Skip navigation.

வாழ்க தமிழ்!வளர்க அதன் சிறப்பு!

வீழ்வது நாமாயினும் வெல்வது நம் தமிழ் மொழியாக இருக்கட்டும்!

Posts tagged with "story"

எது நாத்திகம்? (சிறுகதை)

, ,

"ஆனந்த் நீ ஒரே ஒரு தடவை வந்து அவரைப் பார். அப்புறம் நீ அவர் பக்தனாயிடுவாய்"

கதிர் இதைச் சுமார் நூறு தடவையாவது சொல்லியிருப்பான். கடைசியில் அவன் தொந்தரவு பொறுக்க முடியாமல் ஆனந்த் புவனகிரி சுவாமிகளைப் பார்க்கச் சம்மதித்தான்.

புவனகிரி சுவாமிகள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர். கீதையாகட்டும், திருவாசகமாகட்டும் சுவாமிகள் பேசும் போது எப்படிப்பட்ட மனதும் கரைந்து விடுமாம். பௌர்ணமி அன்று பூஜை முடிந்து அவர் கொடுக்கும் குங்குமத்திலும் விபூதியிலும் பலருக்கு குட்டிக் கிருஷ்ண விக்கிரகமும், லிங்கமும் கிடைத்திருக்கின்றனவாம். அவர் அன்று பூஜை செய்யும் போது அவர் தலைக்கு மேலே சில சமயம் ஏதோ ஜோதி தெரிவதுண்டாம். இப்படிப் பலரும் பல கதைகள் அவரைப் பற்றிச் சொன்னார்கள். கதிர் ஒரு முறை அவரை தரிசித்து விட்டு அவரது பரம பக்தனாகி விட்டான். அவரது பக்தராக அங்கீகரிக்கப் படுபவர்களுக்கு அவரது படம் டாலராகத் தொங்கும் செயின் ஒன்றைத் தருவாராம். முதல் சந்திப்பிலேயே அந்தச் செயினைக் கதிர் பெற்றுக் கொண்டு வந்து விட்டான். அன்றிலிருந்து தன் நண்பனையும் அவரிடத்திற்கு அழைத்துப் போக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறான்.

ஆனந்திற்கு இது போன்ற பௌர்ணமி பூஜை அற்புதங்கள் எல்லாம் ஆன்மீகத்திற்கு அவசியம் என்று தோன்றவில்லை. ஆகவே முடிந்த வரை அங்கு போவதைத் தள்ளிப் போட்டான். இன்று போய்த் தான் பார்ப்போமே என்று அவரது ஆசிரமத்திற்குக் கிளம்பியுள்ளான்.
நண்பர்கள் ஆசிரமத்தை அடைந்த போது அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. சுவாமிகள் ஒரு சிம்மாசனம் போன்ற நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். ஒரு பக்தர் அவருக்குப் பாத பூஜை செய்து கொண்டிருந்தார். அங்கு வரிசையாக சிலர் நிற்பதைப் பார்த்து ஆனந்த் கதிரிடம் விசாரித்தான்.

"அதுவா. அவர்களும் சுவாமிகளுக்குப் பாத பூஜை செய்ய நிற்கிறார்கள். ஆயிர ரூபாய் கட்டணும்" என்று சொன்ன கதிர் ஆனந்தின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு "அது... ஆசிரமத்தைப் புதுப்பிக்கிறாங்க. அதுக்காகத் தான் வாங்கறாங்க" என்றான்.

சுவாமிகளின் பாத பூஜை முடிந்தது. அவர் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். அன்று பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயம் பற்றிப் பேசினார். பிழையில்லாமல் சமஸ்கிருத சுலோகங்களும் பெரும் தத்துவ சிந்தனைகளும் அவர் வாயிலிருந்து சரளமாக வந்தன. 'ஸ்திதப் ப்ரக்ஞன்' யாரென அழகாக விவரித்தார். எவனொருவன் தன் ஆசைகளை எல்லாம் களைகிறானோ, இன்ப துன்பங்களை ஒரு போல பாவிக்கிறானோ, பற்றுதலோ, கோபமோ, பயமோ இல்லாதிருக்கிறானோ அவனே ஸ்திதப் ப்ரக்ஞன் என்று சொல்லச் சொல்ல அவர் பின்னால் ஓடிக் கொண்டிருந்த டேபிள் ·பேன் திடீரென்று தன் ஓட்டத்தை நிறுத்தியது. அவர் பேச்சும் நின்றது. ஒரு சிஷ்யன் அதைச் சரி செய்ய முயன்று முடியாமல் சிறிது நேரம் திணறினான். வியர்த்து தவித்துப் போன சுவாமிகள் அவனை எரிச்சலுடன் பார்த்தார். வேறொருவன் எங்கிருந்தோ ஓடோடி வந்து சரி செய்யும் வரை ஏதோ நடக்கக் கூடாத விபரீதம் நடந்து விட்டது போன்ற ஒரு உணர்வுடன் கூட்டத்தினர் அந்தக் காட்சியைப் பார்த்தனர்.

ஒரு வழியாக ·பேனும் ஓட அவர் பேச்சும் தொடர்ந்தது. அந்த சமயத்தில் ஒரு பிரபல பத்திரிக்கை நிருபர் வந்து சுவாமிகளைப் படம் எடுக்கத் துவங்கினார். அந்த நிருபர் தன் பணியை முடிக்கும் வரை சுவாமிகளின் பேச்சு கீதையிலும் கண்கள் நிருபர் மீதும் இருந்தன. பின்பு அறுபத்தி ஏழாவது சுலோகத்தை அழகாகச் சொன்னார். 'கடலில் உள்ள ஓடத்தை பெருங்காற்று அடித்துச் செல்வது போல தன்வசப்படுத்தாத ஒரு புலனும் மனிதனின் புத்தியை கவர்ந்து செல்கிறது.'

ஆனந்த் கதிரைப் பார்த்தான். கதிர் பக்தியுடன் சுவாமிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சுவாமிகளின் பேச்சு முடிந்தவுடன் கூட்டத்திலிருந்து பலரும் ஒவ்வொருவராகச் சென்று சுவாமிகளின் பெருமைகளைப் பேசினார்கள். அவரை ஆன்மீக சிகரம் என்றார்கள். மஹா யோகி, மகரிஷி என்றெல்லாம் அழைத்தார்கள். சுவாமிகள் மலர்ந்த முகத்துடன் அதை ரசித்ததாகத் தோன்றியது. அப்படிப் பேசிய சில பக்தர்களை அழைத்து தனது பட டாலர் உள்ள செயினையும் தந்து ஆசிர்வதித்தார். ஆனந்த் எதிர்பாராத விதமாக கதிரும் எழுந்து போய் பேசினான். ஒரே சந்திப்பில் தான் சுவாமிகளின் பக்தனாகியது எப்படி என்று விவரித்தான். அதோடு அவன் நிறுத்த்¢யிருக்கலாம். தொடர்ந்து வேண்டிக் கொண்டான். "என் நண்பன் ஆனந்தும் இங்கு வந்திருக்கிறான். அவனையும் தங்கள் பக்தனாக ஏற்றுக் கொண்டு ஆசி வழங்கும்படி சுவாமிகளை நமஸ்கரித்து கேட்டுக் கொள்கிறேன்"

ஆனந்த் பெரிய தர்மசங்கடத்தில் சிக்கித் தவித்தான். கதிர் அவனருகே வந்து அவனைப் போகச் சொல்ல, எல்லோரும் அவனையே பார்த்தார்கள். அவனது தயக்கத்தைக் கூச்சம் என்று எடுத்துக் கொண்ட சுவாமிகள் பெருந்தன்மையோடு அவனை பேச அழைத்தார். வேறு வழியில்லாமல் ஆனந்த் போனான்.

