்ன காரணத்தினாலோ, மனைவியிடம் சண்டையிட்டுவிட்டு, அவர் போய்விட்டார் என்று நம்பியிருந்தான்.

கணவன் வேலைக்கு அமர்ந்திருந்த கடையின் முதலாளி கொடுமைக்காரன். அவன் தந்த இடி பொறுக்கமாட்டாமல், கனகன் தாய்நாடு சென்று அன்னக்காவடியாகவாவது வாழலாம் என்று அக்கரையை விட்டு இக்கரை வந்தான். சுந்தரி இருப்பதை, அவனுக்கு யாரோ சொல்லியல்ல அவன் ஆற்றூருக்கு வந்தது. ஆற்றூரிலே அருமைநாயகம் என்பவர் ஆலை வைத்திருக்கிறார். அங்கு சென்றால் வேலை கிடைக்கும் என்ற செய்தி தெரிந்தது. வேலைக்காக அவர் வீடு வந்தான்.

கனகனுடைய வரலாற்றைக் கேட்டார் அருமைநாயகம்.

"நீதானா அந்த ஆசாமி! அட மடையனே. உன்னாலே நிராகரிக்கப்பட்ட பெண்ணிடம் போய் மன்னிப்புக் கேட்டுக் கொள்" என்று அவர் சொல்லவில்லை.

"உட்கார் தம்பி! உட்கார்! உன்னைக் காணப் பல நாட்களாகக் காத்துக் கொண்டிருந்தேன். இலுப்பப்பட்டி மிராசுதாரின் மருமகன் கனகு நீதானா? சரி, சரி! உட்கார்" என்று கூறினார், அருமைநாயகம். ஆச்சரியத்தால் திகைத்துப் போனான் கனகன்.

"தங்கம்! ராஜா! டே தம்பி தங்கராஜ்!" என்று அழைத்தார். "தாத்தா இதோ வந்தேன்" என்று கூவிக்கொண்டே ஓடி வந்தான் பையன்.

"உன் அப்பா வந்திருக்கிறார்" என்றார். கனகன் மிரண்டான். பையனின் கண்கள் அகன்றன. வாய் திறந்தபடி நின்றான். முகத்திலே ஓர் விவரிக்க முடியாத உணர்ச்சிக் குறி!

அடுத்த விநாடி "அப்பா!" என்றான். பாய்ந்தோடி கனகுவின் கழுத்தைக் கட்டிக் கொண்டான். கனகனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஐயா! இது என்ன? வேலை தேடிக் கொண்டு இங்கே நான் வந்தேன். இது யார்? இந்தச் சிறுவன் என் மகன் என்று கூறுகிறீரே. அவனும் 'அப்பா' என்று அழைக்கிறானே. இதென்ன விந்தை?" என்று கனகன் கேட்கவில்லை. அவனுடைய கண்களின் மிரட்சியைக் கண்டு அருமைநாயகம் சிரித்தபோது கண்கள் இப்படிக் கேட்க எண்ணுகிறான் என்பதை அவர் தெரிந்தே தான் சிரித்தார் என்பது தெரிந்தது.

அடுத்த விநாடி துள்ளி ஓடினான் தங்கம்.

"அம்மா, அம்மா, அப்பா, அப்பா, அப்பா வந்து விட்டார், ஓடி வா, சீக்கிரம் வா" என்று கூவினான். ஓடினான் வீட்டுக்குள் தாயைத் தேடிக்கொண்டு.

