கருணை கொலை: உலக நாடுகள் போல இந்தியாவிலும் புதிய பாதை
Tuesday, March 8, 2011 10:04:55 AM
புதுடில்லி: "குணப்படுத்த இயலாத வகையில், நோய்வாய்ப்பட்டிக்கும் ஒருவரை, மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வாழச் செய்வதை தவிர்த்து, அவரது உயிர் போகச் செய்வதை, அசாதாரணமான சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கலாம்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளதன் மூலம், சில வகையான கருணைக் கொலைகளை சட்ட ரீதியாக அங்கீகரித்துள்ள நாடுகள் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. கருணைக் கொலை (ஆக்டிவ் யுதான்சியா) என்பது, ஒருவரை, விஷ ஊசி போட்டோ அல்லது வேறு முறைகளிலோ, டாக்டர்கள் முன்னிலையில் உடனடியாக சாக அனுமதிப்பதாகும். அதேநேரத்தில், கருணைக் கொலையின் அடுத்த கட்டமான, "பேசிவ் யுதான்சியா' என்பது, மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் ஒருவரை உயிர் வாழச் செய்வதை தவிர்த்து, அவரது உயிரை, சிறிது நேரத்தில் அகற்றுவதாகும். அதாவது, நோயாளி மரணமடைய வேண்டும் என்பதற்காகவே, அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையை வாபஸ் பெறுவது. உதாரணமாக, ஒருவர் உயிர் வாழ சிறுநீரக டயாலிசிஸ் அவசியம் எனில், அதை செய்யாமல், டயாலிசிஸ் இயந்திரத்துடனான இணைப்பை துண்டித்து, நோயாளியை சாக விடுவதாகும். அதே போல செயற்கை சுவாசக் கருவி இணைப்பை துண்டிப்பதும் மற்றொரு வகை. இதை, "பேசிவ் யுதான்சியா' எனலாம். உயிர்க்காக்கும் மருத்துவ உபகரணங்களின் இணைப்பைத் துண்டித்து, ஒருவரை சாக விடுவது என்பது, பல நாடுகளில் கிரிமினல் குற்றமாக கருதப்படுவதில்லை. மாறாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. நோயாளியின் ஒப்புதலுடன், இந்த முறையில் அவரை கொல்வது, "தானாக முன்வந்து ஏற்றுக் கொள்ளும் கருணைக் கொலை' என, பெல்சியம், லக்சம்பெர்க், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவின் ஓரேகான் மற்றும் வாஷிங்டன் மாகாணங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது மற்றும் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. ஒரு நோயாளி தன் மரணத்தை டாக்டரின் உதவியுடன் தானே தேடிக் கொண்டால், அது, "ஆதரவு தற்கொலை' என, விவரிக்கப்படுகிறது. தான் மரணம் அடைய விரும்புவதை தெரிவிக்க இயலாத நிலையில் நோயாளி இருந்து, உயிர்க்காக்கும் மருத்துவ உபகரணங்களின் இணைப்பை துண்டித்து அவரை சாகவிட்டால், அது மற்றவர்களின் யோசனையின் பேரில் செய்யப்படும் கருணைக் கொலையாகும். ஒரு குடும்பத்தில் மூன்று அல்லது நான்கு உறுப்பினர்கள் அனுமதி கொடுத்தால், இதுபோன்ற கருணைக் கொலையை செய்யலாம் என, அல்பேனியா சட்டம் தெரிவிக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் சுயநல நோக்கத்தோடு, "ஆதரவு தற்கொலைகளை' மேற்கொண்டால், அது தண்டிக்கப்படக்கூடிய குற்றம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷ ஊசி போட்டோ அல்லது மற்ற முறைகளிலோ, டாக்டர்கள் முன்னிலையில் ஒருவரை சாக அனுமதிப்பது (ஆக்டிவ் யுதான்சியா) சட்ட விரோதம் என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் இணைப்பை துண்டித்து, ஒருவரின் உயிர் போக அனுமதிப்பதை, அசாதாரணமான சூழ்நிலைகளில் மட்டுமே அமல்படுத்தலாம் என, நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், இந்த இரண்டு விதமான கருணைக் கொலைகள் தொடர்பாக, பார்லிமென்டில் சட்டம் நிறைவேற்றப்படும் வரை, இந்தத் தீர்ப்பு அமலில் இருக்கும் என்றும் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். டாக்டர்கள் கூறுவது என்ன? இந்த தீர்ப்பு, டாக்டர்கள் நடுவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கருணைக் கொலை வேண்டாம் எனக் கூறிய கருத்தை வரவேற்றனர். பெங்களூரு இதயநோய் நிபுணர் ஷெட்டி கூறியதாவது: கருணைக் கொலையை சாதகமாகப் பயன்படுத்தும் போக்கைத் தடுக்கும். கருணைக் கொலை என்பது, உணர்வுப்பூர்வ விஷயம். "கருணைக் கொலை' என்றழைப்பதில், "கருணை' வார்த்தை அளவில் இருக்கிறது. அதுவும் கொலை தான். இந்த விஷயத்தை அணுகுவதற்கு நாட்டில் இன்னமும் பக்குவம் வரவில்லை. மருத்துவ ரீதியாக ஒரு உயிரைக் காப்பாற்றும் முயற்சி என்ற பெயரில், கருக்கலைப்பு நடத்தப்படுகிறது. மருத்துவ உலகில் இதை, "எம்.டி.பி' என்கின்றனர். அதே போல, கருணைக் கொலைக்கும் அனுமதி வந்தால், அதற்கேற்ப வளைத்து சாதகமாக்கிக் கொள்வர். அப்படியே சட்டம் வந்தாலும், ஐகோர்ட் மேற்பார்வையில், உரிய நடைமுறைகளுடன் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு ஷெட்டி கூறினார். இதே கருத்தை, பல்வேறு முன்னணி டாக்டர்களும் தெரிவித்தனர்.
Regards,
Jaffer Ali





