"மன்னிக்கணும். எனக்கு உங்கள் பக்தனாகும் எண்ணமே இல்லை. நான் பேசினால் இதற்கு முன்னால் பேசியவர்கள் பேசிய மாதிரி இருக்காது. என் மனதில் பட்டதை அப்படியே சொல்வேன். அது நல்லாயிருக்காது" என்று வெளிப்படையாக அவன் சொன்னவுடன் சுவாமிகள் அந்தப் பத்திரிக்கை நிருபரைப் பார்த்து புன்னகை செய்த படி "பரவாயில்லை. சொல்" என்றார். அவனது எந்த விமரிசனத்திற்கும் வேதங்களில் இருந்தும் ஆன்மீக இலக்கியங்களில் இருந்தும் பல எடுத்துக் காட்டுகள் சொல்லி அந்த நிருபரைப் பிரமிக்க வைக்க ஒரு சந்தர்ப்பமாக இதை அவர் நினைத்த மாதிரி இருந்தது.


அதற்கு மேல் ஆனந்த் தயங்கவில்லை. "சுவாமி. ஒரு சராசரி மனிதனுக்குத் தேவையான பணம், சௌகரியங்கள், மற்றவர்களுடைய அங்கீகாரம் எல்லாம் உங்களுக்கும் தேவைப்படுகிறது என்பதை இங்கே நானே கண்கூடாகப் பார்த்தேன். ஒரு மகரிஷி ஸ்தானத்தில் உங்களை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. "

அவன் இப்படிச் சொல்வான் என்று யாருமே அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. சுவாமிகளின் முகம் கறுத்தது. அவரது சீடர்களில் ஒருவர் அவனுக்குப் பதில் சொல்ல விரைந்து வந்தார்.

"வேதங்களையும் உபந்¢ஷத்துகளையும், தேவாரம் திருவாசகங்களையும் கரைத்துக் குடித்த சுவாமிகளை சாதாரண மனிதன் என்று சொல்வது குருடன் ஓவியனைக் குறை சொல்வது போலத்தான். அவர் அளவுக்கு வேண்டாம், அவருக்குத் தெரிந்த இந்த ஆன்மீக நூல்களில் இருந்து கொஞ்சமாவது உன்னால் சொல்ல முடியுமா தம்பி"

சுவாமிகள் முகம் மலர்ந்தது. ஒருசிலர் கை தட்டினார்கள்.

ஆனந்த் புன்னகை மாறாமல் பதில் சொன்னான். "என்னால் முடியாது என்று நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இத்தனையும் என் கம்ப்யூட்டர் டிஸ்கின் உள்ளே இருக்கின்றன. அதற்காக நான் என் கம்ப்யூட்டரைக் கும்பிட முடியுமா? இதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் மகரிஷி ஆகி விடுவதில்லை. இந்த போதனைகளை ஒவ்வொரு கணமும் தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுபவர் தான் மகரிஷி. அந்தப் பெயருக்குப் பொருத்தமாய் ஒருவர் திருவண்ணாமலையில் ஒரு காலத்தில் இருந்தார்...."

மேலே அவனைப் பேச விடாமல் சுவாமிகளின் சில பக்தர்கள் கத்த ஆரம்பித்தனர். அந்த ஆசிரமம் கிட்டத் தட்ட ஒரு மினி சட்டசபையாக மாறியது. ஆனந்த் அமைதியாக அங்கிருந்து வெளியேறினான். கதிர் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, ஓரிருவர் ஆனந்தைத் தொடர்ந்து வெளியேறினார்கள்.

கோபத்தில் முகம் சிவக்க புவனகிரி சுவாமிகள் சொன்னார். "இது போன்ற நாத்திகம் பேசும் மூடர்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. இனி இது போன்ற ஆட்களை அழைத்து வந்து யாரும் ஆன்மிகத்தைக் களங்கப் படுத்த வேண்டாம்".

(Soruce:- http://enganeshan.blogspot.com/2007/10/blog-post_1813.html)

அன்றைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல்...................

, , ,

நேற்றைய அறிவியல் உண்மை இன்றைக்கு உண்மையல்ல என்று நிரூபிக்கப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆணித்தரமாக உண்மை என்று நம்பி வந்த நியூட்டனின் பௌதிகம் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகளுக்குப் பின் உண்மையில்லை என்றாகி விட்டது. இப்படி வருடங்களில் அறிவியல் சித்தாந்தங்கள் முன்னுக்குப் பின் முரணாக மாறி வருகின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய உபநிடதங்களில் இன்றைய அறிவியல் உண்மைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன என்றால் ஆச்சரியமே அல்லவா?

முதலில் இன்றைய அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். பெரிய டெக்னிகல் வார்த்தைகளுக்குப் போகாமல் பொதுவாக கண்டறியப்பட்ட சில உண்மைகளைப் பார்ப்போம்.

அணுக்களில் இருந்து x கதிர்களும், பலவிதமான சக்தி வெளிப்பாடுகளும் வெளிப்படுவதைக் கண்ட விஞ்ஞானிகளுக்கு அணுவுக்குள் என்ன இருக்கிறது என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அணுவை அதை விட நுட்பமான ஆல்பா கதிர்களால் துளைத்துப் பார்த்தார்கள்.

அணுவுக்குள் உள்ளே பெரும்பாலும் வெட்ட வெளியாக இருப்பதையும் மையத்தில் கரு போல சில ப்ரோட்டான் துகள்களும் அவற்றைச் சுற்றியபடி சில எலக்ட்ரான் துகள்களும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டனர். உதாரணமாக ஒரு மிகப் பெரிய மண்டபத்தை அணுவென்று எடுத்துக் கொண்டால் கடுகு அளவு தான் அதன் உட்கரு இருந்தது.

அந்த அணுத்துகள்களை ஆராய்ந்த போது தான் விஞ்ஞானிகள் குழம்பிப் போனார்கள். எதையும் ஆணித்தரமாக சொல்லும் சக்தி படைத்ததாக கருதப்பட்ட விஞ்ஞானம் அணுவைப் பிளந்து பார்த்த போது பிரமித்து பேச்சிழந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். காரணம் அந்தத் துகள்கள் சில சமயங்களில் திடப் பொருளாகக் காணப்பட்டாலும் சிலசமயங்களில் அலைகளாக மாறுவதைக் கண்டு அதிசயித்தார்கள். துகள் என்றால் அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது ஓரிடத்தில் இருக்க வேண்டும். அலை என்றால் அது எங்கும் பரவி இருப்பது. ஆனால் ஒரே வஸ்து இந்த முரணான இரட்டை நிலைகளில் எப்படி இருக்க முடியும்? சில சமயங்களில் பார்க்கின்ற போதே பார்க்கும் விதத்திற்குத் தக்க துகள்கள், அலைகள் என மாறிக் காட்சி அளிக்கும் இந்த வினோதம் விஞ்ஞானம் இது வரை கண்டிராதது. இதுவே ஐன்ஸ்டீன் சொன்ன க்வாண்டம் சித்தாந்தத்தின் அடிப்படை தத்துவம்.

மேலும் ஒரு துகள் அணுவுக்குள் இந்த இடத்தில் இருக்கும் என்று சொல்ல முடியாது. அங்கு துகள் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஒரு கோணத்தில் பார்க்கும் போது துகளாகத் தெரிவது வேறொரு கோணத்தில் காணாமல் போய் அலையாக மாறி கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒரே நேரத்தில் இரண்டுமாய் எப்படி அது இருக்க முடியும் என்பதை விஞ்ஞானம் விளக்க முடியாமல் திணறியது.

கடைசியில் அணுவைப் பிளந்த விஞ்ஞானம் உள்ளே இருக்கும் இருக்கும் துகள்களை சக்தியின் வெளிப்பாடான பல வடிவங்களாகக் கண்டது. அவை சதா சஞ்சரித்துக் கொண்டிருப்பதையும், ஒன்றுடன் ஒன்று உறவாடுவதையும், தத்தம் சக்திகளைப் பரிமாறிக் கொள்வதையும் விஞ்ஞானிகள் கண்டனர். அவை சக்திகளை பல விதங்களில் வெளிப்படுத்துவதையும், புதிது புதிதாக மாறுவதையும் கண்டு அதிசயித்தனர். இயற்கை விஞ்ஞானிகளுக்கு வசதியாக எதையும் தனியாகப் பிரித்துக் காட்டவில்லை. அவர்களால் உணர முடிந்ததெல்லாம் அந்த துகள்களின் இயக்கத்தின் விளைவுகளையே. முடிவில்லாத இந்த இயக்கத்தின் விளைவாக ஏற்படும் ஒட்டு மொத்த வடிவமைப்பே நாம் காணும் பொருள்கள். உண்மையில் பிரபஞ்சம் முழுவதுமே ஓர் சக்தி இயக்கம் தான், உலகமே சக்தியின் துடிப்பு தான் என்ற முடிவுக்கு விஞ்ஞானம் வந்திருக்கிறது. சில உண்மைகள் தெளிவாக வார்த்தைப்படுத்த முடியாதவை என்பதையும் அறிவியல் ஒத்துக் கொண்டு இருக்கிறது.