"அப்பா, அப்பா, அப்பா வந்துவிட்டார்." ஆம், ஆம். அவனுடைய செவிகளுக்கு அந்த மொழி எவ்வளவுதான் இன்பம் தந்தது. பல நாட்கள் மெல்லிய குரலிலே யாருக்கும் தெரியாதபடி, அவனாகக் கூறிக்கொள்வான். அப்பா, அப்பா, இல்லை, அப்பா இங்கே இல்லை, அப்பா வரவில்லை, அப்பா இன்னமும் வரவில்லை. இன்று அப்பா வந்துவிட்டார் என்று கூவினான். மான்போலத் துள்ளிக் குதித்தான். தங்கராஜனின் ஆர்ப்பாட்டத்தைக் கண்ட சுந்தரிக்குப் பயமாகிவிட்டது. அவனுக்குப் பித்தம் பிடித்து விட்டதோ என்று, தாயைக் கண்ட உடனே, கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான் தங்கராஜ், கணவன் இருந்த அறைக்குள். வாயிற்படியருகே சென்றாள். உள்ளே இருந்த கனகன், "சுந்தரி" என்று கூவினான். இருவரிலே யார் முதலிலே பாய்ந்தது என்று தெரியமுடியாதபடி, ஒரு ஆனந்த அணைப்பு ஏற்பட்டது. ஒரு வயோதிகரும் ஒரு சிறுவனும் அங்கே இருப்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இருவர் விழிகளிலும் நீர் குபுகுபுவெனக் கிளம்பி வழிந்தது.

"சுந்தரி! சுந்தரி! கண்ணே சுந்தரி" என்று கதறினான் கனகு. முகத்தைத் தன் இரு கரங்களிலும் பிடித்துக் கொண்டு உற்றுப் பார்த்தான், அவள் கன்னத்திலே புரண்டோ டிய கண்ணீரைத் துடைத்தான். மீண்டும் அணைத்துக் கொள்ளச் சென்றான்; கழுத்திலே தாலி இருக்கக் கண்டான் பயந்தான். சுந்தரிக்கு முகத்திலே ஒரு குறுநகை பிறந்தது.

"தங்கம், சின்னத் தாத்தாவை அழைத்து வா" என்று கூறினாள். சிறுவன் ஓடினான். அவனைப் பின் தொடர்ந்து சென்றார் அருமைநாயகம். அரைமணி நேரம் யாரும் அந்த அறைப்பக்கம் போகக்கூடாது" என்று உத்தரவிட்டார். சுந்தரி தன் சரிதத்தைக் கூறி முடித்தாள் கனகனிடம். கணவன் தன் கதையைக் கூறினான். அவள் கட்டியிருந்த தாலியை முத்தமிட்டான்.

"அக்கரைக்குச் சென்றிருந்த சுந்தரியின் புருஷன் வந்து விட்டார்" என்று ஆற்றூர் வாசிகள் பேசிக்கொண்டனர். அவர்களுக்கு சுந்தரியின் சோகக் கதையின் சூட்சமப் பகுதியை யாரும் சொல்லவில்லை. தாய் கட்டிய தாலி. "அக்கரைக்கு போன அவள் புருஷன் வந்துவிட்டான். இனி இக்கரையிலே தான் இருப்பானாம்" என்று ஊரார் சொல்லிக் கொண்டார்கள். அவன் கட்டாத தாலி இவள் கழுத்திலே இருந்தது யாருக்குத் தெரியும்? அவனுடைய அந்த நாள் நடவடிக்கையை யார் அவர்களுக்குச் சொன்னார்கள்?

சுந்தரி:- "தங்கம்! உங்க அப்பா ரொம்ப நல்லவரென்று எண்ணாதே! ஜாக்கிரதை. ரொம்ப ரொம்பக் கெட்டவர். அவர் என்ன செய்தார் தெரியுமா? சொல்லிடட்டுமா?"

கனகன்:- "சுந்தரி, சுந்தரி, சொல்லாதே சுந்தரி உனக்குக் கோடிப் புண்யம், அதை மட்டும் சொல்லாதே!"

தங்கம்:- "அம்மா, அம்மா, சொல்லம்மா! சொல்! அப்பா, அம்மா வாயை மூடாதே! அம்மா, சொல்லு!"

சுந்தரி:- "உங்க அப்பா என்ன செய்தாரு தெரியுமா! ஒருநாள்..."

கனகு:- "ஆ, அப்பா அடிவயிற்றிலே வலிக்குதே, அப்பப்பா, பொறுக்க முடியவில்லையே, தம்பி, ஓடிப்போய்க் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வா."

(பையன் ஓடினதும் கனகன், சுந்தரியைக் கட்டித் தழுவிக் கொண்டு)

"சுந்தரி, கண்ணில்லே, சொல்லாதம்மா, தயவு செய்து, சொல்லாதே கண்ணு."

சுந்தரி:- "இப்படித் தளுக்கு செய்து விட்டுத் தானே என்னைத் தவிக்க வைத்து விட்டுப் போயிட்டிங்க முன்னே."

கனகன்:- "அதற்காகத் தீவாந்திர சிட்சையை அனுபவித்தாகி விட்டதே!"

சுந்தரி:- "ஐயோ! பாவம்! என்னாலே உங்களுக்கு இத்தனை கஷ்டம்."

(அறைக்கு வெளியே சிறுவன்)

தங்கம்:- "அப்பா! தண்ணீர்."

(அறைக்குள்ளே சுந்தரி)

சுந்தரி:- "விடுங்கள், வந்துவிடுவான்."

(உள்ளே நுழைந்த சிறுவன்)

தங்கம்:- "அப்பா வலி போயிடுத்து?"

சுந்தரி:- "ஓ! கிலியும் போயிடுத்து."

தங்கம்:- "நீ, என்னா புலியா, எங்க அப்பா கிலி அடைய. அது சரி, அம்மா! சொல்றேன் சொல்றேன்னு சும்மா இருக்கறயே, சொல்லம்மா!"

இந்த ரசமான நாடகம் அடிக்கடி நடந்தது. ஆனால் சுந்தரி ஒரு நாளாவது, தங்கராஜனுக்குக் காவேரியிலே ஸ்நானம் செய்த கனகனின் கதையை மட்டும் சொல்லவேயில்லை. எப்படிச் சொல்லமுடியும்!!

சிறுகதைகள்: முதல்வரி முக்கியம்........ ஆசிரியர் -திரு. மாலன்

, , ,

முதல்வரி முக்கியம்!

எல்லா வகைச் சிறுகதைகளுக்குமே முதல்வரி முக்கியம். உங்கள் கதையின் முதல்வரி அல்லது அதிக பட்சம் முதல்பத்திதான், வாசகனை கதையின் அடுத்த வரிக்கு, கதைக்குள்ளே இழுத்துச் செல்கிறது.

ஒரு காட்சியை கற்பனை செய்து பாருங்கள். ஒரு பத்திரிகை அலுவலகம். 'எடிட்டர் படிச்சுக் கொடுக்கச் சொன்னாரு' என்று ஒருகட்டுக் கதையை சப் எடிட்டர் முன்னால் கொண்டு வந்து வைக்கிறான் ஆபீஸ் பையன். கட்டில் 60 கதையாவது இருக்கும் போலிருக்கிறது. ச.எ படிக்க ஆரம்பிக்கிறார். மூன்று நான்கு கதை படித்ததுமே கொட்டாவி வருகிறது. வெளியே போய் தம்மடிக்கிறார். இன்னும் இரண்டு கதை படிக்க முடிகிறது. அதற்கு மேல் ஒன்றும் ஓடவில்லை. ஒரு டீ குடித்துப் பார்க்கிறார். பிரயோசனமி ல்லை. அவர் ஒரு குறுக்கு வழி கண்டுபிடிக்கிறார். முதல் பத்தியைப் படிப்பது. சுவாரஸ்யமாக இருந்தால் மேலே படிப்பது. இல்லையென்றால் file no.13ல் (அதாங்க குப்பைக் கூடை) சேர்த்து விடுவது.

போட்டிக் கதைகளைப் படிக்கும் நடுவர்களும் அநேகமாக இந்த ச.எ. நிலையில்தான் இருப்பார்கள். அதனால்- முதல் வரி முக்கியம்.