இப்போது சில உபநிடதங்கள் சொல்வதைப் பார்ப்போம்.

சாண்டோக்கிய உபநிடதத்தில் பிரபஞ்சத்தின் மூலத்தை விளக்க முற்பட்ட ஒரு குரு தன் சிஷ்யனிடம் ஒரு ஆலமரத்தின் பழத்தைக் கொண்டு வரச் சொன்னார்.

"இந்தாருங்கள் குருவே"

"அதை உடை"

"உடைத்தேன் குருவே"

"உள்ளே என்ன இருக்கிறது?"

"மிக நுணுக்கமான சில துகள்ப் பொடிகள்"

"அதையும் உடை"

"உடைத்தேன் குருவே"

"அதனுள் என்ன பார்க்கிறாய்?"

"ஒன்றும் இல்லையே குருவே"

"உன் கண்ணுக்குப் புலப்படாத அந்த சூட்சும சூனியத்தில் தான் அந்தப் பெரிய ஆலமரத்தின் மூலம் இருக்கிறது. அது போல சூட்சும சக்தியில் தான் ஒவ்வொன்றின் மூலமும் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சமும் அந்த சூட்சும சக்தியில் தான் இருக்கிறது. இயங்குகிறது"

அணுவை உடைத்து அறிவியல் அறிஞர்கள் கண்டதும் இதையே அல்லவா?

கதோபநிடதத்தில் எமதர்மன் நசிகேதனிடம் சொல்கிறார். "ஆத்மா என்பது நுணுக்கத்திலும் மிக நுணுக்கமானது. அதை வாதங்களால் அறிய முடியாது. உணர மட்டுமே முடியும்?"

ஈசோபநிடதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது:
"அது நகர்கிறது. அது நகர்வதில்லை.
அது தூரத்தில் இருக்கிறது. அது போல அருகேயும் இருக்கிறது.
அது எல்லாவற்றின் உள்ளேயும் இருக்கிறது.
அது எல்லாவற்றின் வெளியேயும் இருக்கிறது"

பிரகதாரண்ய உபநிடதம் சொல்கிறது: "பிரம்மம் என்பது வடிவில்லாதது. அழிவில்லாதது. சதா இயங்கிக் கொண்டிருப்பது....."

இதையெல்லாம் முதலில் சொன்ன அறிவியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த அறிவியல் உண்மைகளை அறிந்தும் உணர்ந்துமிருந்தார்கள் என்று தோன்றுகிறது அல்லவா?

(Soruce:- http://www.enganeshan.blogspot.com/)

கணினி தொழில்நுட்பத்தில் குட்டிக் கதைகள்...........

, , ,


கணினி தொழில்நுட்பம், நிரல் (Programme) உருவாக்குதல் குறித்து சுவையான குட்டிக் கதைகள் உள்ளன. ஜென் கதைகளின் பாணியில் இருக்கும் இவை ஜெஃப்ரி ஜேம்ஸ் எழுதிய "தி தாவோ ஆஃப் புரோகிராமிங்" என்ற தொகுப்பில் இருக்கின்றன.

மானேஜரைக் காப்பாற்றிய புரோகிராமர்

ஒரு கம்பெனியில் ஒரு மானேஜரை வேலை விட்டுத் தூக்குவது என்று முடிவெடுத்தார்கள். ஆனால் அவருக்குக் கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு புரோகிராமர் புதிதாக ஒரு புரோகிராமை எழுதினார். அந்த புரோகிராம் பிரபலமடைந்து நிறைய விற்பனை ஆனது. எனவே இதன் விளைவாக அந்த மானேஜரின் தலை தப்பித்தது.

மானேஜர் அந்த புரோகிராமருக்கு போனஸ் கொடுக்க முயற்சி செய்தார். புரோகிராமர் வாங்க மறுத்துவிட்டார். "சுவாரஸ்யமான கான்செப்ட்டாக இருக்கிறதே என்றுதான் அந்த புரோகிராமை எழுதினேன். எனவே நான் ஒரு சன்மானத்தையும் எதிர்பார்க்கவில்லை" என்றார் புரோகிராமர்.

இதைக் கேட்ட மானேஜர், "இந்த புரோகிராமர் அற்பமான பதவியில் இருந்தாலும் ஒரு ஊழியனின் கடமையை ஒழுங்காகப் புரிந்து வைத்திருக்கிறான். இவனை மானேஜ்மென்ட் கன்சல்டன்ட் என்கிற மகத்தான பதவிக்கு உயர்த்துவோம்" என்றார்.

மானேஜர் புரோகிராமரிடம் இதைச் சொன்னபோது அவர் மீண்டும் மறுத்து இப்படிச் சொன்னார் : "நான் புரோகிராமிங் செய்வதற்காகத்தான் உயிர் வாழ்கிறேன். எனக்குப் பதவி உயர்வு கொடுத்துவிட்டால் நான் மற்றவர்கள் நேரத்தை வீணாக்குவதைத் தவிர உருப்படியாக வேறெதுவும் செய்ய மாட்டேன். சரி, நான் போகலாமா? நான் ஒரு புரோகிராம் எழுதிக் கொண்டிருக்கிறேன்."

வேலை நேரம்

ஒரு மானேஜர் தன் புரோகிராமர்களிடம் சொன்னார் : "உங்கள் வேலை நேரத்தைப் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இனிமேல் நீங்கள் காலை ஒன்பது மணிக்கு வந்து மாலை ஐந்து மணிக்குக் கிளம்ப வேண்டும்." எல்லா புரோகிராமர்களும் இதைக் கேட்டு கடுப்பானர்கள். அவர்களில் பலர் உடனே ராஜினாமா செய்தார்கள்.


எனவே அந்த மானேஜர் சொன்னார் : "ஓ.கே., அப்படியென்றால் உங்கள் வேலை நேரத்தை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் ப்ராஜெக்ட்களை நேரத்தில் முடித்துவிட வேண்டும்." இந்த ஏற்பாட்டில் திருப்தி அடைந்த புரோகிராமர்கள், பகலில் வந்து அடுத்த நாள் அதிகாலை வரை வேலை செய்யத் தொடங்கினார்கள்.

ஒரு ப்ராஜெக்ட்டை முடிக்க ஆகும் நேரம்

ஒரு மானேஜர் ஒரு டாப் புரோகிராமரிடம் போனார். ஒரு புதிய அப்ளிகேஷனை உருவாக்குவதற்கு என்னென்ன தேவை என்ற விபரங்கள் அடங்கிய டாக்குமென்ட் ஒன்றைக் காட்டினார். "இந்த சிஸ்டத்தை வடிவமைக்க ஐந்து புரோகிராமர்களை நியமித்தால் இந்த வேலை முடிய எவ்வளவு காலம் ஆகும்?" என்று டாப் புரோகிராமரைக் கேட்டார்.

"ஒரு வருடம் ஆகும்" என்று டாப் புரோகிராமர் உடனே பதிலளித்தார்.

"ஆனால் இந்த சிஸ்டத்தை நாம் உடனடியாக முடித்தாக வேண்டுமே! நான் அதற்கு 10 புரோகிராமர்களைப் போட்டால் எத்தனை நாள் ஆகும்?" என்றார் மானேஜர்.

டாப் புரோகிராமர் எரிச்சல் அடைந்தார். "அப்படியென்றால் இரண்டு வருடம் ஆகும்" என்றார்.