உலகின் சிறந்த கதைகள் என்று கருதப்படுகிற எந்தக் கதையையும் எடுத்துப் பாருங்கள். ஒரு நல்ல ஆரம்பம் இருக்கும். முதல் வரி அல்லது முதல் பாராவில் கதையை மேலே படிக்க வைப்பதற்கான ஒரு தூண்டுதல் இருக்க வேண்டும். இந்தத் தூண்டில், அதிர்சியாக இருக்கலாம். ஆர்வக் குறுகுறுப்பு ஏற்படுத்துவதாக இருக்கலாம். பயங்காட்டுவதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், ஏன் அல்லது என்ன ஆச்சு, யார் என்ற ஏதேனும் ஒரு கேள்வியை எழுப்புவதாக இருக்க வேண்டும்.

சரி, இந்த முதல் வரியை எப்படி எழுதுவது? பல வழிகள் இருக்கின்றன. ஒரு நான்கைந்தைப் பார்ப்போம்: சுலபமானதிலிருந்து ஆரம்பிக்கலாம்.

1.டயலாக்:

இரண்டு பாத்திரங்கள் பேசிக்கொள்வது போலத் துவங்குவது ஓர் எளிய வழி. 30களில் ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டியில் பரிசு வாங்கிய 'தபால்காரர் அப்துல்காதர்' கதையின் ஆரம்பத்தைப் பாருங்கள். (நடுவர்களில் ஒருவர் கல்கி)

"சென்ற வருஷம் பெர்னார்ட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது "இவ்வூரில் பார்க்கத் தகுதி யானவை என்னென்ன?" என்று விசாரித்தார்.

"நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்டு இடிநாதர் கோவில், பாண்டவர் சுனை என்னும் கொதி ஊற்று, தபால்கார அப்துல்காதர்" என்றேன்.

பெர்னாட்ஷா எந்த ஊருக்கு வந்தார், அவர் பார்க்க வேண்டிய அப்துல்காதர் யார் என்று உங்கள் மனதில் ஒரு கேள்வி எழுந்து மறைந்ததா இல்லையா? இது அறிவியல் புனைகதை அல்ல. ஆனால் இந்த மாதிரித் துவங்குவதற்கு வாகான இடம் அறிவியல் புனைகதைகள்தான்.

2.புதிர்:

ஒரு புதிரான ஆரம்பம் எப்போதுமே கதையை நகர்த்திச் செல்லக் கை கொடுக்கும். உதாரணம் பார்து விடலாம். தி.ஜானகிராமன் தன்னுடைய '....ப்பா' கதையை இப்படித் துவக்குகிறார்:

"நான் தூங்குகிறேனா என்ன, இல்லையே..... நான் விழித்துக்கொண்டிருக்கிறேனே. பி ன்னே ஏன் இந்தச் சந்தேகம்? ஒரு நாய் எப்படி இங்கிலீஷில் குரைக்கும்?"

இங்கிலீஷில் குரைக்கிற நாயை சந்திக்க எனக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. அறி.பு.கதைகளில் அதற்கான சாத்தியங்கள் அதிகம். (தி.ஜ.வின் ..ப்பா அறி.பு அல்ல)

3. டையலாக் + புதிர்:

உரையாடலிலேயே புதிரை நுழைத்துவிடுகிற இந்த உத்தியை அடித்துக் கொள்ள முடியாது. தி.ஜா.விடமே போகலாம்.

""ஐயா...ஐயா"

பதில் இல்லை உள்ளேயிருந்து.

"சுவாமி' சுவாமி"

பதில் இல்லை."

தனது காவலுக்குக் கதையை இப்படி ஆரம்பிக்கிறார் தி.ஜா. இதில் டையலாக் இல்லை. ஒரு பாத்திரம்தான் பேசுகிறது. ஆனால் பேசாத பாத்திரத்தைப் பற்றித்தான் நாம் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்.

4. செயல்:

வளவளப் பேச்சே வேண்டாம். நேரடியாக செயலில் இறங்கி விடுங்கள். உங்கள் அல்லது உங்கள் பாத்திரத்தின் செயல் அடுத்து எதை நோக்கிப் போகப் போகிறது என்ற கேள்வியை வாசகர் மனதில் எழுப்பி விடுங்கள். ஆரம்பம் கிடைத்து விடும். புதுமைப் பித்தன் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையை இப்படித்தான் ஆரம்பிக்கிறார்.

"மேலகரம் மே.க.ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே.க.ரா.கந்தசாமிப் பிள்ளையவர்கள் 'பிராட்வே'யும் 'எஸ்பிளனேடு'ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்."

நடுச் சந்தியில் நின்று யோசிக்க வேண்டிய அவசியம் கந்தசாமிப்பிள்ளைக்கு ஏன் ஏற்பட்டது என்று நீங்கள் யோசிக்க மாட்டீர்கள். படிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

5.பாத்திரங்கள்:

டிராமாட்டிக்காகத் துவக்க விருப்பமில்லையா? சம்பவங்களைச் சுற்றி அல்ல, பாத்திரங்களைச் சுற்றி நிகழ்கிற கதை உங்களுடையது என்று நினைக்கிறீர்களா? சரி, பாத்திரத்தையே வைத்துத் துவக்கி விடலாம்:

"கௌரி இன்றும் கண்ணைத் திறக்கவில்லை. ஆஸ்பத்திரிக் கட்டிலில் அசையாமல் கிடக்கிறாள். பக்கத்தில் சுற்றிப் போர்த்தி, அந்தச் சிறு உருவம் கிடக்கிறது. அது உருவமா? உள்ளே எலும்பென்பது இருக்குமா? அந்தக் கண்கள்? அந்த வாய்? உயிர் இருக்கிறது. ஆனால் எத்தனை நாளைக்கு?" தளையசிங்கத்தின் புகழ் பெற்ற புதுயுகம் பிறக்கிறது இப்படித்தான் பிறக்கிறது

இன்னொரு ஜாம்பவானும் இப்படி ஆரம்பிப்பதுண்டு.

"முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஐந்து வயதுக்குமேல் பத்து வயதுக்குள் ஒரு மகன் அல்லது மகளிருந்தால் அந்தப் பிஞ்சு மனம் அவளைத் தெரிந்து வைத்திருக்கும்."

இது ஜெயகாந்தனின் துவக்கம்.

6. சஸ்பென்ஸ்:

ஆமாம். (துப்பறியும்) நாவல்களில் சஸ்பன்ஸ் கடைசியில் இடம் பெறும். ஆனால் சிறுகதைகளில் அதை முதலிலேயே நுழைக்கும் வாய்ப்பு உண்டு.

"இரவு முழுதும் கொண்ட பிரயாண அலுப்பிலும், அசதியிலும்கூட, ரயில் தன்னூர் நிலையத்தைக் காலையில் அடைந்தபோது, இவன் மனது ஒரு குதூகலம் கொண்டது. ஆனால் இறங்கியதும் ரயிலடியைப் பார்வை கொண்டபோது, மனது, குதூகலம் அதிர்ச்சியென மாறலாயிற்று."

நடையைப் பார்த்ததுமே யாரென்பது புரிந்திருக்கும். ஆம். மெளனிதான்.

வண்ணதாசன் இன்னும் நச்சென்று ஆரம்பிக்கிறார்:

"கதவைத் திறந்ததும் இரண்டு நிகழ்ந்தது.

புல்லாங்குழல் வாசிப்பு சட்டென்று நின்றது. காட்டமான பீடிப் புகை மண்டி முகத்தில் அடித்தது."

பீடிப் புகையும், புல்லாங்குழலும் சாதாரணமாக நினைத்துப் பார்க்கக் கூடிய காம்பினேஷன் அல்ல.