"100 புரோகிராமர்களை நியமித்தால்?"

டாப் புரோகிராமர் தோளைக் குலுக்கினார். "பிறகு அந்த டிசைனை செய்து முடிக்கவே முடியாது."

உண்மை எதில் இருக்கிறது?

ஒரு புரோகிராமிங் ஞானி உண்மையின் தன்மையைப் பற்றி தனது இளம் சீடர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

"உண்மை என்பது எல்லா சாஃப்ட்வேர்களிலும் பொதிந்திருக்கிறது - அவை எவ்வளவு அற்பமானவையாக இருந்தாலும் சரி" என்றார் ஞானி.

"உண்மை கையடக்க கால்குலேட்டரில் இருக்கிறதா?" என்றான் ஒரு சீடன்.

"இருக்கிறது" என்றார் ஞானி.

"உண்மை ஒரு வீடியோ கேமில் இருக்க முடியுமா?" என்றான் அந்த சீடன்.

"அது வீடியோ கேமிலும் இருக்கிறது" என்றார் ஞானி.

"உண்மை கம்ப்யூட்டரில் இருக்கும் chip-ல் இருக்கிறதா?"

இதைக் கேட்ட ஞானி செருமிக்கொண்டார், லேசாக நெளிந்தார். பிறகு சொன்னார் : "இன்றைய பாடம் முடிந்தது."

பெரிய கம்பெனி

ஒரு சீடன் தனது புரோகிராமிங் குருவைக் கேட்டான் : "ஒரு கம்பெனி மற்ற கம்பெனிகளை விட மிகப் பெரிதாக இருக்கிறது. குள்ளர்களுக்கு இடையில் ஒரு ராட்சஸன் போல் அது தனக்குப் போட்டியான நிறுவனங்களை விட மிகவும் உயர்ந்திருக்கிறது. அதன் பிரிவுகளில் ஒன்றை எடுத்துக் கொண்டால் கூட அந்த ஒரு பிரிவே தனி கம்பெனியாக இயங்கலாம். இது எப்படி நடக்கிறது?"

குரு பதில் சொன்னார் : "ஏன் இப்படி முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கிறாய்? அந்த கம்பெனி ரொம்பப் பெரிதாக இருப்பதால் பெரிதாக இருக்கிறது, அவ்வளவுதான். அது ஹார்டுவேரை மட்டும் தயாரித்தால் யாரும் அதை வாங்க மாட்டார்கள். அது சிஸ்டம் மெயின்டெனன்ஸ் மட்டும் செய்தால் மக்கள் அந்த கம்பெனியை ஒரு வேலைக்காரனைப் போல் நடத்துவார்கள். ஆனால் அது இந்த எல்லா விஷயங்களையும் சேர்த்து செய்வதால் மக்கள் அதைக் கடவுளைப் போல் நினைக்கிறார்கள்! அது போராட முயற்சி செய்யவில்லை. எனவே அது பிரயத்தனம் இல்லாமலே ஜெயிக்கிறது."

கல்கி வளர்த்த சிரிப்பலைகள்---சுஜாதா

, , , ...

சிரிப்பது சுலபம். ஆனால் சிரிக்க வைப்பது மிகவும் கடினமான காரியம். அவ்வளவு சீரியசான விஷயம் நகைச்சவை. நகைச்சுவை என்றால் என்ன? ஒரு கருத்தை மற்றொரு கருத்தோடு முரண்பட வைத்து (Conflict), அதன் மூலம் எதிர்பாராத ஒரு சந்தோஷத்தை - பரவசத்தைக் கொடுப்பது. (அப்பரவசம் திடீரென்று ஒரு Explosion போல் வரவேண்டும்) முடிந்தால், நம் சிந்தனைத் திறனையும் உயர்த்துவது. மிக உயர்ந்த நகைச்சுவை, நம் சிந்தனையை - சமூகத்தை உயர்த்தும் நோக்கிலே அமைய வேண்டும். இன்னொரு விஷயம் - இருவேறு கருத்துக்களையும் தனித்தனியா பார்த்தால் நகைச்சுவை இருக்காது, இருக்கக்கூடாது என்றே சொல்லாம்.

தமிழில் எல்லாமே சங்க காலத்தில்தான் துவங்குகின்றன என்று சொல்கிறார்கள். பிசிராந்தையார் எழுதின ஒரு பழைய சங்க காலப் பாடலைப் பார்ப்போம் :

”யாண்டு பலவாக நரை இல ஆகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்”

இவை முதல் வரிகள். காரணம் என்ன? ”ராஜா நன்றாகப் பரிபாலனம் செய்ததால் குடிமக்கள் எல்லாரும் ஒழுக்கமாக வாழ்ந்தார்கள். அதனால் கவலை இல்லை… நரையும் இல்லை” என்பது பழைய பாடலின் கருத்து. மேற்சொன்ன வரிகளுடன் இன்னும் இரண்டு வரி சேர்க்கிறார் இன்றைய கவிஞர் -

”ஆண்டு தவறாமல் வரி கட்டுகிறேன்
மீண்டும் மீண்டும் டை அடித்துக்கொள்கிறேன்!”

இதிலுள்ள முரண்பாடுகள் என்ன? சங்க காலம் - தற்காலம், சங்க காலத் தமிழ் - இன்றையத் தமிழ். ஆதரிச உலகம் (புறநானூற்றுப் பாடல்படி) - யதார்த்த உலகம்.

யோசித்துப் பார்த்தால் இத்தகைய முரண்பாடுகள் எல்லா படைப்பு இலக்கியத்துக்கும் ஆதாரமானவை. ஆர்தர் கோஸ்லர் என்கிற ஆசிரியர் சொல்கிறார். ”The spirit of creation is the spirit of contradiction - it is the break through of appearances towards an unknown reality.”

நல்ல நகைச்சுவை பிறரைச் சிரிக்க வைக்க வேண்டும். இதை இருவிதமாக வகைப்படுத்தலாம். இன்பத்தில் சிரிப்பது. துன்பத்தில் நகைப்பது. உதாரணத்துக்கு ஒரு நாடகக் காட்சி - ஒரு நடிகன் மேடையில் நாற்காலியை நோக்கிப் பேசிக்கொண்டே வருகிறான். ஓரிரண்டு நாற்காலிகள் இருக்கின்றன. உட்கார முயலுகையில் யாரோ வேலைக்காரன் நாற்காலியை இழுத்துவிட, அவன் பொத்தென்று விழுகிறான்.

இதையே சற்று மாறுதலாகப் பார்க்கலாம். மேடையில் உட்கார நாற்காலி ஏதுமே கிடையாது. நடிகன் ஆழ்ந்த சிந்தனையுடன் நாற்காலி இருக்கிறதென்று நினைத்து நடந்து செல்கிறான். தன்னிச்சையாக உட்கார வருகிறான். சட்டென்று ஒருத்தர் அவனுக்குக் கீழ் ஒரு நாற்காலி போடுகிறார். இப்போதும் சிரிப்பு வருகிறது. (இது போன்ற காட்சிகளை சார்லி சாப்ளின் படத்தில் பார்க்கலாம்.)

இரண்டாம் நகைச்சுவை சற்று உயர்ந்தது. முதலாவது பிறர் துன்பத்தில் மகிழ்வது. (துச்சாதனன் விழுந்ததைக் கண்டு திரெளபதி சிரித்ததால்தான் ஒரு பாரதப் போரே நிகழ்ந்திருக்கிறது). இத்தகைய தரம் குறைந்த நகைச்சுவையில், வாய் பேசாமலிருப்போர், காது கேளாதவர் இவர்களைப் பின்னி வரும் ‘ஜோக்’குகளைச் சேர்க்கலாம்.

பல சினிமாக்களில் பார்த்திருக்கக் கூடும், கவுண்டமணி - செந்தில் ஹாஸ்யங்கள். கண்டபடி திட்டுவார்கள், உதைத்துக் கொள்வார்கள், Gut level jokes எனக் குறிப்பிடுவார்கள் ஆங்கிலத்தில். நியாயமாக, இவைகளைக் கண்டு நாம் சிரிக்கக்கூடாது. ஆனாலும் சிரிப்பு வருகிறது. அடி-உதை வாங்குகிற காட்சிகளைப் பார்க்கும்போது. ஏன்? எதனால்? மன வல்லுநர்கள் ஒரு காரணம் சொல்லுகிறார்கள். நம் எல்லாருக்கும் உள்ளுக்குள் ஓர் ஆதிமனித இச்சை புதைந்து இருக்கிறது. Aggression. அந்த இச்சைக்கு ஒரு வடிகாலாக - அதுவும் எந்தவிதமான சமூகப் பொறுப்போ, உபத்திரவமோ இல்லாது - இது அமைகிறது. நமது வாழ்க்கைப் போராட்டத்தில் பலவிதமான கோபங்கள், ஏக்கங்கள், அவமானங்கள் உள்ளன. அவைகளுக்கு வடிகாலாக, யாரையாவது அதட்ட, அடிக்க, அவமானப்படுத்த வேண்டுமென்கிற ஆசை ஒன்று வருகிறது. அதன் வெளிப்பாடுதான் நாம் இது போன்ற காட்சிகளில் சிரிப்பது (துன்பத்தைக் கண்டு சிரிப்பது.)

சர்க்கஸ் ப·பூனை உதாரணமாகப் பார்க்கலாம். அவனை மற்றொருவன் அடி அடியென்று அடிப்பான். உதைத்துப் பின்னிவிடுவான். (அசல் வாழ்க்கையில் நாம் யாரையாவது உதைத்தால் போலீஸ் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள்!) நம்மையுமறியாமல் சிரிப்பதும் இத்தகைய உள் இச்சையின் வெளிப்பாடே.

மிருகங்களை மனிதர்கள் மாதிரி நடக்க வைப்பது பேச வைப்பது ஒரு வித நகைச்சவை. Human Metaphor என்று சொல்லுகிறார்கள். Charles Schulez என்ற எழுத்தாளர் Snoopy என்ற ஒரு நாய் வளர்த்து வந்தார். அது விநோதமான குணங்கள் சில உடையது. அதற்குச் சிலரைப் பிடிக்கும்- வேறு சிலரைக் கண்டால் பிடிக்காது. ‘லுஸி’ என்கிற பெண்ணைப் பிடிக்குமாம். ”எவ்வளவு பிடிக்கும்?” என்று கேட்டால், வாலை விஸ் விஸ் என்று தீவிரமாக ஆட்டுமாம். ”என்னை எவ்வளவு பிடிக்கும்?” இப்போது வாலின் நுனியை மட்டும் ஆட்டுமாம்!

வேறொரு வகை ஹாஸ்யமும் இருக்கிறது. நன்கு யோசித்தால் புலப்படும். மூன்று வெவ்வேறு காட்சிகளைக் கற்பனை செய்து பாருங்கள் - (1) யதார்த்தமான ஒரு நாடகம் நடந்து கொண்டிருக்கிறது… திடீரென்று கதாநாயகனின் வேட்டி அவிழ்கிறது. (2) கல்லூரியில் வெகு சீரியஸாகப் புரொபஸர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் - அறைக்கு வெளியேயிருந்து நாய் ஒன்று எட்டிப் பார்க்கிறது. (டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்த்திருக்கக்கூடும். திடீரென்று மைதானத்தில் குறுக்கே நாய் ஓடும்) (3.) ஓர் அபாரமான கோரஸ் மியூசிக்… மிகப் பெரிய வயலினிஸ்ட் ஸிம்பனி ஆர்க்கெஸ்டிரா நிகழ்த்துகிறார்… ரசிகர்கள் கட்டுண்டு இருக்கிறார்கள். அப்போது வயலின் ஒன்று ஒருத்தரிடமிருந்து நழுவிக் கீழே விழுந்து விடுகிறது. (இத்தகைய காட்சி ஹாஸ்டல் சங்கீதக் கச்சேரியின்போது, கடம் தூக்கிப் போட்டு ‘ஆவர்த்தனம்’ செய்கையில் உடைந்ததைப் பார்த்ததுண்டு.)

மேலே சொன்ன மூன்றிலுமே, நமக்குத் திடீரென்று சிரிப்பு கொப்புளிக்கிறது - ஒரு விதக் குற்ற உணர்வையும் மீறி. மூன்று காட்சியிலுமே ஒரு ஒற்றுமையைக் காணலாம். ரொம்பத் தீவிரமான விஷயத்திலிருந்து, திடீரென்று மிக அற்பமான விஷயத்துக்கு ‘இடம் பெயர்தல்’ நிகழ்கிறது. ”Suddenly jerked into another plane.” ஓர் இறுக்கமான சூழ்நிலையிலிருந்து சட்டென்று விடுபடும்போது தன்னிச்சை¨யாகப் புன்னகை வருகிறது. உன்னதமான விஷயமும், அபத்தமான விஷயமும் முரண்படும்போது ஏற்படும் சிரிப்பு.

A GUIDE TO BORING என்ற புஸ்தகம் - ‘போர்’ அடிக்காத புஸ்தகமொன்று இருக்கிறது. ”என் மச்சினிக்கு 1950ல் கல்யாணம் ஆயிற்று” என்று ஆரம்பிக்கிறார். தொடர்ந்து ”இருக்காதே! 50லே நான் லண்டனில் இருந்தேனே? ஒரு வேளை 49லா?” - இதேபோல் சொல்லிக் கொண்டே போக வேண்டும். கேட்கிறவருக்கு பயங்கரமான அலுப்பு வரும் அளவுக்கு! அவர் கொட்டாவி விட்டபடி பறக்கிற ஈயன்றைக் கவனித்துக் கொண்டிருப்பார். இப்படியே விஷயத்துக்கு வராமல் இழுப்பு இழுத்துக் கொண்டே போய் - கடைசியில் சாவதானமாக சமாசாரத்துக்கு வருகிற பாணியில் ஹாஸ்யம் கொண்டு வருவார்கள்.

பயிலரங்கத்தில் வந்த மாணவன் கொண்டு வந்த நகைச்சுவை இதற்கு ஒரு சரியான உதாரணம் -

”அந்த பைபிள்மீது சத்தியமாகச் சொல்லுகிறேன், எனக்குத் தெரியாது!”

”இப்படியே போங்க…. முதல் தெருவை விட்டுடுங்க… இரண்டாவது தெருவை விட்டுடுங்க… மூன்றாவதை விட்டுடுங்க. வலது பக்கம் திரும்புங்க… முதல் சந்தை விட்டுடுங்க… இரண்டாவதை விட்டுடுங்க… மூன்றாவதையும் விட்டுடுங்க… திரும்பினதும் ஒரு லைப்ரரி இருக்கிறது…. முதல் அறையை விட்டுடுங்க… இரண்டாவது அறையை விட்டுடுங்க… மூன்றாவதையும் விட்டுடுங்க… அப்புறம் ஒரு அலமாரி இருக்கும்… முதல் ஷெல்பை விட்டுடுங்க… இரண்டாவதை விட்டுடுங்க… மூன்றாவதை விட்டுடுங்க! நாலாவதில் ஒரு பைபிள் புஸ்தகம் இருக்கும்!

”அந்த பைபிள்மீது சத்தியமாகச் சொல்லுகிறேன். எனக்குத் தெரியாது!”

இது typical student humour. சற்று extreme form என்று வைத்துக் கொண்டாலும் இழுத்துக் கொண்டு போகிற விதத்தில், என்ன சொல்ல வருகிறார் என்ற எதிர்பார்ப்பில் சிரிப்பு வருகிறது.

வாழ்க்கையில் நேரிடையாக எத்தனையோ பார்க்கிறோம். குட்டிப் புகைப்படம் மாதிரி நிறைய விஷயங்கள் பதிகின்றன. ஒரு நாள் சாலையோடு போகிற போது, சைக்கிள் ரிக்ஷாவில் பள்ளி நாடக வேஷத்துடன் மூன்று குழந்தைகள் வருவதைப் பார்த்தேன். வேடம் கலையாமலே இருந்தது. மூன்று குழந்தைகளுக்குமே பாரதியார் வேஷம்!