7. கதை கதையாம்:

காலங் காலமாக அழியாத உத்தி இது. உங்கள் அம்மாவோ, பாட்டியோ, அத்தையோ கதையை எப்படி ஆரம்பிப்பாள்? வர்ணனைகளைத் தவிர்த்து விட்டு, கதையும் கொஞ்சம் சொல்லி, ஆனால் அதையும் முழுக்கச் சொல்லாமல், 'ம், அப்புறம்!' என்று கேட்க வைக்கிற மாதிரி ஒரு டெக்னிக் வைத்திருப்பார்கள் இல்லையா? அந்தப் பேச்சு வழக்கையே எழுத்துக்குக் கொண்டு வாருங்கள்:

"இவன் கண்ணைத் திறந்தபோது அநேகமாக எல்லாம் முடிந்திருந்தது. ஆச்சரியங்கள் காத்திருந்தன அவற்றில் ஒன்று எதிரில். நாலடி உயரம். முக்கோண முகம். மற்ற உறுப்புகளை உதாரணிக்க அப்போது உலகத்தில் பொருள்கள் இல்லை."

இது என் கதை.

8.வர்ணனை:

சரி அப்படியானால் கதையின் ஆரம்ப வரிகளில் வர்ணனைக்கு இடம் இல்லையா? முயன்றால் அதுவும் முடியும். லா.ச.ரா எப்படி ஆரம்பிக்கிறார் பாருங்கள்:

"மதில்கள் போன்ற பாறைகளின் மேல் மேகங்கள் பொங்கித் தளைத்து நுரை கக்கின. சென்னையில் கானல் கொடுமையை வருடக் கணக்கில் அனுபவித்தவனுக்கு இங்கு கோடை தெரியவில்லை. வேர்வையும் மறந்தது.

ஆனால் வெய்யிலை மறக்க நான் இங்கு வரவில்லை."

இந்த மாதிரி ஆரம்பிக்க நினைக்கிறவர்களுக்கு ஒரு வார்த்தை. மொழியில் நல்ல ஆளுமை இருந்தால், பிசிறில்லாத கூர்மையான நடை கை வரப்பெற்றால் மட்டுமே இந்த வர்ணனை ஆரம்பங்களை முயற்சி செய்யுங்கள். இல்லை என்றால் காலை வாரிவிட்டுவிடும். இன்னொரு எச்சரிக்கை. வர்ணனையிலேயே சுற்றிக் கொண்டிராமல், கதையையும் உடனே ஆரம்பித்து விடுங்கள். அ.முத்துலிங்கம் இதை எவ்வளவு கெட்டிக்காரத்தனமாக செய்கிறார் பாருங்கள்:

"இரவுகள் ஒன்றிரண்டு மணித்தியாலங்களைப் பகலிடம் இருந்து திருடிக்கொள்ளும் பனிக்காலம். ஓர் இரவு, தொலைப்பேசி வந்தது. நண்பர், தமிழ் மழலைப் பாடல்கள் (nursery rhymes) புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்டார். எனக்கு தெரியவில்லை. மனைவியைக் கேட்டேன். எல்லாம் தெரிந்த அவளுக்கும் தெரியவில்லை. அடுத்த நாள் நாங்கள் மூவரும் கனடாவின் கடைகளில் ஏறி இறங்கினோம். ஆங்கிலத்தில் nursery rhymes இருந்தன. ஆனால் தமிழில் அப்படி ஒன்றும் இல்லை என்று கையை விரித்துவிட்டார்கள். "

9: மீண்டும்...

மற்றதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த விஷய்ம்தான். ·பிளாஷ் பாக்கில் ஆரம்பிப்பது, திகைப்பூட்டும் ஒற்றை வரியில் ஆரம்பிப்பது ('இறந்தவன் பேச ஆரம்பித்தான்') மேற்கோளில் ஆரம்பிப்பது. எப்படி வேண்டுமானலும் ஆரம்பியுங்கள். ஆனால்-

கட்டுரையின் முதல் வரியைப் பார்க்கவும்!
Download Opera, the fastest and most secure browser
December 2009
S M T W T F S
November 2009January 2010
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31