வீட்டில் ஜன்னல் வழியே பார்த்தபோது, மிக மிகச் சின்ன கைக் குழந்தை… பிறந்து மூன்று நாள்தான் ஆகியிருக்கும்… தகப்பனார், உரக்கக் குழந்தையை ”Keep quiet” என்று அதட்டுவது காதில் விழுந்தது. அந்தக் குழந்தைக்கு அழுகையைத் தவிர வேறு எந்த பாஷையும் தெரியாது! அதை ஆங்கிலத்தில் அதட்டும் அப்பாவின் பிம்பம் மனத்தில் பதிகிறதல்லவா?

சினிமா உலகில் எனக்கு அனுபவமுண்டு. ஹீரோ தனியாக உட்கார்ந்து இருப்பார். ”ஜெயலலிதா கைது”, ”நரசிம்மராவ் ராஜினாமா” போன்ற எந்த முக்கிய செய்தியும் அவரைப் பாதிக்காது. தனி உலகில் உலவிக் கொண்டிருப்பார். அவர் ‘Mood’ மாறிவிடக்கூடாது என்பதில் பலர் ஜாக்கிரதையாயிருப்பார்கள்… மேலும் சினிமா உலகத்துக்கென்று சில தனிச் சொல்லடைவுகள்… ”ஜெய்ப்பூரில் கட்டாயம் ஒரு ஸீன் தேவை”, ”ரெண்டு கானாப் பாட்டு….. ஒன்று இன்டர்வெல்லுக்கு முன்னாடி… இன்னொன்று பின்னாடி”, ”சண்டை காட்சியில் அவசியம் மழை வேணும்!” - இப்படியாகப் பலவித ‘மூட’ நம்பிக்கைகளையும் கவனித்து இருக்கிறேன்… கதைகளில் பயன்படுத்தியும் இருக்கிறேன்.

இறுதியாக ஓரிரு சொந்த அனுபவங்கள். நான் ஒரு நாய் வளர்த்து வந்தேன். கால்நடை மருத்துவரிடம் அதைக் கூட்டிக்கொண்டு போக நேர்ந்தது. அப்போது அந்த டாக்டருக்கு ஒரு ‘போன்’ வந்தது… அந்த உரையாடல்…

”என்னுடைய நாய் பேனாவை விழுங்கிவிட்டது….”

”சரி… நான் அங்கே வரேன் கொஞ்ச நேரத்திலே.”

”அதுவரை என்ன பண்ணுவது?”

”பென்சிலால் எழுதிட்டிருங்க!”

ஆரம்பத்தில் சொன்ன மாதிரி, தனித்தனியே வாக்கியங்களைப் படிக்கும்போது ஹாஸ்யம் இல்லை. இணைத்துப் பார்க்கும்போது நகைச்சுவை ஏற்படுகிறது.

நகைச்சுவை எழுத விரும்புகிறவர்களுக்கு முத்தாய்ப்பாக ஐந்தே யோசனைகள் - 1. நிறையப் படியுங்கள். கல்கி, தேவன், எஸ்.வி.வி. ஆங்கிலத்தில் பி.ஜி. வுட் ஹவுஸ் 2. இயல்பாக, ஓரளவு மிகைப்படுத்தி எழுதுங்கள். ஆனால் மிகைப்படுத்தலைக் குறைக்க முயலுங்கள். 3. நேரில் பார்த்ததை - நீங்கள் கண்ட இடங்கள், ஊர்கள் - அதன் தன்மையைச் சொந்த அனுபவத்துடன் கலந்து எழுதுங்கள் 4. இங்கு நிலவுகின்ற கட்டுப்பாடுகள் மிக்க சுதந்திரத்துக்கு உட்பட்டு எழுதுங்கள்- 5. அடிமட்ட, தரம் குறைந்த நகைச்சுவையை அடியோடு தவிர்க்கப் பாருங்கள்.

உங்கள் முயற்சி வெல்க!

எது காப்பாற்றியது?

, , ,

எது காப்பாற்றியது?

அடர்ந்த காட்டுப்பகுதி. மரத்தில் இருந்த இரண்டு
புறாக்களுக்கு, வேடன் ஒருவன் தன் வில்லில் அம்பை
ஏற்றிக் குறிபார்க்கத் துவங்கினான்.

அந்த இரண்டு புறாக்களில், பெண் புறா அதைக் கவனித்து
விட்டுத் தன் அருகிலிருந்த ஆண் புறாவை எச்சரித்தது.
அதோடு மட்டுமில்லாமல் வா பறந்து அருகில் உள்ள
வேறாவது பாதுகாப்பான மரத்திற்குப் பொய்விடலாம்
என்றும் சொன்னது..

உடனே, ஆண் புறா சொல்லிற்று, நாம் இப்போது எங்கே
யும் பறந்து செல்ல முடியாது, மேலே ஒரு கழுகு நமக்காக
வட்டமடித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லி
விட்டு, அந்த மரத்திலேயே சற்று நகர்ந்து இலைகளுக்குள்
மறைந்து உட்கார்ந்ததோடு, பெண் புறாவிற்கும்
தன் அருகில் இடமளித்து உட்காரவைத்தது!. அதோடு
பெண் புறாவிடம் 'கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்,
நம்பிக்கையோடு இரு' என்றும் சொன்னது.

புறாக்கள் இரண்டும் சட்டென்று இலைகளுக்குள் மறைந்து
விட்டதைக் கண்ட வேடன், பின்னால் ஐந்தாறடி நகர்ந்து
கொண்டே வந்து, கையில் உள்ள வில், அம்புடன்
அவற்றைத் தேடத்துவங்கினான்.

அப்போதுதான், அது நடந்தது!

அப்படிப் பின்புறமாக நடந்து கொண்டே வந்தவன், ஒரு
பாம்புப்புற்றின் அருகே தன்னையறியாமல் வரவும்,
அப்போதுதான் புற்றிலிருந்து வெளியே வந்த கொடிய
விஷப்பாம்பு ஒன்று அவனைத் தீண்டிவிட்டது.

அடுத்த வினாடி அவன் மரணத்தை நோக்கிப் பயணமான
தோடு, அலறிக் கொண்டே கீழே சாயயவும், அதே நேரம்
அவன் கை வில்லிலிருந்து வெளிப்ப்ட்ட அம்பு சீறிப்பாய்ந்த
தோடு, திசை மாறி, மேலே வட்டமிட்டுக்கொண்டிருந்த
கழுகின்மேல் பாய்ந்து தாக்க, அதுவும் அவனோடு சேர்ந்து
மரணத்தை நோக்கிப் பயனப்பட்டது!

கொடிய ஆபத்திலிருந்து!புறாக்கள் இரண்டும் தப்பித்து
விட்டன

அவற்றைக் காப்பாற்றியது எது?

இறைவன் மேல் அவை கொண்டிருந்த நம்பிக்கைத்தான்
அவைகளைக் காப்பாற்றியது!

(மூலம்:- http://classroom2007.blogspot.com)

ஒரு ஸென் கதை !

, , ,

பதிலா உயிரா?

ஒரு நாள் எல்லாராலும் உயர்வாக கொண்டாடப் பட்ட சா'ன் ஆசிரியர் ஷிஷைன் தன்னுடைய சீடர்களை சோதித்து பார்ப்பது என முடிவெடுத்து, "உண்மை வழியினை அடையத் தேடும் போது, ஒரு உயரமான மரத்தின் கிளையினைப் பல்லால் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிற மனிதனுக்கு சமமாவோம்" என்றவர், "கீழே சவகாசமாக அமர்ந்திருக்கும் மற்றொரு மனிதன், மேலேத் தொங்கிக் கொண்டிருக்கிறவனைப் பார்த்து, 'மேற்கிலிருந்து போதிதர்மா சைனாவிற்கு வந்ததன் காரணம் என்ன?' என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்வோம் அப்பொழுது மேலேயிருப்பவன் பதில் சொல்லவில்லையென்றால் முட்டாளாக கருதப் படுவான். ஆனால் வாயைத் திறந்தாலோ எமனுக்கு இரையாகிவிடுவான். சொல்லுங்கள், இதிலிருந்து தப்பிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார்.

அங்கிருந்த சீடர்களில் ஒருவனது பெயர் ஹு டோ சாவோ, அவன் எழுந்து நின்று, "எங்களுக்கு அந்த மனிதன் உயரமான மரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைப் பற்றியக் கவலையில்லை. எங்களுக்குத் தேவையானதெல்லாம் யார் அவன், மரத்தின் மேலே ஏறுவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தான்?" என்று பதிலுக்கு ஆசிரியரைப் பார்த்துக் கேள்வி கேட்டான்.

அவன் கூறியதைக் கேட்ட ஷிஷைன் அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினார். சீடனின் பதிலில் திருப்தி அடைந்தவரானார்.

நதியினைக் குடி

ஒரு சமயம் பா'ன் யூன் என்ற துறவி, சா'ன் ஆசிரியர் ஷிடோவை முதன் முதலில் சந்தித்த போது, "எல்லா தர்மங்களின் துணையினையும் உதறித் தள்ளிய மனிதர்கள் எப்படிப் பட்ட மனிதர்களாக இருக்க முடியும்?" என்று கேட்டான். கேட்டவனின் வாயை அப்படியே தனது கைகளால் பொத்தினார் ஷிடோ. துறவியால் சா'ன் ஆசிரியரின் செய்கையை புரிந்து கொள்ள முடியவில்லை.

மதிப்புக்குரிய குரு மாசூவிடம் சென்று தன்னுடைய கேள்வியினைக் கேட்பதென முடிவெடுத்து, அதேக் கேள்வியைத் திருப்பிக் கேட்டான்.

"நீ ஷிஷியாங் ஆற்றின் தண்ணிரினை ஒரே மிடக்கில் குடித்துக் காட்டினால்தான், நான் உன்னுடையக் கேள்விக்கு பதில் அளிக்க முடியும்" என்ற பதிலே கிடைத்தது.

அதனைக் கேட்ட பா'ன் யூன் தன்னுடைய அறியாமை நீங்கி தன்னொளி பெற்றான்.

(மூலம்:- http://zendaily.blogspot.com/)

எழுதுவது ஏன் ?

, ,

இத்தாலிய யூத எழுத்தாளரான பிரைமோ லெவி (primo levi) நாஜிகளின் சித்ரவதைக்கு உள்ளான எழுத்தாளர். ஆஸ்விட்ஸ் முகாமில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட அவர் தனது வேதியல் அறிவின் காரணமாக நாஜிமுகாமில் சாவிலிருந்து தப்பினார். வேதியல் பேராசிரியரான அவர் குறிப்பிடத்தக்க நாவல்களையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவரது கட்டுரைகளில் மிகவும் பிரசித்திபெற்றது எழுதுவது ஏன் என்ற கேள்விக்கு லெவி தந்த பதில்.

எழுதுவதற்கு ஒன்பது காரணங்கள் இருக்ககூடும் என்று வரையறுக்கும் பிரைமோ லெவி அதைப்பற்றி விரிவாக விளக்குகிறார்

1) எழுதுவதற்கான அவசியத்தையும் உந்துதலையும் உணர்வதால்.

தனக்குள்ளிருந்து தன்னை யாரோ எழுதும்படியாக வற்புறுத்துவது போல ஒருவன் அடையும் நிலையில் தான் இந்த வகை எழுத்து உருவாகிறது. மிதமிஞ்சிய வேதனையை. தனிமையை பகிர்ந்து கொள்வதற்கு யாருமற்ற நிலையில் கதையோ, கவிதையோ எழுதுவது உருவாகிறது. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் இந்த வகையில் தான் துவங்குகிறார்கள்.

2) தன்னையும் மற்றவர்களையும் மகிழ்விக்க.

மிகச்சிறந்த இலக்கியவாதிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்ல. வாழ்வின் ஞானமும், சரளத்தன்மையும், அன்பையும் வெளிப்படுத்தவே அவர்கள் எழுதுகிறார்கள். தங்களது அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு சந்தோஷமாக முன்வருகிறார்கள். வாசிப்பவனும் எழுத்தாளனைப் போலவே அந்த அனுபவத்தை துய்த்து உணருகிறான். உதாரணத்திற்கு லு¡யி கரோல் எழுதிய ஆலிஸின் அற்புத உலகம் அவரை சந்தோஷப்படுத்தியதோடு நு¡ற்றாண்டுகளாக குழந்தைகளை, பெரியவர்களைச் சந்தோஷப்படுத்திவருகிறது. இந்த வகை எழுத்து எதையும் போதிப்பதோ, கட்டாயப்படுத்துவதோ இல்லை.

3) யாருக்காவது எதையாவது கற்றுக் கொடுக்க

விற்பன்னர்களும், அறிஞர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் வாசகனை தங்களை விடவும் அறிவில் குறைந்தவன் என்ற கருத்தில் தான் எழுதுகிறார்கள். அது சமையற்கலையாக இருந்தாலும் அணுவிஞ்ஞானமாக இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்.

இந்த வகை எழுத்தில் எழுத்தாளனின் விருப்பம் நிறைவேறுவது அவனது அறிவின் திறன் அளவில் தான் சாத்தியமாகிறது. பலநேரங்களில் அதுவே படிக்கமுடியாமலும் செய்துவிடுகிறது. எளிமையும், ஆழ்ந்த அறிவும், விளக்கி சொல்லும் திறன்மிக்க மொழியும் ஒன்று சேர்ந்து எழுத்து உருவானால் அப்போது வாசகன் கற்றுக்கொள்வதோடு நல்ல கலைப்படைப்பை வாசித்த அனுபவத்தையும் பெறுகிறான்.

4) தன் கருத்துக்களை தெரியப்படுத்த

இந்த வகை எழுத்தாளர்கள் தாங்கள் தனித்துவமானவர்கள், ஞானம்பெற்றவர்கள், அதிக அறிவுதிறன் கொண்டவர்கள் என்று தங்களை நம்பக் கூடியவர்கள். உலகில் தங்களுக்கு மட்டுமே சில அரிய கருத்துகள் மனதில் உதயமாகியுள்ளதாக நம்புகிறவர்கள். தத்துவத்திலும் அரசியலிலும் விருப்பம் கொண்டவர்களே இந்தவகை எழுத்தில் அதிகம். இந்த வகை எழுத்தில் ஒரிஜினாலிடி மிக அரிதாகவேயிருக்கிறது.

5) வேதனையிலிருந்து விடுதலை அடைய

பிரச்சனைகளை நேரிடையாக சந்திக்க முடியாமலும், ஆறுதல் தேடுவதற்கு வழியற்றும், எழுதுவது ஒரு பாவமன்னிப்பு கோருதல் போல என நம்புகிறவர்களே இந்த வகை எழுத்தாளர்கள். ஆனால் எழுத்தாளனின் வேதனைகளை வாசகனின் மீது திணிப்பதும் பலநேரங்களில் தவறானதாகிவிடுகிறது. அது தானும் விடுதலை அடையமுடியாமல் வாசிப்பவனையும் நரகத்தில் தள்ளிவிடும்

6) புகழ்பெற
ஒரு பைத்தியக்காரன் தான் புகழ்பெறுவதற்கென்றே எழுத முயற்சிப்பான். காரணம் எழுதிப் புகழ்பெறுவது எளிதான காரியமில்லை. எல்லா எழுத்தாளர்களுக்கும் மனதில் தனக்குப் பெரிய புகழ் கிடைக்கவேண்டும் என்ற ஆசையிருக்கதான் செய்கிறது . ஆனால் அதற்காக யாராவது எழுதத் துவங்கினால் அந்த எழுத்து நிச்சயமற்ற பலனைத் தான் உருவாக்கும்

7) பணக்காரன் ஆக

சம்பாதிக்க, கடனை அடைக்க, வசதியாக வாழ என பலகாரணங்களுக்காக எழுதுபவர்கள் பலரிருக்கிறார்கள். உபயோகமான எந்த விஷயத்திற்கும் வழங்கபடுவது போல தான் எழுத்திற்கும் சன்மானம் வழங்கப்படுகிறது. ஆனால் பணத்துக்காக மட்டும் எழுதுவது ஆபத்தானது. அது மலிவான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும்

8) உலகை செம்மைபடுத்த

இந்தவகை எழுத்தாளர்கள் உலகம் தங்களால் தான் காப்பாற்றப் படப் போகிறது என்று நம்புகிறவர்கள். மேலும் உலகைப் பற்றி தங்களுக்கு முழுமையாகத் தெரியும் என்று நம்புகிறவர்கள்.ஹிட்லர் மெயின்கேம்ப் எழுதியது கூட இந்த வகை ஈடுபாட்டில் உருவானது தான்.

9) பழக்கத்தின் காரணமாக.

இது தன்னைத் தானே காப்பிசெய்து கொள்வது போன்ற எழுத்து ரகம். தன்பெயரைத் தொடர்ந்து அச்சில் பார்ப்பது ஒரு நோக்கமாக இருக்க கூடும். மற்றவகையில் வெறுமனே பழக்கம் காரணமாக மட்டும் ஒருவர் தொடர்ந்து எழுதுவதை விடவும் மெளனமாக எதையும் எழுதாமலிருப்பது அவருக்கும் நல்லது, வாசகர்களுக்கும் நல்லது. .

லெவியை வாசித்த போது தமிழில் இந்த ஒன்பது வகைக்கும் அப்பாலும் நிறைய பிரிவுகள் இருப்பதை உணரமுடிகிறது. எனக்குத் தெரிந்த சில காரணங்கள்

1) அடுத்தவர் எழுதுகிறாரே என்று எழுதுவது.

அநேகமாக எனக்கு தெரிந்த பலரும் சொன்ன முதல்காரணம் இது தான். அதைப் பொறாமை என்று மட்டும் முடிவுசெய்து கொண்டுவிட முடியாது. நு¡ற்றுக்கும் மேற்பட்ட நுட்பமான காரணங்களிருக்கின்றன. சில புத்தகங்களை வாசித்து முடித்தவுடன் எழுதுவது என்றால் இவ்வளவுதானா? இது என்ன மாயவித்தையா என தோன்றுவதும் காரணமாகயிருக்கலாம்

2) பெண்நண்பர்கள் பெறுவதற்கு

இருபது வயதில் அதிகமாக எழுதும் ஆசை வருவதற்கு இதுவே முக்கிய காரணம். ஆனால் இந்த வகை எழுத்தாளர்களை பெண்கள் ஏறிட்டுக் கூடப் பார்ப்பதில்லை என்பது நிதர்சனம்

3)அலுவலக ஊழியர்களிடம் தனித்து காட்ட, பாராட்டு பெற

தனது அலுவலகத்தில் உள்ள மேலதிகரிகள் பாராட்டு பெறுவதற்கும், தான் அறிவுஜீவி என்று தனித்து காட்டுவதற்கும் எழுதும் கூட்டம் நிறைய இருக்கிறது. அவர்கள் யாராவது ஒய்வு பெறும் நாளில் கவிதை எழுதி அதை பரிசாக தந்து அனுப்பிவிடக்கூடியவர்கள்.

4) பதவி உயர்விற்காக எழுதுவது.

பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள் மற்றும் துறைவல்லுனர்கள் தங்களது பதவி உயர்விற்காக எழுதுகிறார்கள். நு¡லகத்தில் பாதி இந்த வகை எழுத்துகள் தான்.கையில் பேனாவும் சிந்தனையுமாக புகைப்படம் எடுத்துக் கொள்வது அவர்களின் தனித்துவம்.

5) சினிமாவிற்குள் நுழைவதற்கு

சினிமாவிற்குள் நுழைவதற்கு விசிட்டிங் கார்டு போல பயன்படுவதற்கு கவிதைத் தொகுப்புகள் வெளியிடுதல் அல்லது சிறுகதைகள் எழுதுதல் அதிகம்.. சென்னையில், கர்சீப் வைத்திருப்பது போல பாக்கெட்டில் கவிதை நோட்டுவைத்திருப்பவர்களை கோடம்பாக்கத்தில் எங்கே வேண்டுமானாலும் பார்க்கலாம்

6) சென்னைக்கு ஒடிவந்தபிறகு வாழ்வதற்கு என்ன செய்ய என்று எழுதுவது.

ஏதோவொரு காரணத்தால் சென்னைக்கு ஒடிவந்த பிறகு பிழைப்பிற்காக பத்திரிக்கைகளிலோ, பதிப்பகங்களுக்கோ எதையாவது எழுதி தருவது. முப்பது நாட்களில் நீச்சல் கற்றுத்தருவது, சைனீஸ் சமையற்கலை, ஆவியுலகம் ஒரு நேரடி அனுபவம் என ஏதாவது ஒரு தலைப்பில் 250 பக்க புத்தகம் எழுதி தருவதற்கு 175 ரூபாய் தருகிறார் தாராளமனதுடைய தமிழ்பதிப்பகத்தார்.

7) ஒய்வு பெற்ற பிறகு ஏதாவது செய்யவேண்டுமென என்று

ஒய்வு பெற்றபிறகு தமிழ் மொழி மீதும், தமிழ் மக்கள் மீதும் அளவுகடந்த ஆர்வம் உருவாகி அவர்களுக்கு சேவை செய்வதற்காக திருக்குறள், சங்கஇலக்கியம் துவங்கி எதையாவது பற்றி எழுதுவது. அதை தானே தனது பேத்தி பேரன் பெயரில் பதிப்பகம் துவங்கி வெளியிட்டு தன்வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு தவறாமல் தருவது. சுதந்திர தினத்தன்று காலனியில் சொற்பொழிவு ஆற்றுவது இந்த ரகம்

8) பிரபலமானதை உறுதி செய்து கொள்வதற்கு எழுதுவது

தான் ஏதாவது ஒரு துறையில் பிரபலமாகிவிட்டால் அந்த பிரபலத்தின் காரணமாக மற்றவர்களுக்கு தனது அரிய சிந்தனைகளை, அறிவுதுளிகளை, கற்பனையை பகிர்ந்து கொள்வது. இந்த வியாதி அரசியல்வாதிகளுக்கு அதிகம். அது போலவே பிரபலமான வணிகநிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் பிரபல்யத்தை புத்தகம் எழுதிதான் வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். பிரபலமான ஒரு ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் எழுதிய திருக்குறள் உரை அங்கு வாங்கும் அல்வா மைசூர்பாகு மிக்சர் எது கால்கிலோ வாங்கினாலும் இலவசமாகத் தரப்படுகிறது. ஆன்மீகத்தில் நீங்கள் பிரபலமாகி விட்டால் புத்தகம் எழுதி அண்ணாநகரில் பிளாட்பிளாட்டாக வாங்கிப் போட்டுவிடலாம் என்று பஞ்சபட்சி ஜோதிடம் சொல்கிறது.

9) வீட்டில் பகலில் சும்மா இருப்பதால்

பெரும்பான்மை குடும்பதலைவிகள் எழுத்தாளராவது இந்த காரணத்தால் தான். கூடை பின்னுவது தோட்டம் போடுவது, அலங்கார பொருட்கள் செய்வது போலவே கவிதை செய்வது கதைகள் செய்வது என்று தங்கள் நேரத்தை பயனுள்ளதாக கழிக்கிறார்கள்.

10) எதற்கு என்றே தெரியாமலிருப்பது

தான் எதற்கு எழுதுகிறோம் என்றே தெரியாமலிருப்பவர்கள் தமிழில் ஏராளம். அது போன்ற ஒரு கேள்விளை சந்திக்கும் போது தான் இப்படியொரு கேள்வி இருப்பதே அவர்களுக்கு தெரியவரும். வாசகர்களை போலவே எழுத்தாளரும் பதிலை தேடிக்கொண்டே தானிருக்கிறார்கள்.

இது போல இன்னமும் பலநு¡று காரணங்களிருக்க கூடும். விருப்பமிருந்தால் தெரியப்படுத்துங்களேன்

Download Opera, the fastest and most secure browser
December 2009
S M T W T F S
November 2009January 2010
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31